
ஒரு ரோந்து ஜீப். அதை ஓட்டும் டிரைவர் (ரோஷன் மேத்யூ) அவருடன் பயணிக்கும் ஒரு மூத்த காவல் அதிகாரி (திலீஷ் போத்தன்). ஓர் இரவு நேர ரோந்துப் பணியில் அவர்கள் சந்திக்கும் மனிதர்களும், விளைவுகளும் தான் 'ரோந்து'.
இப்படியொரு பின்னணியில் ஒரு கதை அமைப்பதில் மலையாளத் திரையுலகினர் தேர்ந்தவர்கள். அதுவும் படத்தின் கதையை எழுதியவர் ஒரு முன்னாள் காவல் அதிகாரி. கேட்கவேண்டுமா. அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அணுகுமுறைகள், மேலதிகாரிகளின் கெடுபிடிகள் எல்லாம் கச்சிதமாக அமர்கிறது கதையோட்டத்தில்.
வசதியான குடும்பத்திலிருந்து ஒரு பெண் காணாமல் போகிறாள். வேறொரு வகுப்பைச் சேர்ந்தவனுடன் அவள் ஓடிப்போய்விட்டாள் என்று அவனைப் போட்டுத் தள்ள வெறியுடன் திரியும் அந்தக் குடும்பம். குழந்தையை அடைத்து வைத்திருக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்த தந்தை, மனக்கசப்பால் தற்கொலை செய்துகொள்ளும் பெண் என இவர்கள் அந்த ஓர் இரவில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவர்கள் உறுதியைக் குலைக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.
சற்றே பயந்த புதிய காவல்துறை டிரைவராக ரோஷன், திலீஷ் போத்தன் இருவரும் கச்சிதம். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையில் முட்டிக் கொண்டாலும் அந்தப் பயணத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். அவரைச் சீண்டிக் கொண்டே கற்றுக்கொடுக்கும் பாத்திரத்தில் திலீஷ் அனாயாசமாக நடிக்கிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இருக்கும் உறவைப் பற்றி மற்றவர்கள் எப்படி நினைக்கிறார்கள்; உண்மை என்ன என்று உடைந்து சொல்லும் காட்சி ஒன்று போதும் அவர் திறமைக்கு.
வசதி படைத்தவர்களின் பின்னணி எப்படிக் காவல்துறைக்குள் உள்விளையாட்டு நடக்க ஏதுவாகிறது, மேலதிகாரிகள் நினைத்தால் எப்படிச் சட்டத்தை வளைக்கலாம் என்பதையும் போகிற போக்கில் காட்டுகிறார்கள். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளைக் காவலர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட இழப்பு எப்படி சில தடுமாற்றங்களை அவர்களுக்குள் கொண்டு வருகிறது என்பதையெல்லாம் காட்சிப் படுத்திய விதம் நன்று. ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் தந்தை அதனால் உண்டான மன அழுத்தம் எல்லாம் ரோஷன் எவ்வளவு பயந்தவர் என்பதைக் காட்டவே பயன்பட்டிருக்கிறது. இறுதிக்காட்சியில் அவர் நடந்து கொள்ளும் விதமும் சுத்தமாக ஒட்டவில்லை.
பெரும்பாலும் பிளாஷ் பாக்கில் விரியும் கதை நிகழ்காலத்திற்கு வந்ததும் திசை மாறுகிறது. படத்தின் அந்த இறுக்கத்தை மேலும் உறுதிப்படுத்த இவர்கள் கொடுத்த உச்சக்கட்ட ட்விஸ்ட் எதிர்பார்த்த அழுத்தத்தைத் தரவில்லை. மேலும் படம் முடிவடையாமல் அந்தரத்தில் நிற்கும் உணர்வையே தருகிறது. காவல் அதிகாரிகள் சட்டென்று மனம் மாறி வில்லன்களாக மாறுவதும் ஒட்டவில்லை.
ஒரு சின்னக் கரு. அதைப் பல சம்பவங்களால் பின்னி ஓர் உணர்வுப்பூர்வமான க்ரைம் த்ரில்லராகத் தர நினைத்துப் பாடு பட்டிருக்கிறது இந்த அணி. அதில் ஓரளவு வெற்றி பெற்றாலும் முன்னர் சொன்னது போலக் கிளைமாக்ஸ் இன்னும் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கலாம். அப்படி அமைந்திருந்தால் பரபர வென்று செல்லும் படம் ஆரவாரமாக முடிந்திருக்கும்.
இருந்தும் ஒரு சாயங்கால வேளையில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுது போகப் பார்க்கும் வகையில் தான் இருக்கிறது ரோந்து. ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்பொழுது மலையாளம் தமிழ் உள்படப் பல மொழிகளில் ஒளிபரப்பாகிறது.