
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு முக்கிய காரணம் அன்று தான் புதுப்புது படங்களில் திரையரங்களில் வெளியாகும். அத்துடன் இன்று மிலாடி நபி அரசு விடுமுறை. அதனை தொடர்ந்து சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் 3 நாட்கள் விடுமுறையை கணக்கில் கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்த இன்று (செப்டம்பர் 5ந் தேதி) 4 படங்கள் களத்தில் இறங்கும் நிலையில் அந்த படங்களின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
‘மதராஸி’
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன் முதலாக நடித்துள்ள திரைப்படம் 'மதராஸி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை என்.சிறீலட்சுமி பிரசாத் தயாரித்துள்ளார். இந்த படம் டிக்கெட் முன்பதிவில் இதுவரை ரூ.3.8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அமரனின் சாதனையை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
'காட்டி'
ராஜீவ் ரெட்டி, வம்சி பிரமோத் ஆகியோர் தயாரிப்பில், அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'காட்டி'. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஜெகபதி பாபு, சைதன்ய ராவ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘பேட் கேர்ள்’
வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் வர்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மி ரெட்டி பல்லி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையையும், ஏகப்பட்ட விமர்சங்களையும் ஏற்படுத்திய நிலையில், இன்று வெளியாகும் இந்த படத்திற்கு எந்தளவு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
‘காந்தி கண்ணாடி’
மக்களின் மனதை வென்ற விஜய் டிவி புகழ் பாலா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் 'காந்தி கண்ணாடி'. ஷெரிஃப் இயக்கத்தில் பாலாவுக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடிக்க இவர்களுடன் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன் எனப் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். சின்னத்திரையில் வெற்றிக் கொடியை நாட்டிய பாலாவுக்கு இந்த படம் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.