
54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவானது ஜனவரி 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘பேட் கேர்ள்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFR) மதிப்புமிக்க NETPAC விருதை வென்றுள்ளது.
ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து வரக்கூடிய திரைப்படங்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரின் முதல் மற்றும் இரண்டாவது படைப்பு மட்டும்தான் இந்த பிரிவின் கீழ் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் அறிமுக இயக்குநரான வர்ஷா பரத்தின் 'பேட் கேர்ள்' படத்திற்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. 2019-ல் அருண் கார்த்திக்கின் 'நசீர்' இந்தப் பெருமையைப் பெற்ற கடைசி தமிழ்த் திரைப்படமாகும்.
காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் வெற்றி மாறன். தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, அனுராக் காஷ்யப்புடன் இணைந்து, அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் 'பேட் கேர்ள்'. இந்த படத்தின் டிரெய்லர் ஜனவரி 26-ம்தேதி வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
இந்த டீசரில் ரம்யா என்ற கதாபாத்திரம், ஆண் நண்பனைத் தேடி அலைவது, பள்ளியில் தவறு செய்து மாட்டிக் கொள்வது, பெற்றோரின் கண்டிப்பை எதிர்ப்பது, குடிப்பது, புகைப் பிடிப்பது, பல ஆண்களுடன் உறவில் இருப்பது எனக் காட்சிகள் வரிசை கட்டுகின்றன. ஒரு பக்கம் இந்த படத்தின் டிரெய்லர் யாரும் எதிர்பார்க்காத அதிரடியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் மிகவும் வலுவான விவாதத்தை எழுப்பின.
இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகளையும் காதல் தேர்வுகளையும் மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் போராட்டங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை துணிச்சலாக எதிர்க்கொண்டதை சிலர் பாராட்டினாலும், மற்றவர்கள் ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரித்ததை விமர்சித்தனர். குறிப்பிடத்தக்க கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட சில சமூக ஊடக பயனர்கள் தயாரிப்பாளர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித் படத்தைப் பாராட்டி, கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி ட்வீட் செய்திருந்தார், ‘அதில் ‘பேட் கேர்ள்’ உண்மையிலேயே தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படம்! இப்படிப்பட்ட துணிச்சலான கதையை ஆதரித்ததற்காக இயக்குனர் வெற்றிமாறன் மகத்தான பெருமைக்கு உரியவர். மேலும் அஞ்சலி சிவராமன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார், இதைத் தவறவிடாதீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ருது ஹாரூன், டீஜெய்அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி ஆகியோர் நடித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஸ் ரவி மற்றும் பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, அமித் திரிவேதியின் இசையில், ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இதன் விருது மற்றும் சர்ச்சையைத் தூண்டும் விவாதங்கள் மூலம், பேட் கேர்ள் இந்த ஆண்டின் அதிகம் பேசப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.