விமர்சனம்: மத கஜ ராஜா - விஷால் 'மீண்டும் வந்திருக்கிறாரா? அல்லது மீண்டு வந்துருக்கிறாரா?'
ரேட்டிங்(3 / 5)
சுந்தர். C சார் உங்க பேவரிட் காமெடியை இது போல பார்த்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லும் அளவிற்கு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக வந்துள்ளது மத கஜ ராஜா.
விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி நடித்துள்ள இந்த படம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2013 பொங்கல் தினத்தில் வெளியாக வேண்டியது. கொஞ்சம் லேட்டாக 2025 ஆம் ஆண்டு இந்த பொங்கல் சமயத்தில் வெளியாகி உள்ளது. இது பழைய படமாக இருக்கிறதா அல்லது இந்த 2025 ஆம் ஆண்டும் பார்க்கும் படி உள்ளதா என இங்கே பார்க்கலாம்.
சுந்தர். C படம் என்றால் கதை, லாஜிக் பத்தி எல்லாம் யோசிக்க கூடாது என்று எழுதப்படாத விதி இருந்தாலும், இந்த விதியை பிரேக் செய்து என்னதான் சொல்லி இருக்காரு சுந்தர் அண்ணன் என்பதை பார்த்து விடலாம்.
ஊரில் வேலை வெட்டி எதுக்கும் போகாமல் ஜாலியாக இருப்பவர் விஷால். காதலுக்கு தோள் கொடுப்பவர். இவரது நண்பர்களை ஒரு திருமணத்தில் சந்திக்கிறார். நண்பர்கள் ஒரு பிரச்சினையில் இருக்கிறார்கள். நண்பர்களின் பிரச்சனைக்கு காரணம் சென்னையில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளி என்று தெரிந்து கொண்டு அந்த புள்ளியை சென்று சந்தித்து நியாயம் கேட்கிறார். அந்த புள்ளி அநியாயமாக நடந்து கொள்கிறார். விஷால் தனது நண்பர்களுக்கு எப்படி நியாயத்தை பெற்று தருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி முடிந்த பின்பு தான் கதை தொடங்குகிறது. முதல் பாதியில் சந்தானத்தின் கவுன்டர் காமெடி படத்தை நகர்த்திச் செல்கிறது. இரண்டாவது பாதியில் மறைந்த நடிகர் மனோ பாலாவின் உடல் மொழி வழியிலான நகைச்சுவை பெரிய பிளஸ் ஆக படத்தில் அமைந்திருக்கிறது. மனோ பாலாவின் நடிப்பை பார்க்கும் போது தமிழ் சினிமா நல்ல நகைச்சுவை நடிகரை இழந்து விட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. சிக்ஸ் பேக் உடம்புடன் இளமையுடன் அடிதடி காட்சியில் விஷாலை பார்க்கும் போது எப்படி இருந்த விஷால் இப்போது இருக்கும் நிலையை பார்த்து வருத்தம் ஏற்படுகிறது. இதுவும் கடந்து போகும் என்பதை போல் மத கஜ ராஜா திரைப்படம் விஷாலுக்கு திருப்பு முனையாக அமைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வாழ்த்துவோம்.
சுந்தர். C படத்தின் ஹீரோயின்களுக்கு கிளாமராக நடிப்பதும், ஹீரோவை துரத்தி, துரத்தி காதலிப்பதையும் தவிர வேறு வேலை இல்லை என்பதை புரிந்து கொண்ட அஞ்சலியும், வரலக்ஷ்மியும் இந்த இரண்டை மட்டும் சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆன்டனியின் இசை பாடல் காட்சிகளுக்கு தாளம் போட வைக்கிறது.
ஒரு சில இரட்டை அர்த்த வசனங்களையும், தேவையற்ற கிளாமர் காட்சிகளையும் தவித்திருந்தால் இந்த மத கஜ ராஜா, மகாராஜா போல் வந்திருப்பான். இருந்தாலும் விஷால் மீண்டு வர இந்த படம் ஒரு நல் வாய்ப்பாக அமையும் என உறுதியாக சொல்லலாம்.