
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ஒரு பெரிய பாராட்டு. இயக்குனர் ஷங்கரின் படங்களின் கதைகளையே பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு கதையைச் சொல்லிப் புதிது என நம்ப வைத்தார் எடுக்க வைத்தார் பாருங்கள் அதற்குத் தான் இது. இதில் கரை கண்ட ஷங்கரின் சிஷ்யன் அட்லியையே மிஞ்சி விட்டார். படம் பார்க்கும் போது அந்நியன், முதல்வன், சிவாஜி, இந்தியன் எனப் பல படங்கள் நினைவுக்கு வந்து போவதற்குக் காரணம் கேம் சேஞ்சர் இது போன்ற பல படங்களின் அவியல் தான். அவ்வளவு ஏன் காதலன் படத்தில் வரும் முக்காபுலா படத்தின் ஒரு நடன அசைவு கூட இதில் வருகிறது. அந்த அளவு படத்தில் கற்பனை வறட்சி தலை விரித்தாடுகிறது.
ஸ்ரீகாந்த் ஒரு அரசியல்வாதி. அவருக்கு இரண்டு மகன்கள் ஜெயராம், எஸ்.ஜே சூர்யா. இருவரும் மாநில முதல்வரான தந்தையின் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். அந்த ஊருக்குக் கலெக்டராக வருகிறார் ராம் சரண். இவருக்கும் இவர்களுக்கும் ஒரு கட்டத்தில் முட்டிக் கொள்கிறது. மாற்றி மாற்றிக் குடைச்சல் கொடுத்துக் கொள்கிறார்கள். இடையில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் இவர் அழைத்து வரும் அஞ்சலியைப் பார்க்கும் ஸ்ரீகாந்த் திடீரென்று மனம் மாறுகிறார். வருகிறது ஒரு ப்ளாஷ் பேக். அதில் இன்னொரு ராம் சரண். அஞ்சலியின் கணவர். அவர்களுக்கு ஒரு மகன். நாட்டுக்காகப் போராடும் சற்றே திக்கிப் பேசும் ஒரு பாத்திரம். அவரிடம் இருந்தவர்கள் தான் ஸ்ரீகாந்தும் சமுத்திரக்கனியும். அவருக்கு என்ன ஆனது. கலெக்டர் ராம் சரண் உண்மையில் யார். இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
முதல் ஆச்சரியம் இதை ஷங்கர் தான் இயக்கினார் என்பதை நம்புவது. பிரம்மாண்டமான பாடல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் மட்டும் போதுமென்று நினைப்பதை இவர் இன்னும் விடவில்லை. இந்தியன் 2 வின் தோல்வியால் இவர் கற்றுக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் இரண்டு படங்களையும் சேர்ந்து தான் இயக்கி வந்தார். அதனால் அந்தத் தோல்வியைக் கணித்திருக்க முடியாது. பாடல், சண்டைக்காட்சிகள் போன்ற விஷயங்களில் காட்டிய பிரம்மாண்டத்தையும் கவனத்தையும் கதை திரைக்கதையில் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
பரபரவென்று ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தது சரி. தெலுங்கு படமாக எடுத்ததில் ஷங்கர் போயபட்டி சீனு போல மாறிவிட்டார். அதுவும் ராம் சரண் லுங்கி கட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சிகளும் ரயில்வே தண்டவாளக் காட்சிகளுமே அடேங்கப்பா இன்னும் என்னென்ன கஷ்டங்கள் காத்திருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. ராம் சரணுக்கும் கியாரா அத்வானிக்குமான காதல் காட்சிகள் அதைவிடக் கொடுமை. தொப் என்றால் கோபத்தை விட்டு விட வேண்டுமாம். அது கிளைமாக்சில் வேறு வருகிறது. அசந்தால் வரும் பாடல்கள் இன்னும் ஒரு அலுப்பு. பார்க்கப் பிரம்மாண்டமாக இருந்தாலும் கேட்க அமைப்பாக இல்லை. முதல் ப்ளாஷ் பேக்கில் இரண்டு சண்டைகள், பாடல்கள். இதில் இன்ப்ரா ரெட் காமிரா உபயோகித்து பதின்மூன்று கோடிரூபாய் செலவில் எடுக்கப்பட்ட டூயட் பாடல் என்று சொன்னார்கள். அதைப் படத்தில் காணவே இல்லை. கடைசியாக வரும் ஜெருகண்டி பாடல் சற்றே கிராபிக்சில் பிசிறடித்தாலும் அட்டகாசம். சண்டைக்காட்சிகள், பாடல்கள் இரண்டிலும் ஒளிப்பதிவாளர் திரு பிரம்மாதப் படுத்தியிருக்கிறார். தமன் கிடைத்தது சாக்கு என்று படம் முழுதும் வாசித்துத் தள்ளியிருக்கிறார். தளர்ந்து தொங்கும் காட்சிகளைச் சில இடங்களில் தூக்கிப் பிடிப்பது இவர் பின்னணி இசை தான்.
இது போன்ற கேரக்டருக்கு என்றே எஸ்.ஜே சூர்யாவை நேர்ந்து விட்டார்கள் போல. அவரும் அசாத்தியமாக ஊதித் தள்ளுகிறார். ராம்சரணுக்கு இணையான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ், பாடி லாங்குவேஜ் என அசத்துகிறார் மனுஷன். ஆனால் கேரக்டர் தேர்வில் இவரும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நலம். சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், சுபலேகா சுதாகர், வெண்ணிலா கிஷோர் போன்றவர்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஜெயராம், சுனில் போன்றவர்கள் செய்வது நகைச்சுவை அல்ல. வன்முறை. சுனிலைப் போலச் சைடில் ஒரு பக்கமாக நடந்து வருவது போன்ற வியாதி அஞ்சலிக்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு பக்கமாகத் தலையைத் திருப்பியே பார்த்துக் கொண்டிருக்கிறார். தேவையான போது நேராகப் பார்த்துப் பின்னர் திருப்பிக் கொள்கிறார். சபாஷ். சில காட்சிகள் இரண்டு முறை ஒரே மாதிரி வருகின்றன. யோசிக்க நேரமில்லை போல இருக்கிறது. ட்விஸ்ட் என்று ஒன்று இருக்கும் என்று எதிர்பார்க்க வைத்து இல்லை என்பது தான் மிகப் பெரிய டிவிஸ்ட். ஷங்கர் படங்களில் வரும் ப்ளாஷ் பாக் காட்சிகள் எப்பொழுதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதிலும் சற்று பரவாயில்லை என்று நினைக்கும்போது சட்டென்று முடிந்து நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறது. அந்த ப்ளாஷ் பேக்கில் அஞ்சலி பாடும் பாடல் நன்றாக இருந்தாலும் அநியாயத்திற்கு நீளம். ப்ளாஷ் பேக்கில் சொல்லப்பட்ட விஷயங்கள் ராம் சரணுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியதோ தெரியவில்லை. ரசிகர்களுக்கு ஒன்றுமே ஆகாதது போலத் தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோவுடன் கூட ஒரு ஈடுபாடு வரவில்லை என்றால் பின்னர் யார் மீது வரும்.
லாஜிக் என்ற வஸ்துவைப் பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் காட்சிகள் புதிதாகச் சுவாரசியமாக இருக்க வேண்டாமா. அங்குத் தான் மிகப் பெரிய கோட்டை விட்டிருக்கிறார்கள். கலெக்டர், காவல்துறை அதிகாரி, தேர்தல் கமிஷனர், முதல்வர், விவசாயியென அனைத்து வேடங்களிலும் வருகிறார் ராம் சரண். நினைத்தால் ஹெலிகாப்டர் ஏறி இறங்குகிறார். வில்லன் எஸ்.ஜே சூர்யாவை இடது கையால் டீல் செய்கிறார். சூர்யாவும் சிறுபிள்ளைத் தனமாகத் தான் இவரைப் பயமுறுத்தப் பார்க்கிறார். படத்தில் சற்றே ஆறுதலான நடிப்பு என்றால் ப்ளாஷ் பேக்கில் வரும் ராம் சரண் பாத்திரம் மட்டும் தான். அதுவும் ஒரு டெலிபோன் பூத்தில் தனது பெயரையோ அல்லது இடத்தையோ கூட சொல்ல முடியாமல் அவர் திக்கி தவிக்கும் காட்சி நன்று.
கம்பேக் ஷங்கர் என்று ரசிகர்கள் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பழைய ஷங்கராய் திரும்ப வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருக்க வேண்டும். அதற்கு இந்தப் படம் உதவியதா என்றால் சாரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கதை, லாஜிக், எல்லாம் வேண்டாம். தெலுங்கு டப்பிங் படம் எப்படி இருந்தாலும் பார்ப்போம் என்று சொல்பவர்களுக்கு இந்தப் படம் ஓகே என்று தோன்றலாம். சிவாஜி, எந்திரன், அந்நியன், இந்தியன், என முத்திரைப் படங்களை இயக்கிய ஷங்கர் படத்தை எதிர்பார்த்துப் போனால் பாடல்கள் சண்டைக்காட்சிகள் மட்டுமே அந்தத் திருப்தியை அளிக்கலாம். மற்றபடி படு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு மிகச் சுமாராக வந்திருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். என்ன கொடுமை என்றால் இந்தப் படத்தின் வெற்றி இந்தியன் 3க்கு உதவும் என்று நினைத்திருப்பார் ஷங்கர். இப்போது அது நிறைவேறுமா இல்லை இந்தியன் 2 வே பரவாயில்லை என்று ரசிகர்கள் சொல்லிவிடுவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.