விமர்சனம்: மகாசேனா - மகா குழப்பம்!
ரேட்டிங்(2 / 5)
யானை இருந்தால் படம் வெற்றி பெறும் என்ற செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. யானை மட்டும் இருந்தால் போதுமா? நல்ல கதை வேண்டாமா? யானையை மட்டும் நம்பி சரியான கதை இல்லாமல் சறுக்கலில் விழுந்த மகாசேனா என்ற படத்தை பற்றி இங்கே பார்க்க போகிறோம்.
இந்த படத்தில் விமல், ஜான் விஜய், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ளார்கள். தினேஷ் கலைச்செல்வன் இந்த படத்தை இயக்கி உள்ளார். குரங்கனி என்ற மலையில் உள்ள இரு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு தலைவராக இருக்கிறார் விமல்.
இந்த மக்கள் யாளி தெய்வத்தை வழிபடுகிறார்கள். இந்த தெய்வ சிலையை அதே மலையில் வேறு பகுதியில் உள்ள கங்கா என்ற பெண்ணை தலைவியாக கொண்ட ஒரு கும்பல் அபகரிக்க முயல்கிறது. ஒரு கல்லூரியிலிருந்து ஒரு பேராசிரியர் தலைமையின் கீழ் ஒரு மாணவர் குழு இந்த சிலையை காண வருகிறது. தமிழ் தெரியாத ஒரு கார்ப்பரேட் வில்லன் இந்த யாளி சிலையை கடத்த முயற்சி செய்கிறார்.
விமல் 'சேனா' என்ற யானையை வளர்க்கிறார். இந்த யானைக்கு மதம் பிடிக்கிறது. ஒரே படத்தில் இப்படி பல கதைகளை வைத்து மகா குழப்பத்தை தந்து திணறடித்திருக்கிறார் டைரக்டர்.
தனி, தனி கதையாக இருந்தாலும் படத்தொகுப்பில் சரியான கோர்வையில் அமைத்திருந்து ஒரு புள்ளியில் சேர்த்திருந்தால் ரசித்திருக்கலாம். இப்படி எதுவும் படத்தில் இல்லை. மாணவர்கள் குழு எதற்காக படத்தில் இடம் பிடித்தது என்ற சரியான காரணம் இல்லை. மைனா படத்திற்கு பிறகு நமது இயக்குனர்களுக்கு குரங்கணி காய்ச்சல் தொற்றி கொண்டது போல இருக்கிறது.
மைனாவுக்கு பிறகு வந்த பல படங்களில் மலை பகுதி என்றால் குரங்கணியை காட்டுகிறார்கள். தமிழ் நாட்டில் குரங்கணியை விட்டால் வேறு மலை பகுதிகளே கிடையாதா?
படத்தின் ஹீரோ விமல் படத்தில் தொடர்ந்து சில காட்சிகளில் காணாமல் போய் விடுகிறார். சில காட்சிகளுக்கு பிறகு வந்து ஜாயின் செய்து கொள்கிறார். மலை வாழ் பழங்குடியினர்க்கு ஏற்ற உடல் மொழி இவரிடம் இல்லை. பல காட்சிகளில் காட்ட வேண்டிய சரியான முகபாவனைகளும் விமலிடம் மிஸ்ஸிங்.
இப்படத்தில் சற்று ஆறுதலான விஷயம் ஸ்ருஷ்டி டாங்கே நடிப்புதான். ஒரு டீன் ஏஜ் பெண்ணிற்கு அம்மாவாக, மலை வாழ் பெண்ணானாக ஒப்பனையிலும் நடிப்பிலும் சரியாக இருக்கிறார்.
ஜான் விஜய் நடிப்பு பல படங்களில் இருப்பதை போலவே உள்ளது. அதே மேனரிசம், எம்.ஆர் ராதாவை இமிடேட் செய்வதை போன்ற குரல் என ஒரே டெம்ப்ளேட்டில் நடித்து அயர்ச்சியை தருகிறார்.
யோகி பாபு - சோ சாரி... மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் இவர் காமெடி செய்ய வில்லை என்றாலும் கூட பரவாயில்லை. யோகி பாபு காமெடிக்கு முயற்சி கூட செய்யவில்லை.
இவ்வளவு மைனஸ் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஆறுதல் தருகிறது. மலைக்கிராமங்களை தனது ஒளிப்பதிவில் அழகாக காண்பித்து இருக்கிறார் மனாஸ் பாபு. சண்டை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி போன்ற இடங்களில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் உதய பிரகாஷ்.
யானை இருந்தால் படம் வெற்றி பெறும் என்ற சென்டிமென்டில் படம் எடுத்திருக்கிறது மகாசேனா குழு. யானை அளவிற்கு இல்லாவிட்டாலும் அங்குசம் அளவிற்காவது கதையில் கவனம் செலுத்தி இருந்தால் மகாசேனா மாஸாக இருந்திருக்கும். இந்த மகாசேனா - மகா குழப்பம் மட்டுமே.

