மக்கள் தலைவா விமர்சனம் - தமிழக அரசியலின் பிம்பம் குறித்த நையாண்டி படம்!

தமிழக அரசியலின் பிம்பங்களைச் சிதைக்கும் ‘மக்கள் தலைவா’ - ஒரு முழுமையான பார்வை.
Makkal Thalaiva - மக்கள் தலைவா
Makkal Thalaiva - மக்கள் தலைவா
Updated on
ரேட்டிங்(3 / 5)

விமர்சனம் - மக்கள் தலைவா _ உங்களுக்கு தேவை காமராஜரா? அல்லது பிரபல நடிகரா? கேட்கிறது இப்படம்!

பிரபல நடிகரின் அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சிக்கும் படமாக வந்துள்ளது மக்கள் தலைவா. இந்த படத்தை ராம் தேவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ராதாரவி, ரவி மரியா, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மறைந்த முதல்வர் காமராஜரின் மதிய உணவு திட்டத்தின் கீழ் கல்வி பயின்று, இன்று மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பவர் பச்சமுத்து பழனிவேல். நேர்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த காமராஜரை தோற்கடித்த தமிழக மக்களை பழி வாங்க எண்ணி ஒரு திட்டம் தீட்டுகிறார். போலி போராளியாக இருந்து கொண்டு போராட்டம் என்ற பெயரில் செல்வந்தர்களிடம் பணம் பறிக்கும் தமிழ் குடிமகன் என்பவரை அழைத்து கட்சி தொடங்க நிதி உதவி செய்கிறார்.

இந்த கட்சிக்கு UVK என்று பெயர் வைக்கிறார். (உள்ளே வெளியே கட்சி) வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் தருவது, பரிசுப்பொருட்கள் தருவது என பல விஷயங்களை செய்கிறார் பச்சமுத்த. தேர்தல் முடிந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு UVK கட்சி வெற்றி பெற்றால் பொதுமக்களில் இருந்து குலுக்கல் முறை அடிப்படையில் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கிறார் பச்சமுத்து பழனிவேல். இதனால் மகிழ்ச்சி அடையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் நாம் தான் அடுத்த முதல்வர் என்று கற்பனை செய்து கொண்டு UVK கட்சிக்கு வாக்களிக்கின்றனர். இறுதியில் என்ன ஆனது? குலுக்கல் முறையில் பச்சமுத்து முதல்வரை தேர்ந்தெடுத்தாரா? என்று சொல்கிறது இப்படம்.

இந்த படத்தில் சொல்லப்பட்ட 'குலுக்கல் முறை முதல்வர்' என்ற விஷயத்தை தவிர்த்து பாக்கி அனைத்துமே தமிழ்நாட்டில் நடந்தவையே. வேறொரு கட்சியை நினைவுபடுத்து வது போல் UVK என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர்.

Radha Ravi -  மக்கள் தலைவா
Radha Ravi - மக்கள் தலைவா

"இதெல்லாம் ஒரு முகமா என்று கேட்டவன் கூட அந்த முகத்தை பாக்குறதுக்கு இன்னைக்கு போய் கூட்டத்தில் விழுந்து செத்தான்" என்று ராதாரவி சொல்லும் இடம் மறைமுகமாக இல்லாமல் நேரடியாகவே இயக்குனர் பிரபல நடிகரின் அரசியல் வருகையை தாக்குவது போல் உள்ளது.

பிரபல நடிகரை மட்டுமல்லாமல் போராட்டம் நடத்தும் ரவி மரியா கேரக்டரை பார்க்கும்போது தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கிறேன் என்று போராடும் ஒரு நபரின் முகம் நமக்கு நினைவுக்கு வருகிறது. மேலும் ராதாரவியின் பச்சமுத்து என்ற பெயர் இன்னொரு அரசியல்வாதியையும் நமக்கு நினைவு படுத்துகிறது.

இப்படத்தில் தொடக்கத்தில் காமராஜர் வரும் காட்சிகள் நமக்கு 1960 காலகட்டத்தை கண்முன் கொண்டு வருகிறது. “யாசகம் எடுத்தாவது நான் பள்ளிக்கூடம் கட்டுவேன்" என்று காமராஜர் சொல்லும் போது நாம் எப்பேர்பட்ட தலைவரை தோற்கடித்து விட்டோம் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் இயக்குனர் நம்மிடம் சொல்ல வந்தது இதுதான்.

அதாவது காமராஜர் தோற்கடிக்கப்பட்டதால் தோல்வி காமராஜருக்கு அல்ல தமிழக மக்களுக்கு தான் என்று இயக்குனர் சொல்ல முயற்சித்து இருக்கிறார். இந்த முயற்சியில் இயக்குனர் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார். இதை காட்சியில் நம்மால் உணர முடிகிறது. பரபரப்பான காட்சிகள், வேகமாக செல்லும் திரைக்கதை படத்தில் இருந்திருந்தால் இன்னும் இது ஒரு சுவாரஸ்யமான படமாக அமைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
பாலன்: தி பாய் விமர்சனம்: மஞ்சுமல் பாய்ஸ் வரிசையில் ஒரு மிரட்டலான சர்வைவல் த்ரில்லர்!
Makkal Thalaiva - மக்கள் தலைவா

நூறு முறுக்குகளை தட்டில் வைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு பற்றி புரிய வைப்பது, மக்களின் மனதை ராதாரவி சொல்லும் இடம் போன்ற காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் அரசியல் நையாண்டிக்கு நிறைய ஸ்கோப் இருந்தும் பெரிய அளவில் நகைச்சுவைக்கு டைரக்டர் முயற்சிக்கவில்லை. இது ஒரு குறையே.

ராதாரவி இதற்கு முன்பு பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் சைலன்டாக இருந்து பெரிய மனித தோரணையில் வில்லத்தனம் செய்வது ராதாரவிக்கு ஒன்றும் புதிய விஷயம் இல்லை. இந்த படத்தில் பச்சமுத்து பழனிவேல் கேரக்டரில் மிகச் சரியாக இதை செய்து விடுகிறார். அமைதியாக இருந்து கொண்டு தான் நினைத்ததை சாதிக்கும் இடத்தில் ராதாரவி சபாஷ் போட வைக்கிறார்.

ரவி மரியா இதுவரை வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். முதல் முறை ஒரு முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் ஒரு சரியான நடிப்பை தந்துள்ளார். கஞ்சா கருப்பின் நடிப்பை பார்க்கும் போது தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர் ஒருவர் நினைவுக்கு வருகிறார். ஹீரோயின் இல்லாத குறையை அக்ஷராவின் நடனம் போக்குகிறது.

படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் பிம்ப அரசியலை காட்டியதற்கு இப்படத்தை பாராட்டலாம். மேலும் காமராஜர் தோல்வி என்பது அரசியல் தோல்வி அல்ல இது நம் தமிழ் மக்களின் தோல்வி என்பதை லேசாக இல்லாமல், ஆணித்தரமாக பதிவு செய்து இருக்கிறது மக்கள் தலைவா.

logo
Kalki Online
kalkionline.com