

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சத்யராஜ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வந்திருக்கும் படம் மண்டாடி.
ராமேஸ்வரம் அருகில் முகவைபட்டினம் என்ற ஒரு கிராமம். இது ஒரு மீனவ குடும்பங்கள் நிறைந்த கடற்கரை கிராமம். இந்த கிராமத்தில் காளி பாய்மரப் படகு போட்டியை பல இளைஞர்களுக்கு கற்பித்து போட்டிகளை நடத்துகிறார். இவருக்கு எதிராக சாட்டை புலி என்பவர் போட்டிகளை நடத்துகிறார். இந்த போட்டிகள் இந்த இருவருக்கும் தனிப்பட்ட மோதலாக உருவாக காரணமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த மோதலுக்கு காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என்று பிளாஷ்பேக் சொல்கிறது.
அந்த பிளாஷ்பேக்கில் முனி என்ற பாய்மரப் படகு போட்டி நடத்தும் ஒரு ஆசிரியரிடம் காளி மற்றும் சாட்டை புலி இருவரும் படகு போட்டி நடத்தும் வித்தையை கற்றுக் கொள்கிறார்கள். சாட்டை புலியின் குடும்பத்தினர் "காளியை நம்ப வேண்டாம் நீ தனியாக ஒரு தொழில் செய்" என்கிறார்கள். இந்த அறிவுரையானது காளி - சாட்டை புலி மோதலாக உருவெடுக்கிறது. இதனால் சில கொலைகள் நடக்கிறது. அதன் பிறகு நண்பர்களாக இருந்த சாட்டைப் புலியும், காளியும் பிரிந்து விடுகிறார்கள். அந்த பிரிவு பகையாக மாறி கடலில் பாய்மரப் படகு போட்டி நடக்கும் சமகாலத்திலும் எதிரொலிக்கிறது. இதனால் என்ன ஆனது? என்று சொல்கிறது மண்டாடி.
மண்டாடி என்றால் பாய்மரப் படகை செலுத்துபவர் அல்லது பாய்மரப் படகு செலுத்தும் குழுவிற்கு தலைவராக இருப்பவர் என்று அர்த்தம்.
சபாஷ் விஷயங்கள்... படத்தில் மிகவும் சபாஷ் போட வைப்பது படத்தின் தொழில்நுட்பம் தான். குறிப்பாக கதிரின் ஒளிப்பதிவு மிகப் பிரமாதம். கடலின் சீற்றத்தையும், படகு செல்லும் வேகத்தையும் மிகத் துல்லியமாக தனது கேமராவில் படம் பிடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவை வடிவமைத்த பிரதாப், VFX வடிவமைத்த ஹரிஹரசுதன் இருவரும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் தொழில்நுட்பம் மூலமாக பேச வைக்கிறார்கள்.
நடிப்பை பொறுத்தவரையில் வில்லனாக வரும் சுகாஷ் நடிப்பு ஓரளவு நன்றாக உள்ளது. பழைய காதலியாக வரும் மகிமா நம்பியார் நடிப்பும் பரவாயில்லை ரகம்.
படத்தின் சுமார் விஷயங்கள்... விளையாட்டை விட்டு விலகி இருக்கும் ஹீரோ பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விளையாட்டுக்கு வருவது, முன்னாள் அல்லது சமகாலத்தில் ஹீரோவுக்கு ஒரு காதலி இருப்பது, பழைய பகை, சில கொலைகள், பழிக்குப் பழி என்று விளையாட்டு தொடர்பான வந்த, தற்போது வந்து கொண்டிருக்கும் அதே கதை தான் மண்டாடி படத்திலும் உள்ளது.
மற்ற படத்தில் கிரிக்கெட், குஸ்தி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் இருக்கும். இந்த படத்தில் பாய்மரப் படகு போட்டி இருக்கிறது. அவ்வளவுதானன் வித்தியாசம்.
பாய்மரப் படகு போட்டி பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இதை நமக்கு புரியும் அளவு காட்சிப்படுத்தியிருந்தால் இந்த போட்டிகளை நாம் ரசிக்க முடிந்திருக்கும். ஆழமாக புரியும் அளவிற்கு திரைக்கதை இல்லாததால் போட்டி நடக்கும் காட்சிகளால் நம்மால் ரசிக்க முடியவில்லை.
எல்லா காட்சிகளிலும் சூரி ஒரே போன்று முகத்தை வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். சூரி இன்னும் ஆழமாக நடித்திருக்க வேண்டும். சூரி பேசும் வசனங்கள் பல இடங்களில் நமக்கு சரியாக புரியவில்லை.
சத்யராஜ் உள்ளேன் ஐயா என்பது போல தான் வந்து செல்கிறார். தொழில்நுட்பம், கேமரா ஒலிப்பதிவு, சிறப்பு சப்தங்கள் போன்றவை நன்றாக இருந்தும் கதையும், திரைக்கதையும் பழைய பல விளையாட்டு படங்களில் கதையைப் போன்று இருப்பதால் பெரிய அளவில் நம்மால் ஒன்ற முடியவில்லை.
ஆக.... மிகப்பெரிய அளவில் மண்டாடி படத்திற்கு பிரமோஷன் நடந்தது. மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பை தொழில்நுட்ப ரீதியில் படக்குழு திருப்திபடுத்தி உள்ளது மற்றபடி கதை, திரைக்கதையில் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்த இந்த மண்டாடி தவறிவிட்டது. கடலில் ஒரு பிரம்மாண்டத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு மண்டாடி ஒரு சரியான படமாக இருக்கலாம்.