

நீங்கள் அவளிடம் என்ன சொன்னீர்கள். எங்களுக்குப் பசிக்கிறது. குளிராக இருக்கிறது. அதற்காகவா முன் பின் தெரியாதவர்களை உள்ளே அழைக்கிறார்? அது தான் ரஷ்யா. நீங்கள் எங்களைத் தீய சக்தி என்று சொல்கிறீர்கள்.
உங்கள் மகளிடம் நீங்கள் பேசினீர்களா. எதைப் பற்றிப் பேசுவது. அவளுக்கு இருக்கும் தன் பாலின ஈர்ப்பு பற்றி தானே? அது தெரிந்ததும் தான் வேலையையே விட்டேன். அது ஒரு குற்றம் என்று நினைக்கும் அமைப்பில் நான் எப்படிப் பணி புரிவது.
அன்பு என்பது காட்டுவது மட்டுமல்ல. பேசிப் புரிய வைப்பதும்.
ஓர் ஆக்ஷன் படத்தில் இது போன்ற வசனங்கள் கவனம் பெறுவது கண்டிப்பாக நடக்கும். சண்டையை மட்டும் பார்க்காமல் உரையாடல்களையும் கவனித்தால் இது போன்ற முத்துக்கள் கிடைக்கும். அப்படிக் கிடைத்தவை தான் மேலே குறிப்பிட்ட வசனங்கள். படம் மே டே.
ஆப்பிள் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் ரேயன் ரேநால்ட்ஸ், கென்னத் பிரணாக் நடித்துள்ளனர். எண்பதுகளில் நடக்கும் கதை இது. ரஷிய எல்லையில் நடக்கும் சில சம்பவங்களைக் கண்காணித்து வர ஒரு ரகசிய மிஷன் அமைக்கப் படுகிறது. அதில் கப்பற்படையைச் சேர்ந்த டிராய் என்பவர் ஈடுபடுகிறார். அங்கு நடைபெற்ற தாக்குதலில் தப்பித்து ரஷியா எல்லைக்கு உள்பட்ட பகுதியில் விழுந்து விடுகிறார். அவரைக் காப்பாற்றி தன்னுடன் வைத்துக் கொள்கிறார் முன்னாள் கே ஜி பி உளவாளி நிகோலாய். அவர் அங்கிருந்து தப்பித்தாரா. இவர்கள் நட்பு என்னவானது என்பது தான் மே டே படத்தின் கதை.
இது போன்ற படங்கள் நூற்றுக் கணக்கில் பார்த்திருக்கிறோம். ஆனாலும் பல இடங்களில் கவனத்தைக் கவர்ந்ததற்குக் காரணம் இந்த இருவரின் நடிப்பு தான். பரம எதிரி நாடுகள். இவர்களுக்கு இடையே மலரும் நட்பும் அது எந்த அளவில் முடிகிறது என்பதும் தான் கிளைமாக்ஸ்.
இது போன்ற ஆக்ஷன் காமெடி படங்களுக்கே இருக்க வேண்டிய அனைத்தும் இதிலும் இருக்கிறது. பாரில் நடக்கும் ஒரு சண்டை. ரயிலில் நடக்கும் ஒரு சண்டை. செஞ்சதுக்கத்தில் நடக்கும் ஒரு துரத்தல் எனத் தேவையான அளவு இதிலும் இருக்கிறது. அவை நன்றாகவும் படமாக்கப் பட்டுள்ளது. பார்க்க நன்றாக இருந்தாலும் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கிறதே என்பது தான் ஒரு சிறிய குறை.
மேலும் இந்த இருவர்களின் பாத்திரங்கள். இவை மாற்றிச் செய்யப்பட்டு இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. கென்னத் பிரணாக் பொறுத்த வரை சற்று வயதான துப்பறிவாளராகப் பார்த்துப் பழக்கம். அவர் சண்டை போடும் போது பார்க்க ஒப்பவில்லை. ரெயன் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கூட. அவருடைய பாத்திரத்தை இன்னும் சற்று செதுக்கி சண்டைக் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். ஏனோ அதைச் செய்யவில்லை.
இப்படித் தொடங்கும் கதை இப்படித் தான் செல்லும். இப்படித் தான் முடியும் என்று காட்சிகள் முதற்கொண்டு நமக்குத் தெரிவது ஒரு பலவீனம். திருப்பம் என்று அவர்கள் இறுதியில் வைத்ததும் சப். ஜான் டேலி, ஜோநாதன் ஆகிய இருவரும் எழுதி இயக்கி இருக்கிறார்கள்.
ஆனால் இது போன்ற படங்களில் ஒரு வசதி. எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க உட்கார்ந்தால் அது பாட்டுக்கு ஓடி முடிந்து விடும். விடுப்பா. போர் அடிக்கவில்லை என்ற நினைப்போடு எழுந்து விடுவோம். அப்படி ஒரு படம் தான் may day.
வழக்கமான ஆக்ஷன் கதைக்களமாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான உரையாடல்களும் நடிகர்களின் சிறப்பான நடிப்பும் இப்படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக மாற்றுகின்றன.