இயக்குநர் மாரி செல்வராஜ், பாலு மகேந்திரா இறந்த தேதி அன்று அவருக்கு நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ரத்தினம்தான் பாலு மகேந்திரா. தனது படைப்புகள் மூலம் பல விருதுகளை சொந்தமாக்கியிருக்கிறார். சினிமாவையே முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் தனது கேமரா லென்ஸ் மூலம் காட்டி கவனம் ஈர்த்த பாலு மகேந்திரா, கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் 74 வயதில் காலமானார். தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் அவரும் ஒருவர்.
அவருடைய துணை இயக்குநர்களாக பணியாற்றிய பலர் இன்று வெற்றிகரமாக வலம் வருகிறார்கள். பாலா, வெற்றிமாறன், ராம், அமீர், சசிகுமார் என பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்தவகையில் இயக்குநர் பாலு மகேந்திராவின் கடைசி நாளில் இயக்குநர் பாலா செய்த காரியம் பற்றி மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.
பாலா நோக்கி மாரி செல்வராஜ் பேசுகையில், “பாலு மகேந்திரா சாரோட கடைசி நாள் நானும் உங்களுடன் தான் இருந்தேன். நான் இயக்குனர் ராமனிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக அந்த சமயத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது நானும், நீங்களும், ராம் சாரும் சேர்ந்து டீ கடைக்கு சென்றோம்.
வடபழனியை கடக்கும்போது பாலு மகேந்திரா சாருக்கு என்ன ஆகிவிடுமோ என்று பயந்தீர்கள். அனைவருமே பதற்றமாக இருந்தீர்கள். அப்போது பதற்றத்தில் டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு பின்னர் சில்லறை இல்லை என ஐந்து ரூபாய் காயினை நீங்கள் கொடுத்தீர்கள் அதனை நான் டீக்கடைக்காரரிடம் கொடுக்காமல் நாளைக்கு கொடுக்கிறேன் என என்னிடமே வைத்து விட்டேன்.
அதுதான் நான் உங்கள் கையிலிருந்து வாங்கிய முதல் நாணயம். இன்றும் அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அன்று இரவு தான் ஒரு, ஒரு இயக்குனரிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு இயக்குனராக நான் புரிந்து கொண்டேன்” என மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.
இது ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.