விமர்சனம்: மரியா - தவறான கருத்தியல்!
ரேட்டிங்(2 / 5)
வேற்று கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்று அறிவியல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய நாளில் கூட, மனித குலத்திற்கு பிரச்னையாக இருக்கும் ஒரே விஷயம் சாதி, மதம். அறிவியல் விண்ணை தொடும் இந்த நாளில் கூட பல நாடுகளில் மத மோதல்களால் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு விதமான கோட்பாடுகள், நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்த நம்பிக்கையில் முரண்படுபவர்களும் இருக்கிறார்கள்.
தான் சார்ந்த மதத்தில் முரண்பாடு கொள்ளும் ஒரு பெண்ணின் கதையை சொல்லும் படமாக வந்துள்ளது 'மரியா'. இப்படத்தை ஹரி கே.சுதன் இயக்கியுள்ளார்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் மரியா. இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கன்னியாஸ்திரியாக இருக்கிறார். சில காரணங்களால் சென்னையில் உள்ள தன் தோழியான ஆக்னஸ் வீட்டில் தங்குகிறார். ஆக்னஸ் தன் காதலருடன் வீட்டில் வாழ்கிறார். அதே வீட்டில் ஆக்ன்சின் மற்றொரு தோழியும் தன் காதலருடன் வாழ்கிறார். இந்த இரு ஜோடிகளும் மரியா மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். மரியா பைபிள் படிப்பது, பிரேயர் செய்வது என்று இருக்கிறார். சில நாட்கள் சென்ற பிறகு, இளம் ஜோடிகள் காதல் கொள்வது, அன்பு பரிமாற்றம் செய்வது போன்றவற்றை பார்க்கும் மரியா மனதில் மாற்றம் வருகிறது. "இந்த கன்னியாஸ்திரி வாழ்க்கை வேண்டாம், காதல், திருமணம் என்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறார். மீண்டும் கான்வென்ட்டுக்கு செல்லக்கூடாது என்று முடிவெடுத்து, சிதம்பரம் சென்று, அம்மாவிடம் தன் முடிவை சொல்கிறார். அங்கே கோபம் கொள்ளும் அம்மா வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். மீண்டும் சென்னையில் ஆக்னஸ் வீட்டிற்கு வருகிறார்.
இயேசுவுக்கு எதிரான கருத்தை கொண்டுள்ள 'சாத்தான் மையத்திற்கு' செல்கிறார். அங்கே, 'பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு என இயேசு போதித்த கருத்துக்கள் காலத்திற்கு ஒவ்வாதது, அடிக்கு அடி பல்லுக்கு பல் என்ற சாத்தானின் கருத்துக்கள் தான் சரி, நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ அப்படியே வாழ வேண்டும், இந்த உலகம் தவறாக இயேசுவை வழிபடுகிறது. சாத்தனை வழி பட வேண்டும்,' என கூறி சாத்தானுக்கான சடங்குகளை செய்கிறார்கள். இதனால் ஈர்க்கப்படும் மரியா சாத்தானை வழிபடுகிறார். ஆக்னசின் காதலர் மீது தானும் காதல் கொள்கிறார் மரியா. இதனால் கோபம் கொள்ளும் ஆக்னஸ் மரியாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
மரியா இயேசுவின் பாதையில் சென்றாரா? அல்லது சாத்தானை கொண்டாடினாரா? என்று சொல்கிறது மரியா.
மதத்தின் தளத்தில் நின்று பெண்ணுரிமை பேசும் படமாக தொடங்கி செல்லும் படம், மெதுவாக சாத்தானின் பெருமை பேசும் படமாக மாறி விடுகிறது. பெண்களுக்கான உரிமைகள் மதத்தின் கொள்கைகளால் பாதிக்கப்பட கூடாது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் ஒரு மதத்தை எந்த சரியான புரிதலும் இல்லாமல், தீமையின் உருவகமாக சொல்லப்படும் சாத்தானை கொண்டாடுவது நியாமில்லை. படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம் சாய் ஸ்ரீ பிரபாகரனின் நடிப்பு தான். கன்னியாஸ்திரியாக, ஒரு சராசரி பெண்ணாக இரண்டு இடத்திலும் சரியாக நடித்திருக்கிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில், வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'தட்டத்தின் மறையது' என்ற படம் வெளியானது. இரண்டு வெவ்வேறு மதத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் காதல் கொள்வார்கள். இந்த காதல் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து இஸ்லாமிய பெண்களின் உரிமைகளின் தேவையை கேரளாவின் சமூக, அரசியல் பின்னணியில் சிறப்பாக சொல்லியிருப்பார் டைரக்டர். பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, அதே சமயத்தில் மதத்தின் மாண்புகளையும் சிதைக்காமல் இது போன்ற படங்களை தென்னிந்திய சினிமா தந்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம்!