
Aruvar private limited சார்பில் சி. வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மருதம்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த் நாயகனாகவும், நாயகியாக ரக்ஷனா நடிக்க இவர்களுடன் அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (அக்டோபர் 10-ம்தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து, நேற்று (அக்டோபர் 9-ம்தேதி) இப்படம் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நடித்தவர்களுடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய ‘மருதம்’ திரைப்படத்தில் கதாநாயகன் நடிகர் விதார்த், ‘படம் மிகவும் நன்றாக வந்து இருக்கிறது. படத்தின் நாயகியான ரக்ஷனா சிறப்பாக நடித்திருக்கிறார்.
விவசாயத்தை அழுத்தமாக பேசும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களுடைய கைகளில் தான் இருக்கிறது என்று பத்திரிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து பேசிய கதாநாயகி ரக்ஷனாவிடம் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், கேள்வி கேட்க அதற்கு சற்றும் சளைக்காமல் நடிகை சரியான பதிலடி கொடுத்து பதில் அளித்தார். இதனை கேட்ட அங்கிருந்த நடிகர் விதார்த் உள்பட பலரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் யாருக்கும் பயப்படாமல் எப்போதும் தைரியமாக தனக்கு தோன்றிய விஷயத்தை கேட்பதும், அனைவரையும் வம்பிழுப்பதும் தான் பயில்வான் ரங்கராதனின் வழக்கம். இதனால் பல சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. சினிமா துறையை சேர்ந்த பலரும் இவர் பேசினாலே சர்ச்சை ஏற்படும் என்று அறிவர். அந்த வகையில் இங்கும் வம்பிழுத்த அவரை ‘மருதம்’ படத்தின் நாயகி தரமான சம்பவம் செய்த இந்த செயல் தான் தற்போது ஹாட் டாபிக்காக இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைவரையும் வம்பிழுப்பது போலவே நடிகை ரக்ஷனாவிடம் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேச்சை ஆரம்பித்தார். ‘மருதம்’ உங்களுக்கு முதல் படம். அதிலேயே நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து விட்டால், அடுத்த படத்தில் தாயாக நடிக்க தானே வாய்ப்பு கிடைக்கும் என்று அக்கறையுடன் கேட்பது போல வம்பிழுக்க, உடனே நடிகை ரக்ஷனா, நான் இரண்டாவது படத்தில் நடித்து முடித்து விட்டேன். அந்த படத்தின் இயக்குனர் என்னை இப்படி கேட்கவில்லை என பதிலடி கொடுத்தார்.
ஆனால் விடாமல் மீண்டும் நடிகையை வம்பிழுத்த பயில்வான் ரங்கநாதன், நான் உங்களுடைய நன்மைக்கு தான் சொல்கிறேன். அப்படிதான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் படத்திலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார், அதனால் தான் அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அட்வைஸ் செய்ய, அதற்கு நடிகை ரக்ஷனா, ஆமாம், ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவருக்கு எவ்வளவு நல்ல பெயர் கிடைத்தது என்று உங்களுக்கு உங்களுக்கு தெரியுமா? என்று பதிலடி கொடுத்தார்.
மேலும் பேசிய நடிகை ரக்ஷனா, சினிமாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து விட்டால், அதன் பிறகு தொடர்ந்து அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிப்பார்கள் என்கிற ரூல் இங்கே இருக்கிறது. சினிமாவில் நிரந்தரமாக உள்ள அந்த ரூலை யாராவது உடைக்க வரவேண்டும் அல்லவா. அது நானாகவே இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்தார்.
நடிகையின் இந்த பதிலை கேட்டு சற்று தடுமாறிய பயில்வான் ரங்கநாதன் அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, நடிகர் நடிகர் விதார்த் உள்பட அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
பயில்வான் ரங்கநாதனை மருதம் பட நாயகி ரக்ஷனா, நோஸ்கட் செய்த இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.