

சமீபத்தில் ஒரு நேர்காணலில் மாஸ்டர் மகேந்திரனிடம் தமிழகத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாடு பற்றி கருத்து கேட்டுக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. பலர் அவரை கடுமையாக வலைதளங்களில் கேலி செய்தனர். அதனால், அதை விளக்கும் வகையிலும் தனது கருத்தை தெளிவுபடுத்தும் வகையிலும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில்" ஒரு சமீபத்திய நேர்காணலில் நான் கூறிய ஒரு சில கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நான் யாரை மதிக்கிறேனோ, அவர்கள் கூட இந்த விவகாரத்தில் என்னை விமர்சித்து பேசி இருப்பது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
.
நான் இந்த அர்த்தத்தில் பேசி இருக்க மாட்டேன் இதற்கு பின்னால் வேறு சிந்தனைகள் இருக்கும், என்று அவர்கள் ஒரு நிமிடம் யோசித்து எனக்கு ஆதரவாக இருந்திருக்கலாம். ஆனால் ,அவர்கள் உடனடியாக என்னை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். நானே நேரடியாக பேசிய விஷயம் என்பதால் அதைப் பற்றி சரியாக விளக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
கேள்வி கேட்டா உடனே கரண்ட் வந்துருமா? என்று நான் குறிப்பிட்டது பொதுமக்களை பார்த்து அல்ல, மின்சார தட்டுபாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் செய்பவர்களை பார்த்து தான். மக்களின் அன்றாட துயரங்களை வைத்து ஆதாயம் தேடுபவர்களைத்தான் நான் கேள்வி கேட்டேன்.
அதுபோல , "ஆறு மாதம் டைம் கொடுங்கள், கேள்வி கேட்காதீர்கள்" என்று நான் கூறியது கூட, விஜய் அண்ணா ஆட்சிக்கு வரும்போது ஒரு ஆறு மாத காலங்கள் அவகாசம் கொடுங்கள், அவர் எல்லாவற்றையும் சரி செய்து நல்லாட்சியை தருகிறேன் என்று கூறியிருந்தார். விஜய் அண்ணாவின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் அவர் மீதான அன்பின் வெளிப்பாடுகள் தான் அந்த வார்த்தைகள். அவர் கால அவகாசம் கேட்கும் போது, நாம் அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று சாதாரணமாக கூறினேனே தவிர , மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை, என்ற அர்த்தத்தில் நான் பேசவில்லை.
அடுத்ததாக நான் சோலார் சிஸ்டம் பற்றி கூறியதும் எனது வார்த்தை பிழை தான் ,அதை நான் தயக்கம் இன்றி ஒத்துக் கொள்கிறேன். நான் ஒன்றும் புத்திசாலி மாணவன் கிடையாது, நான் ஒரு சராசரி மாணவன் என்பதால், சோலார் எனர்ஜி அல்லது சோலார் பவர் என்று குறிப்பிடுவதற்கு பதில் சோலார் சிஸ்டம் என்று மாற்றி சொல்லிவிட்டேன்.
கடந்த 2015ஆம் ஆண்டு, கொச்சி சர்வதேச விமான நிலையம் உலகின் முதல் சூரிய சக்தி மூலம் இயங்கும் ஏர்போர்ட்டாக மாற்றப்பட்டது. அதை நான் நேரில் கண்டு வியந்த போது ,நம் தமிழ்நாட்டில் அரசு ஏன் இது போன்ற சூரிய சக்தி திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சேர்க்கவில்லை? என்ற யோசனை எனக்குள் எழுந்தது.
அதன் பின்னர் ஒரு வரலாற்று உண்மையை நான் தெரிந்து கொண்டேன். கடந்த 2011ஆம் ஆண்டிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 'பசுமை வீடு திட்டம்' தொடங்கப்பட்டு, வீடுகளின் கூரைகளில் சோலார் பேனல் அமைக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொலைநோக்கு பார்வையில் கொண்டுவரப்பட்ட அந்தப்திட்டத்தை நாம் சரியாக பின்பற்றி இருந்தால், இன்று அதன் பலனை முழுமையாக அடைந்திருப்போம். அதை தவற விட்டுவிட்ட ஆதங்கத்தில் தான் நான் அப்படி கூறினேன் .
மேலும் "என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கோங்க" என்று நான் பேசியதும் தவறாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதை வைத்து பலரும் மகேந்திரனுக்கு திமிர் அதிகம், சிறுவயதிலேயே ஆட்டிடியூட் அதிகம், மணிரத்னம் சார் முன்னாடியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து சீன் போட்டான் என்றெல்லாம் பேசுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் உண்மையில் நடக்கவில்லை. இந்த அளவு என்னை 'திமிர் பிடித்தவன்', 'யாரையும் மதிக்க மாட்டான்' என்று சித்தரிக்கிறார்கள்.
மக்களின் பெயரை பார்த்து நான் நக்கல் செய்வதாகவும் என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ப்ளீஸ் தயவு செய்து எனக்கு அப்படிப்பட்ட பட்டங்களை கொடுத்து விடாதீர்கள். நான் ஒரு வேளை சோறு சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு இந்த மக்கள் தான் காரணம். என் மக்களை நான் எப்படி கேலி செய்வேன்? என்னுடன் பழகியவர்களுக்கும் என்னுடன் இருப்பவர்களுக்கும் நம் மக்களை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பது நன்றாக தெரியும் , என்று விளக்கம் அளித்துள்ளார்.