தளபதி விஜயின் இந்த படம் ரீ ரிலீஸ் செய்தால் எப்படியிருக்கும்? என்று ரசிகர்கர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எந்த படம் என்று பார்ப்போமா?
தளபதி விஜய் அடுத்த ஒரே படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். இதனையடுத்து அரசியலில்தான் முழு மூச்சாக இறங்கவுள்ளார். விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு தியேட்டரில் அவரின் புது படங்களைப் பார்க்கவே முடியாது என்று கதறுகிறார்கள். இனி ஏற்கனவே வெளியான அனைத்து படங்களை ரீ ரிலிஸ் செய்து அதனை ரசிகர்கள் பார்ப்பதுதான் ஒரே தீர்வு. அந்தவகையில் தற்போது ஒரு படம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
ஆம்! இயக்குனர் ஜான் மகேந்திரனின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் தான் சச்சின். இந்த படம்தான் ரீரிலீஸாகவுள்ளது. இதில் வரும் காதல் காட்சிகளுக்கு இன்றும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் வடிவேல் காமெடிக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
இவையனைத்தையும்விட விஜயின் குறும்புத் தனமான நடிப்பு மேலும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். ஆக்ஷன் படங்களை விட விஜயின் குறும்புத்தனமான நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தது இந்தப் படத்தில்தான். டிவியில் போட்டால்கூட ஒவ்வொருமுறையும் ரசிகர்கள் தவறாமல் பார்ப்பார்கள். இதனை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் எப்படி விடுவார்கள்?
இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களுமே இன்றும் பலரின் ப்ளே லிஸ்ட்டில் இருக்கின்றன. இப்படி பலரையும் ஈர்த்த இப்படம் வெளியாகி 20 (வரும் ஏப்ரல் மாதத்துடன்) ஆண்டுகள் ஆகவுள்ளது.
இதனையொட்டி இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்தது. இதனால் சச்சின் படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் படத்தின் ரீரிலீஸ் செய்தியை கேட்டவுடன் இணையம் எங்கும் இந்த டாபிக் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.