
தெலுங்கு பட உலகில் முன்னனி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் இவர் முதன்முதலில் அறிமுகமானாலும் இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் என்பது மறுப்பதற்கில்லை. இதனாலேயே இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கு சினிமாவில், ‘நேச்சுரல் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் நானி தொடர்ந்து வித்தியாசமான மற்றும் நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராகவும், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய நானி, அட்டா சம்மா என்ற தெலுங்கு படத்தின் மூலம் முதன் முதலில் திரையுலகுக்கு அறிமுகமானார்.
தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அந்தபடம் வரவேற்றை பெறவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து அவர் நடித்த, நான் ஈ என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபோனார். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்றை பெற்றது என்றே சொல்லலாம்.
அதேபோல் இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நானியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் திரில்லர் படமான ஹிட் 3 வருகிற 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்ரீநிதி ஷெட்டி, நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சூர்யா சீனிவாஸ், ரியோ ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சைலேஷ் கோலானு இயக்கி இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நானி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புரமோசனுக்காக சென்னை வந்த நானி, மெய்யழகன் திரைப்படத்தைப் பற்றி சொன்னது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஆயிரம் கோடி கொடுத்து படம் எடுத்தாலும் மெய்யழகன் படம் மாதிரி யாராலும் எடுக்க முடியாது. அந்த படத்தில் இருந்த உணர்வை திரையில் கடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறிய நானி, அந்தப் படத்தில் ஏதோ மேஜிக் உள்ளது என்றார். படத்தை பார்த்தபின் நான் கார்த்தியிடமும் பேசினேன். மெய்யழகனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியாக உணர்வேன்' என்று மெய்யழகன் படத்தை புகழ்ந்து பேசினார் நடிகர் நானி.
நானி சொல்வதைப் போல அரவிந்த்சாமி மற்றும் கார்த்தியின் நடிப்பில் உருவான மெய்யழகன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக மக்களிடையே பாராட்டை பெற்றது.
நடிகர் நானியில் ஹிட் வரிசையில் ஏற்கனவே வெளியான 2 படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாக உள்ள 3-வது பாகம் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.