

ஒரு படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது இதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோக்கள், அல்லது திரையரங்குகளில் நடக்கும். சமீப காலத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களை சென்னையிலும் மற்ற நகரங்களில் உள்ள மிகப்பெரிய கல்லூரி மைதானங்களில் மாணவர்கள் முன்னிலையே நடத்துகிறார்கள். முதல் முறையாக சென்னையில் ஒரு கல்யாண மண்டபத்தில் திருமண முகப்பு போன்று டெக்கரேஷன் செய்து மொத ராத்திரி என்ற படத்திற்கு ஆடியோ வெளியீடு நடத்தியுள்ளார்கள். ரஜினி நடித்த கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ரிஷிகாந்த் ஹீரோவாகவும், சிறை படத்தில் ஹீரோயினாக நடித்த அனிஷ்மா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.
இசை வெளியீடு நடந்த மண்டபத்திற்குள் நுழையும் போது திருமண மண்டபத்தில் நுழையும் போது இருக்கும் ரிசப்ஷன் போலவே இரண்டு பெண்கள் பன்னீர் தெளித்து, கற்கண்டு தந்து வரவேற்கிறார்கள். நாதஸ்வர மேளதாளங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டார்கள். மணப்பெண் கோலத்தில் அனிஷ்மாவும், மணமகன் கோலத்தில் ரிஷிகாந்த்தும் வந்து இறங்கினார்கள். அந்தப் பகுதியை கடந்து சென்ற பலர் இதை ஒரு நிஜமான திருமணம் என்று எண்ணிக் கொண்டார்கள்.
மக்களில் சிலர் 'சிறை படத்தில் நடிச்ச பொண்ணுக்கும் ரிஷிகாந்த்துக்கும் கல்யாணம் போல. இப்போ ஒரு படத்துல தான் நடிச்சது அதுக்குள்ள இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போகுதே' என்று சில பேர் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு சென்றதை காண முடிந்தது. இங்கே உள்ள டெக்கரேஷனை தாண்டி திருமணஅழைப்பிதழ் போல பத்திரிக்கை தயார் செய்து அனைவருக்கும் தந்தது தான் ஹைலைட். இந்த அழைப்பிதழ் பத்திரிக்கையில் ஹீரோ, ஹீரோயின் பெயர்கள் தயாரிப்பு நிறுவனம், எடிட்டர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் போன்ற பல தகவல்கள் இடம்பெற்று இருந்தது. இதெல்லாம் சரி படத்தின் தலைப்பு சற்று நெருடலாக இருக்கிறது என்று நமக்கு யோசனை வந்தது இந்த யோசனையை இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனரே தீர்த்து வைக்கிறார்.
இயக்குனர் ராஜா கருப்பசாமி பேசும்போது "இந்த படத்தின் தலைப்பு என்பது இந்த படத்தின் கதையுடன் தொடர்புடையது. இந்த படத்தில் எள்ளளவும் ஆபாசம், விரசமோ கிடையாது. இது ஒரு நாளில் ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை. இந்த டைட்டிலை ஏன் வைத்தேன் என்று படம் பார்க்கும்போது தெரியும். படத்தின் கதையை எழுதி விட்டேன். தலைப்பையும் வைத்து விட்டேன்.
ஆனால் இந்த தலைப்பில் நடிக்க நடிகர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவும் மக்களுக்கு தெரிந்த கலைஞர்களாக இருந்தால் இந்த தலைப்பை பற்றி எந்த சந்தேகமும் மக்களுக்கு வராது என உறுதியாக இருந்தேன். சிறை படத்தில் அனீஷ்மாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையையும், தலைப்பையும் சொன்னவுடன் இதில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன். சிறை படத்தில் எனக்கு எந்த பெயர் கிடைத்ததோ அந்த பெயர் இந்த படத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாக நம்பி வந்தார்.
ரிஷிகாந்த் பல படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழு ஹீரோவாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும். இது சரியான கதை தான். படத்திற்கான தலைப்புதான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று மக்களுக்கு பிடித்த இயக்குனர்களாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ஜமா, அன்பே டயான படங்களின் இயக்குனர் பாரி இளவழகன், இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றவர்களையும் இந்த விழாவிற்கு அழைத்து வந்துள்ளேன். இவர்கள் வந்து வாழ்த்தினாலே இது சரியான படம் என்று மக்களுக்கு புரிந்து விடும் என்பதே முக்கிய காரணம்" என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது, "இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்கள் சமுதாயத்தை பற்றி குடும்பத்தை பற்றி சிந்தனை படம் எடுக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சமீபத்தில் வந்த சிறை, அன்பே டயானா போன்ற படங்கள் இதற்கு சரியான உதாரணம் அந்த வரிசையில் மொத ராத்திரி படமும் இடம்பெறும்" என்றார்.
"சிறை படத்திற்கு பிறகு பல கதைகள் என்னை தேடி வந்தன. இந்த கதை எனக்கு பிடித்திருந்தது இப்படம் கண்டிப்பாக பெண்களுக்கும் பிடிக்கும். படம் பார்த்த பிறகு தலைப்பிற்கும் படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்" என்கிறார் ஹீரோயின் அனிஷ்மா.
"தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக தேவையான படம்" என்று உறுதி அளிக்கிறார் ஹீரோ ரிஷிகாந்த்.
மொத ராத்திரி விழாவிற்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு, திருமண விருந்து போன்று தலை வாழை இலை வைத்து விருந்து அளித்து தாம்பூல பை கொடுத்து அனுப்பினார்கள் பட குழுவினர். தலைப்பில் மட்டுமல்ல நிகழ்ச்சி நடத்துவதிலும் மாற்றி யோசித்து இருக்கிறது மொத ராத்திரி டீம்.
பாக்யராஜ் 'வீட்டில விசேஷங்க, சின்ன வீடு' போன்ற வித்தியாசமான டைட்டிலை படங்களுக்கு வைப்பார். உள்ளே உள்ள கதை பெண்களை கவரும் விதமாக இருக்கும். அதே போல இந்த தலைமுறையில் இந்த படத்தின் டைரக்டர் ராஜா கருப்பசாமி இன்னொரு பாக்கியராஜாக வரலாம் என்று எதிர்பார்க்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு விடை வரும் ஆகஸ்ட் 21 மொத ராத்திரி படம் ரிலீஸ் ஆகும் நாளில் தெரிந்துவிடும்.