

நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள் காதல், பிரிவு, தோல்வி, நம்பிக்கை, இயற்கை, தந்தை-மகள் உறவு, கிராமியக் குழந்தைப் பருவம் என பல பரிமாணங்களை ஆழமாகத் தொட்டவை. ‘கல்லறை மேலே பூக்கும் பூக்கள்’, ‘உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை’, ‘வெயிலோடு மல்லு கட்டி’ போன்ற வரிகள் பலரின் வாழ்க்கை அனுபவங்களாக மாறி, இறந்தும் வாழ்கிறார்கள் சிலரே என்ற உணர்வை உறுதிப்படுத்துகின்றன.
காதல், தாலாட்டு, அழுகை, ஆனந்தம், வலி... என அவர் எழுதிய பாடலின் வரிகள் பலருக்கு எனர்ஜி டானிக்.
ஒரு 'உருவத்தை' அடுத்த கட்டத்திற்கு பாடல் வரிகளின் வழியாக கொண்டு செல்லும் வித்தகர்.
பாடல்கள் ஒவ்வொன்றும்
உணர்வின் பரிமாறலை,
உறவுகளின் மேன்மையை
உறவுகளின் அருமை மற்றும் தேவையைப்
புரிய வைப்பவை.
இவரின் பாடல்கள் வலிகளுடன் கூடிய 'வலி நிவாரணி'.
"கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய்தான் சேராதே"
- இப்படி 'காதல் கொண்டேன்' படத்தில் பூக்களுக்கு அந்தஸ்து இல்லை என்று எழுதியவர்.
"கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்து விடுமா?"
- என 'காதல்' படத்தில் மாற்றி எழுதி இருப்பார்.
அதாவது அந்தப் பூக்களையும் வண்ணத்துப்பூச்சிகள் தேடிவரும் என்ற அர்த்தத்தில்...
இவரின் பெரும்பாலான காதல் பாடல்கள் இப்படியான தத்துவ வரிகளைக் கொண்டிருக்கும். அதில் ஒரு ஜீவன் இருக்கும்.
ஒவ்வொருபாடல்களின் வரிகளும் ஆன்மாவை ஊடுருவிச் செல்லும் .
அப்படிப்பட்ட ஒரு சில பாடல்கள்... அவற்றின் சில வரிகள்...
*"ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே..."
வரிகளில் ஜீவன்.
அதே பாடலில்
*"உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதைச் சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை "...
என்ற வரிகளில் காதலின் வலி...
அதே பாடலில்,
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்து உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்திரவதைதானே..."
என்று காதல் செய்து பிரிந்தால் வரும் வலியையும் நயம்பட சொன்னவிதம் வேற லெவல்.
*"உன் முகம் பார்த்தே
நான் எழுவேன்
உன் குரல் கேட்டால்
நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்ன ஆவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்..."
இந்த வரிகளில் காதல், சோகம், தனிமை ஏக்கம் இப்படி எல்லாம் நிரம்பி வழியும்.
(காதல் என்று இல்லை நட்பில் அற்ப காரணங்களுக்காக பிரிந்தவர்களுக்கு கூட இந்தப்பாடல் பொருந்தும்.)
ஒரே பாடலில் எத்தனை எத்தனை சங்கதிகள்... இது எல்லாம் நா.முத்துக்குமாரால் மட்டுமே சாத்தியம்.
இப்படி காதலை மிகவும் அழகான இனிமையான ஆழமான வரியில் புரிய வைத்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நினைவு தினம் இன்று.
*"கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை"
இது வெறும் பாடல் வரிகளா இல்லை... பலரின் காதல் வலிகளா?
*"காற்றின் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை..."
காதல் தோல்வியில் உள்ள வலிகளை எழுத்துகளாக தருவதில் கில்லி !
*"பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே ..."
உள்ளத்தின் உணர்வுகளை உலகிற்கு உணர்த்தும் உன்னத வார்த்தைகளால் எழுதப்பட்ட பாடலிது.
*"வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ...
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?...
உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே
என் நெஞ்சம் திண்டாடுதே"
காதலில் மூழ்கியவர்களுக்கும் காதலில் தோல்வி அடைந்த வர்களுக்குமான வரிகள்... பாடல் முழுதும்.
"உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி.
என் காதலும் என் ஆகுமோ ?
உன் பாதத்தில் மண்ணாகுமோ..."
காதல் என்றாலே சந்தோஷமும் வலியும் இரண்டும் சேர்ந்த ஒன்றுதான் என்பதை புரிய வைக்கும் வரிகள் .
* "காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்"...
மனதில் பழைய காதல் நினைவுகளை இதைவிட அழகான வார்த்தைகளில் சொல்லிட முடியுமா என்ன...?
*"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை.
ஆனால் அது ஒரு குறை இல்லை
அவள் பெரிதாக எதுவும் படித்ததில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை'...
காலம் காலமாக பெண்ணை வர்ணித்து எழுதிய கவிஞர்களிடமிருந்து விலகி முதல் அடியிலேயே "இல்லை " என்ற எதிர்மறையோடு பயணிக்கும் வார்த்தைகளை நிரப்(ம்)பிய பாடல்.
*"உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கு ஒரு பெயர் வைப்பேன்
உனக்கே தெரியாது"....
சட்டுன்னு பார்க்கும் ஒரு நபரின் மேல் வரும் காதலை, பெயர் தெரியாத காதலை... பெயர் வைத்து வார்த்தைகளில் தந்த விதம் அடேங்கப்பா ரகம்.
*"வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லு கட்டி
ஆட்டம் போட்டோமே"
பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் நம்பிக்கை தரக்கூடியவை தன் குழந்தை பருவத்தை நேசித்து இருந்தால் மட்டுமே இப்படி அழகான வரிகளைப் படைக்க முடியும். கிராமியக் குழந்தைகளின் வாழ்க்கை மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கும் பாடலின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆட்டோகிராப்.
தந்தையின் மீதான காதல் ... வார்த்தை ஜாலம் இல்லாமல் ...பாடலைக் கேட்கும்போது இதயத்தின் ஒரு மூலையில் அவரவர் தந்தையின் நினைவுகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.
*"ஆனந்த யாழை மீட்டுகிறாய்... (ஆனந்த யாழ்...அழகு)
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்..
இரு நெஞ்சம் இணைத்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை...
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
அடி கோயில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி! "
தந்தை மகள் உறவின் சிறப்பை, உணர்வை இந்தப் பாடலைவிட வேறு பாடலில் கொடுத்துவிட முடியுமா?
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று... முத்தம் முறையற்ற செயல் என்ற பிம்பத்தை அடித்து தூள் தூளாக்கியது இந்தப் பாடலின் வரிகள். காட்சிகளை உணர்ந்து எழுதியிருப்பார்.
ஆனந்த யாழை மீட்டப்படாத வீடு இல்லை .
"அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகு
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட அழகு
மலர் மட்டுமா அழகு
இலை கூட அழகு"
என பட்டியல் போட்டு இயற்கையோடு இணைந்து அழகோ அழகு என்று ஒரு பாடலில் கூறியிருப்பார்... கவலைகள் யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுவதும் அழகு எவ்வளவு தீர்க்கமா யோசித்து வரிகளைப்போட்டு இருப்பார்.
இப்படி நிறைய நிறைய அர்த்தம் பொதிந்த பாடல்களை தமிழுக்கு தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மேல்... என்றும் மாறாத அன்புடன் இருக்கும் பலரில் நானும் ஒருத்தி.
நீங்கள் இல்லை என்று நாங்கள் ஒருபோதும் எண்ணவில்லை உங்கள் பாடல் வரிகளின் மூலம் நித்தம் நித்தம் எங்கள் இல்லத்துக்குள் உள்ளத்துக்குள்...
இறந்தும் வாழ்கிறார்கள் சிலரே... அந்த சிலரில் ஒருவர் நா முத்துக்குமார்.
பத்தாம் ஆண்டு நினைவுப் புகழ் அஞ்சலி!