கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று ‘ஹாட் ஸ்பாட்’ என்ற படம் வெளியாள சமயம், அப்படத்தின் தியேட்டர் ரிசல்ட் தெரிந்துகொள்வதற்காக சென்னையில் உள்ள பிரபலமான தியேட்டர்களுக்குச் சென்றிருக்கிறார் பட இயக்குனர் விக்னேஷ் கார்த்தி. அங்கே சென்ற டைரக்டருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ திரைப்படம் அன்றைய தேதி வரை நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஹாட் ஸ்பாட்’ படத்துடன் இணைந்து வெளியான மலையாள படமான ‘ஆடு ஜீவிதம்’ படமும் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், ‘ஹாட் ஸ்பாட்’ ரசிகர்களை துளியும் கவரவில்லை. இதனால் உணர்ச்சி வயப்பட்ட ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் டைரக்டர் விக்னேஷ் கார்த்தி, "மலையா படம் எல்லாம் நம்ம ஊர்ல நல்லா ஓடுது. நான் நல்ல படம்தான் எடுத்துருக்கேன். இருந்தாலும் கூட்டம் குறைவாக இருக்கு. ‘ஹாட் ஸ்பாட்’ படம் பாருங்க. நல்லா இல்லைன்னா என்னை செருப்பால் அடிங்க" என்று உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார். டைரக்டர் இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசியதோடு நிற்காமல்,இரண்டு நாட்களுக்கு முன்பு ‘ஹாட் ஸ்பாட்’ படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் "படம் மக்களிடையே செல்வதற்குள் தியேட்டரிலிருந்து படத்தை எடுத்துவிடுகிறார்கள். மிகக் குறைந்த அளவு காட்சிகளே திரையரங்க உரிமையாளர்கள் எங்களைப் போன்ற சிறு படங்களுக்கு ஒதுக்குகிறார்கள்” என்ற மனக்குமுறலையும் கொட்டி உள்ளார் விக்னேஷ் கார்த்தி.
இன்னும் சொல்லப் போனால் இந்த 2024ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் ஓரிரு படங்களைத் தவிர பெரும்பான்மையான படங்கள் வசூலில் பின்னடைவைச் சந்தித்தப் படங்களே. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான சில படங்களுக்குப் பத்து பேர் கூட வராமல் காட்சிகளை ரத்து செய்து இருக்கிறார்கள். இதே நாளில் பகத் பாசில் நடித்து வெளியான ‘ஆவேசம்’, மற்றும் பிரணவ் மோகன் லால் நடித்து வெளியான ‘வருஷங்களுக்கு சேஷம்’ என இரண்டு மலையாள படங்களுமே தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக ‘ஆவேஷம்’ படத்தில் பகத் நடிப்பைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி கைதட்டி ரசிக்கிறார்கள். இந்த வெற்றியைப் பார்த்து பயமடைந்த சில தயாரிப்பாளர்கள் மலையாள படத்தை இங்கே ரிலீஸ் செய்யக் கூடாது என்று முணுமுணுக்கிறார்கள் .
மலையாள படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவது என்பது புதிது கிடையாது. ‘செம்மீன்’, ‘ஒரு சி பி ஐ டைரி குறிப்பு’, ‘கோட்டயம் குஞ்சஞ்சன்’, ‘சாணக்கியன்’, ‘த்ரிஷயம்’, ‘ப்ரேமம்’ என்று தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய மலையாள படங்கள் இங்கே உள்ளன. இப்போது என்ன பிரச்னை என்றால் தமிழ்ப் படங்களைத் தவிர்த்துவிட்டு, மலையாள படங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் .
ஒ டி டி என்ற தொழில் நுட்பம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தாலும், அதற்கும் அப்பார்ப்பட்ட சில முக்கிய, நிதர்சனமான காரணங்கள் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தங்களது படங்கள் பிற மாநிலங்களில் வெற்றி பெற சேட்டன்மார்கள் ஒரு புதிய சூட்சமத்தைக் கையாளுகிறார்கள்.
‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் கதை தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடைபெறுவதாக அமைந்திருக்கும். தமிழ் நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு இந்த தமிழ் நடிகர்களும் ஒரு காரணம்.
‘ஆவேசம்’ படத்தில் கதை பெங்களூரில் நடப்பதுபோல் உருவாக்கி உள்ளார்கள். கன்னட மொழி நடிகர்கள் சிலரும் படத்தில் நடித்துள்ளார்கள். எனவே கன்னட மொழி ரசிகர்களும் படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள ‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தின் கதை நம் கோடம்பாக்கத்தைச் சுற்றி நடக்கிறது. இதனால் இயல்பாகவே தமிழ் ரசிகர்கள் படத்திற்குள் வந்து விடுகிறார்கள்.
பிற மாநில களத்தில் கதை அமைத்து வெற்றி கொடி நாட்டுகிறார்கள் இந்த சேர நாட்டுகாரர்கள்.
மலையாள சினிமாவில் பட்ஜெட் என்பது மிக முக்கியமானது. அங்கே நடிகர்களுக்குச் சம்பளம் நியாயமாக வழங்கப்படுகிறது. இதனால் படத்தின் மேக்கிங்கிற்கு அதிக தொகை ஒதுக்கி நல்ல படங்களைத் தர முடிகிறது. இங்கே நம் தமிழ் நாட்டில் நிலைமை தலைகீழ். முதலில் அதிக அளவு சம்பளம் கேட்கும் நட்சத்திரங்களுக்கும், இசை அமைப்பாளருக்கும் தொகை ஒதுக்கிவிட்டு மிச்சம் மீதி இருக்கும் பணத்தில் படம் எடுக்கிறார்கள். இதனால் கதைக்கான படத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்த முடிவதில்லை.
ஆரம்ப காலத்திலிருந்தே மலையாள சினிமாவானது எழுத்தாளர்களை மிகவும் கௌரவமாக நடத்தி வருகிறது. நல்ல எழுத்தாளர்கள் திரைக்கதை எழுதுகிறார்கள். வேறொருவர் இயக்குகிறார். நல்ல வசனங்களை மலையாள சினிமா தருகிறது. இங்கே எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் இன்னும் இருக்கும் துறைகளெல்லாம் தனது பெயரில் போட்டுக்கொள்கிறார் ஒரே ஆசாமி! சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதை இங்கே இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை .
மலையாளத்தில் கலைஞர்கள் ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் எளிமையாக பழகுகிறார்கள். இதனால் நல்ல விவாதங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இங்கே ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே நமது தமிழ் ஆர்டிஸ்டுகள் "நான் ரொம்ப பிசி" என்ற ரேஞ்சில் நாட் ரீச்சபிளாகி விடுகிறார்கள்." போன் வயர் பிஞ்சு நாலு நாள் ஆச்சு நாராயணா " என்று நமக்கு மைண்ட் வாய்ஸ் ஒலிக்க செய்து விடுகிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.
பல்வேறு ஜாம்பவான்கள் ,பல வெற்றி திரைப்படங்கள் தந்தது நம் தமிழ் சினிமாதான். ஆனால், இன்று தமிழ் படங்கள் ரசிகர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலர் படித்தவர்கள். நகர் மயமாக்கலால் தமிழ் சமூகம் மாறி வருகிறது. இதையெல்லாம் தமிழ் டைரக்டர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.
இதை தமிழ் டைரக்டர்கள் மனதில் வைத்து படம் எடுத்தால்தான் இனி தமிழ் சினிமா மெல்ல எழுந்து நிற்கும். இல்லையெனில் மலையாள சினிமா ஆதிக்கத்தால் "சேர நன்னாட்டிளம் படங்களுடனே" என்றுதான் பாட வேண்டி இருக்கும் .