தமிழ் சினிமாவில லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்தி திரையுலகிலும் தனது முத்திரையை பதித்தார்.
நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பியோண்ட் தி ஃபேரி டேல்' என்ற ஆவணப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த ஆவணப் படத்தில் 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரௌடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த நயன்தாராவும், விக்னேஷும் தனுஷிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் ட்ரெய்லரில் நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் (மூன்று நொடிகள்) வீடியோவை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதால் நயன்தாராவிற்கு எதிராக ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த சம்பவங்கள் அப்போதைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாரா ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சந்திரமுகி படக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த காட்சிக்கு நயன்தாரா தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ளதாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்த் திரையுலக கண்காணிப்பாளர் மனோபாலா விஜயபாலன் தனது X தள பக்கத்தில் NOC ஐ பகிர்ந்துள்ளார். மேலும் Netflix ஆவணப்படத்தில் சந்திரமுகியின் குறிப்பிட்ட காட்சிகளைப் பயன்படுத்துவதில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காது என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும் அந்த சான்றிதழில், "Nyanthara: Beyond the Fairy Tale நெட்ஃபிக்ஸ் தொடரில் மேற்கூறிய வீடியோ காட்சிகளை பயன்படுத்த, மீண்டும் உருவாக்க, விநியோகிக்க அல்லது துணை உரிமம் பெற ரவுடி பிக்சர்ஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனுஷின் சட்டப்பூர்வ அறிவிப்பிற்குப் பிறகு, தன்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மற்றும் அவர்களின் திரைப்படங்களின் கிளிப்களைப் பயன்படுத்தியதற்காக NOC (ஆட்சேபனை இல்லா சான்றிதழ்) வழங்கியவர்கள் என நயன்தாரா ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார். இந்த பட்டியலில் ஷாருக்கான், சிரஞ்சீவி போன்ற குறிப்பிடத்தக்க பெயர்களும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் படத்தை தயாரித்த சந்திரமுகி தயாரிப்பாளர் ராம்குமார் கணேசனும் அடங்குவர்.
இது ஒருபுறமிருக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பிரான்சில் கொண்டாடி முடித்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் குடும்பம் நியூ இயர் கொண்டாட்டத்தை துபாயில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் தனது 2 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் வீடியோவையும், புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பகிர்த்துள்ளார்.