
சமீபத்தில் பார்த்து ரசித்த திரைப்படம் 8AM Metro என்கின்ற ஹிந்தி திரைப்படம்.
இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ் ரச்சகொண்டா இயக்கியுள்ளார். குல்ஷன் தேவையா மற்றும் சயாமி கெர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வசனங்களும், அழகான கவிதைகளும் இத்திரைப்படத்தை ரசிக்க வைக்கின்றன.
ஆண், பெண் நட்பு பல இடங்களில், பல தளங்களில் பேசப்பட்டு இருந்தாலும், இத்திரைக்கதை நட்பிற்கு ஒருவித அழகை சேர்த்திருக்கிறது.
புத்தகங்களை நேசிக்கும் கதாநாயகனாக நடித்துள்ள குல்ஷன் தேவையா, அவ்வப்போது கூறும் பழங்குடிகளின் கதைகள் அருமை.
நடிப்பில் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் , உடைந்து அழும் கதாநாயகனின் நடிப்பு ஒரு படி கூடுதலாக இருக்கிறது.
இலக்கியம், கதைகள், கவிதைகள் என்ற ரசனைகள் உள்ளவர்களுக்குக் கட்டாயம் இத்திரைப்படம் ஒரு விருந்து தான்.
இரண்டே வார நட்பு பிரிகிறது. நட்பில் இருவரின் வாழ்க்கையைப் பற்றிய அச்சங்கள் விலகுகிறது. பிரிய வேண்டிய நிலை. மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லை.
நாயகன் அளித்த தைரியத்தில், தன் இளவயதிலிருந்து அனுபவித்து வந்த அச்சங்களை புறந்தள்ளி, கதைகளையும் கவிதைகளையும் எழுதி வெளியிடுகிறாள்.
எப்படியாவது என்றாவது ஒரு நாள் அதை அவன் படிப்பான் என்ற நம்பிக்கையில்..
அது அவன் கைக்குச் சென்றடைகிறது. அதில் அவள் அவர்கள் இருவரின் நட்பைப் பற்றி எழுதியிருப்பாள்.
கடைசியில் அவள் எழுதிய வரிகள் அற்புதம்...
உனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனத் தோன்றினால், செய்து கொள். நான் தடுக்கப் போவதில்லை. ஆனால் உன்னோடு சேர்ந்து என் ஆன்மாவும் இறந்து போய்விடும்...
மனிதர்கள் அவ்வளவு எளிதில் தங்களைப் பற்றிய உண்மைகளை அடுத்தவர்களிடம் கூறிவிடுவதில்லை. அடுத்தவர்களின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்பதுதான் திரைக்கதையின் அடித்தளம். யாரும் ஒருவரை ஒருவர் குறை காணும் முனைப்புடன் இல்லாமல் இருந்தாலே, வாழ்க்கை என்பது அழகானதாக இருக்கும் என்பதை வசனங்களின் மூலமாக கூறியது அருமை.
Very decent and well taken movie!