சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் இணைந்து நடித்த க்ரிஷ், ரோட்டில் அடிபட்டு உயிருக்கு போராடியவரை சூர்யா காப்பாற்றிய கதையை பற்றிக் கூறியிருக்கிறார்.
தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் சூர்யா. சூர்யாவின் படம் சமீபக்காலமாக அவ்வளவாக வெளியாகாமல் இருந்து வந்தது. பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் திரைக்கு வந்தது. இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருந்தது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் இருந்தன.
ஆனால், வசூல் ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தைப் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள். இனி சூர்யா அவ்வளவுதான் போல என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், சிலர் இப்படத்தை விரும்பவே செய்தார்கள் என்பதும் உண்மை.
எப்படியானாலும் ஒரு மாஸ் கம்பேக் கொடுத்து விமர்சகர்களின் வாயை அடைப்பேன் என்பதுபோல், நேற்று சூர்யா படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ரீட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் கண்டிப்பாக சூர்யா கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில், பிரபல பாடகர், மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் க்ரிஷ், சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.
சிங்கம் 3 படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் பேசியிருக்கிறார்.
"சிங்கம் 3 ஷூட்டிங் நெல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து நானும் சூர்யாவும் காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது ரோட்டில் ஒருவர் அடிபட்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். சுற்றி உள்ளவர்கள் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த சூர்யா காரை நிறுத்தச்சொல்லி அடிபட்டு இருந்தவரை காரில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்.
காரில் சென்றுக்கொண்டிருக்கும்போதே அடிபட்டவருக்கான சிகிச்சை குறித்து தனது நண்பரிடம் போனில் பேசிவிட்டார். உரிய நேரத்தில் ஹாஸ்பிடலில் சேர்த்து அந்த நபரின் உயிரை காப்பாற்றினார் சூர்யா. அப்போது சூர்யா கூறுகையில், ஒருவர் அடிபட்டு இருப்பதை பார்த்து சும்மா விட்டுட்டு போகமுடியாது. இதுபோல தான் கார்த்தி கல்லூரியில் படிக்கும்போது ரோட்டில் அடிபட்டு கிடந்தார். அப்போது ஒருவர் அவனைக் காப்பாற்றினார். அதனால்தான் இன்று அவன் உயிரோடு இருக்கிறான் என்று சொன்னார்” என்று க்ரிஷ் பேசினார்.