
பத்த பத்மாசனம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இங்கு 'பத்த' என்றால் 'கட்டப்பட்ட' அல்லது 'பூட்டப்பட்ட' என்று பொருள். 'பத்ம' என்றால் 'தாமரை' என்றும் 'ஆசனம்' என்றால் 'போஸ்' என்றும் பொருள். இதனால் இந்த ஆசனம் பத்த பத்மாசனம் அல்லது பூட்டப்பட்ட பத்மாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் உட்கார்ந்த நிலையில் இந்த ஆசனம் செய்வதால் ஆழ்ந்த தியானப் பயிற்சிகளுக்கு இது சிறந்த ஆசனமாகும்.
இந்த ஆசனத்தை ஒருவர் அதிகாலையில் காலை உணவுக்கு முன் மற்றும் மாலையில் உணவு சாப்பிட்ட பின்னர் 3 முதல் 4 மணி நேரம் கழித்து பயிற்சி செய்யலாம்.
பயன்கள்
* இந்த ஆசனத்தை தவறாமல் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இதயம், கல்லீரல், வயிறு மற்றும் நுரையீரலின் பலவீனத்தை போக்கி அவற்றை பலப்படுத்தும். மேலும் கல்லீரல் மற்றும் நுரையீரலில் உள்ள நச்சை நீக்க சிறந்த ஆசனம் இதுவாகும்.
* இந்த ஆசனம் செய்யும் போது கால்கள் மற்றும் கைகள் நன்கு இழுக்கப்படுவதால் தோள்கள், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
* இந்த ஆசனம் செய்யும் போது உங்கள் முழங்கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால்கள் நன்கு அழுத்தப்படுவதால் கால்களுக்கு நல்ல வலிமையும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கிறது. மேலும், இந்த ஆசனம் கணுக்கால் அல்லது முழங்கால் மூட்டுகளின் வலியைப் போக்க உதவுகிறது.
* அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த ஆசனம் செய்து வந்தால் நிவாரணம் கிடைப்பது உறுதி.
* இந்த ஆசனம் இடுப்பு பகுதிக்கு நல்ல நீட்சியை அளிக்கிறது, இதனால் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.
* இந்த ஆசனம் செய்யும் போது வயிறு நன்கு அழுத்தப்படுவதால் பெருங்குடலில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை கீழே தள்ளுகிறது. எனவே, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
செய்முறை
விரிப்பில் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்.
பின்னர் வலது காலை மடக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்க வேண்டும். அதேபோல் இடது காலை மடக்கி வலது தொடையில் ஒட்டினாற்போல் வைத்து கொள்ள வேண்டும். இந்த ஆசனம் செய்யும் போது நிமிர்ந்த நிலையில் அமர வேண்டும். கூன் போடக்கூடாது.
இப்போது உங்கள் வலது கையை உங்கள் முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று வலது கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உங்கள் வலது காலைப் பிடிக்கவும்.
அதேபோல் உங்கள் இடது கையை உங்கள் முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று இடது கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உங்கள் இடது காலின் கால்விரலைப் பிடிக்க வேண்டும். இந்த நிலையில் கண்களை மூடியபடி மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக விட வேண்டும். இவ்வாறு 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை செய்ய வேண்டும். பின்னர் கால்களை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை மூன்று முறை செய்ய வேண்டும். பத்மாசனம் நன்றாக வருபவர்களுக்கு இந்த ஆசனம் நன்றாக செய்ய வரும்.
இந்த ஆசனத்தில் தேர்ச்சி பெற தொடர்ந்து 6 மாதங்களுக்கு தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும்.
எச்சரிக்கை :
* கணுக்காலில் காயம் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
* மேலும், நீங்கள் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை ஏதாவது செய்திருந்தாலும் இந்த ஆசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
* நீங்கள் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டால் நிச்சயமாக இந்த ஆசனத்தை முயற்சிக்காதீர்கள்.
* யோகா பயிற்சியாளரின் மேற்பார்வையில் மட்டுமே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
* இந்த ஆசனம் செய்யும் போது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாதவிடாய் சமயத்தில் தவிர்ப்பது நல்லது.
* கீழ் முதுகு, தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டில் காயம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.