

இனிது இனிது காதல் இனிது. சொல்லும் போதும், எழுதும் போதும். இந்த காதல் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முன்னுரையாக சில விஷயங்களை சொல்லத் தொடங்கும்.
அதை கவியரசர் : "காதலுக்கு ஜாதியில்லை, மதமுமில்லையே... கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே.. வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே..." என்று அழகாக பாடியிருப்பார்.
"சொல்லாமலே யார் பார்த்தது... நெஞ்சோடுதான் பூ பூத்தது... மழை சுடுகின்றதே அட அது காதலா... தீ குளிர்கின்றதே அட இது காதலா... இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா..." - என்று பழநிபாரதியும் மிக அழகாக சொல்லி இருப்பார்.
காதல் குறிப்பிட்ட வயதில் தோன்றுவதா...இல்லை.. எப்போது வேண்டுமானாலும் அது மலரும். சில மரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூத்து காய்த்து சுவையான கனிகளை தரும். ஒரு சில மரங்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு காய்க்கும்.
காதல் இளமைக்காலத்தோடு மட்டும் தொடர்புடையதா... இல்லை...எப்போது வேண்டுமானாலும் அது மலரும். அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் 'முதல் மரியாதை'.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி அவர்கள் எழுதிய 'குற்றமும் தண்டனையும்'என்ற நாவல் உருவான விதத்தை அடிப்படையாக வைத்து தான் ஆர்.செல்வராஜ் அவர்கள் 'முதல் மரியாதை' கதையை உருவாக்கினார்.
இந்த கதையை எழுதும் போது அவருக்கு உதவியாளராக ஒரு பெண் இருந்தார். இவரோ முதியவர், அவளோ இளம்பெண். நாளடைவில் அவர் எழுத்தில் மயங்கி அந்த பெண் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இந்த ஒன்லைன் வைத்துக் கொண்டு செல்வராஜ் நடிகர் திலகம், ராதா கேரக்டர்களை உருவாக்கி மிகப்பெரிய காவியம் உருவாக காரணமானர்.
முதியவர், இளம் பெண் இடையேயான காதல் முள் மேல் நடப்பது போல. அதை பாரதிராஜா அவர்கள் அற்புதமாக இயக்கி இருப்பார். அதுவரையில் பார்த்த சிவாஜி வேறு அந்த படத்தில் பார்த்தது வேறு.
கப்பலோட்டிய தமிழனாய்... கட்டபொம்மனாய்... வாழ்ந்து காட்டிய சிவாஜி கணேசன் அவர்கள், இந்த படத்தில் இல்லை. முற்றிலும் மாறுபட்ட புதியவரை பார்த்தோம். இந்த படம் சிவாஜி படம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட தோன்றாமல் இயக்கி இருப்பார் பாரதிராஜா. இதுவும் என் படம்தான்... இதுவும் என்னோட இன்னொரு பக்கம் தான் என்று நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டி நடிகர் திலகம் தான், தான் என்பதை நிரூபித்து இருப்பார்.
மாமனுக்காக விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு விலகி வாழும் ஊர் பெரியவராக சிவாஜி. அந்த ஊருக்கு வரும் மீன்காரி ராதா. இவர்கள் இடையே தோன்றும் நட்பு எப்படி காதலாக மாறுகிறது என்பதை அற்புதமாக காட்டி இருப்பார் இயக்குநர்..
'வெட்டி வேரு வாசம்' பாடல் ஆரம்பமாகும் முன்பு ராதா காயம்பட்ட அவர் கைகளுக்கு மயிலிறகால் எண்ணெய் தடவி விடுவார். அதுவரையில் பெண் அன்பை... ஸ்பரிசத்தை பாத்திராத அவர் முதல் முறையாக அதை உணரும் போது அவருக்குள் ஏற்படும் மாற்றங்களை... மிக மிக அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். அதனால் தான் அவர் என்றும் நடிகர் திலகம். ராதாவும் தன் பங்குக்கு அழகாக அதை வெளிப்படுத்துவார். இதுதான் உண்மையான காதல் என்று இயக்குநர் சொல்லாமல் சொல்லி இருப்பார்.
வாழ்க்கையில் அதிகம் காயம்பட்ட மனிதர்களுக்கு காதல் மட்டுமே சிறந்த மருந்து என்பதை நடிகர் திலகம் இந்த படத்தில் வாழ்ந்து காட்டி இருப்பார். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. மனசு ஒன்றானால் எந்த வயதிலும் காதல் வரும். வைரமுத்து அவர்களும் தன் பங்குக்கு : 'வெட்டி வேரு வாசம்...வெடலப்புள்ள நேசம்...என்ற வரிகளால் அந்த காதலை வர்ணித்திருப்பார்.
காதல் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை இதில் காட்டி இருப்பார் நடிகர் திலகம். முதல் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணரும் போது முகத்தில் காட்டும் உணர்ச்சி ரசிக்கும்படி இருக்கும்.
கிளைமாக்ஸ் காட்சியில் சிறையில் இருந்து வெளியே வரும் ராதா உடல் நலமில்லாமல் படுத்திருக்கும் அவரின் வீட்டுக்குள் காலெடுத்து வைக்கும் போது அவருக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அதுதான் காதல். தன் இதயம் தன்னை தேடி வந்துவிட்டது என்ற காரணத்தால் ஏற்பட்ட உணர்வு.
'காதல் என்பது ஒரு ஃபீலிங். அது ஒரு தடவ வந்துச்சுன்னா அவ்வளவுதாங்க.' - பூவே உனக்காக கிளைமாக்ஸ் டயலாக்..இங்கிருந்து தான் உருவாகி இருக்கும். அந்த ஃபீலிங்கை காட்டியவர் நடிகர் திலகம் மட்டுமே.
'இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்... சுகமாய் வலிக்குது இது என்ன காயம்' பழனி பாரதி அவர்களின் அற்புதமான வரிகள் சொல்வது, நழுவும் இதயங்கள் வயது பார்ப்பதில்லை.... மனசை மட்டுமே. அதுதான் காதல்.