விமர்சனம்: நரிவேட்டா - எளிய மக்கள் மீதான அரசின் வேட்டை
ரேட்டிங்(3 / 5)
'சுதந்திர இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள், போராடும் மக்களை, குறிப்பாக பழங்குடி மக்களை, லத்திகளாலும், துப்பாக்கி குண்டுகளாலும் ஒடுக்கி உள்ளன. இது போன்று கேரளாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு வெளிவந்துள்ள படம் தான் 'நரிவேட்டா'. டொவினோ தாமஸ், சேரன் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கி உள்ளார்.
படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார் டொவினோ தாமஸ். போலீஸ் கான்ஸ்டெபில் வேலை கிடைக்கிறது. அம்மாவின் வற்புறுத்துதலால் வேண்டா வெறுப்பாக போலீஸ் வேலைக்கு செல்கிறார். வேலையில் சூரஜ் வெஞ்சாரமூடு நண்பனாகிறார். வயநாடு பகுதியில் பழங்குடி மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவதால் அதை அடக்க, அரசு போலீஸ் படை ஒன்றை அனுப்புகிறது. இந்த படையில் டெவினோவும், சூரஜ்ஜூம் இருக்கிறார்கள். காவல் துறை உயரதிகாரி சேரன் இந்த படையை வழிநடத்துகிறார்.
அரசு - பழங்குடியினர் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிகிறது. மர்மமான முறையில் சூரஜ் கொல்லப்படுகிறார். இதற்கு காரணம் இந்த போராட்டத்திற்கு பின் புலமாக மாவோயிஸ்டுகள் இருப்பதாக அரசும், காவல் துறையும் முடிவு செய்கிறது. முடிவு செய்து விட்டு என்ன செய்தார்கள் என்று சொல்கிறது நரிவேட்டா.
படத்தின் முதல் பாதி காதல், டூயட், கேரளாவின் படகு சவாரி என்று மெதுவாக சென்றாலும் ரசிக்க முடிகிறது. அடுத்த பாதி அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, காவல் துறையின் சித்ரவதை என்று செல்கிறது. படத்தின் கதைகளம் கேரளாவாக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் இந்த சம்பவங்கள் பொதுவானது என்ற உணர்வு தருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சம்பவம், 1999 ஆம் ஆண்டு நெல்லை மாஞ்சோலை தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பலர் இறந்தது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது காவல்துறையினர் மலைவாழ் மக்கள் மீது நடத்திய கணக்கில் அடங்கா கொடுமைகள் ஆகியவை நம் நினைவுக்கு வந்து செல்கின்றன.
இந்த படத்தின் ஹீரோ டெவினோவாக இருந்தாலும் நடிப்பில் அனைவரையும் விட சபாஷ் சொல்ல வைப்பது சேரன் தான். அமைதியான ஹீரோவாக பார்த்த சேரனை சேட்டன்கள் வில்லனாக திரையில் காட்டி உள்ளார்கள். அமைதியாக மக்களிடம் பேசி சைலன்ட்டாக வன்முறையை கட்டவிழ்த்து விடுவது என மாறுபட்ட வில்லனாக சேரன் நடித்துள்ளார். பழங்குடியினர் ஒருவரை காவல் துறையினர் கொடூரமாக அடிக்கும் போது ஒரு ஸ்மைல் விடுவார் பாருங்கள் 'இது நம்ம சேரனா?' என நாம் ஆச்சரியப்படுகிறோம்.
"இந்த துப்பாக்கிக்கு வேலை தர கூடாதுன்னு தினமும் சாமியை வேண்டிக்குவேன்" என சூரஜ் வெஞ்சாமரமூடு சொல்லும் போது ஒரு மனசாட்சி உள்ள போலீஸ்காரரை கண் முன் கொண்டு வருகிறார். கொஞ்சம் பயம், இயலாமை, ரொமான்ஸ் என சரியாக தந்து நடித்திருக்கிறார் டொவினோ தாமஸ். கோட்டயத்தின் அழகையும், வயநாடுக்கு பின்னால் இருக்கும் சோகத்தையும் மிக நேர்த்தியான ஒளிப்பதிவில் தந்துள்ளார் விஜய். பிஜாய்யின் இசை ரொமான்ஸ், துயரம் என இரண்டு உணர்வுகளையும் சரியாக சொல்லி உள்ளது.
வளர்ச்சி என்ற பெயரில் பூர்வீக மக்களை அவர்களின் பகுதியில் இருந்து அரசுகள் வெளியேற்ற முயற்சி செய்கின்றன. இந்த மக்கள் வெளியேற மறுத்து போராட்டம் செய்தால் தீவிரவாதிகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி அரசுகள் துப்பாக்கி குண்டுகளை பரிசாகத் தருகின்றன.
மேலும், 'தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, நக்சல்கள் காவல் துறையினரால் என் கவுன்டர் செய்யப்பட்டனர்' போன்ற செய்திகளை மீடியாவில் பார்க்கும் போது கொல்லப்பட்டவர்கள் உரிமைக்காக போராடிய அப்பாவி மக்களாக இருப்பார்களோ என்ற பயமும் நமக்கு வருகிறது.
நரிவேட்டா - 'எளிய மக்கள் மீதான அரசின் வேட்டை'