

காதல்தான் உலகின் உயிர்நாடி! அந்தக் காதலால்தான் இந்த உலகம் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான்,
“காதல்… காதல்… காதல்…
காதல் போயின் காதல் போயின்
சாதல்… சாதல்… சாதல்!.."
என்றார்கள் நம் அரும்பெரும் புலவர்கள்.
கதைகள்,கவிதைகள்,நாடகங்கள்,திரைப்படங்கள் என்று அத்தனையிலும் உயிரோட்டமாய் நிலவுவது காதலே.”இரு உயிரினங்களிடையே ஏற்படும் ஆழமான பாசம்,ஈர்ப்பு, அக்கறை மற்றும் பிணைப்பைக் குறிக்கும் ஓர் உன்னத உணர்ச்சியே காதல் என்றழைக்கப்படுகிறது”.
அன்பு,நேசம்,பாசம்,பற்று,பிரியம்,மோகம்,மையல் ஆகியவை ஒத்த பொருளுடைய வெவ்வேறு சொற்கள்.காதல் என்பது வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பாக மட்டுமில்லாமல் மனங்களையும் பிணைக்கும் உறவாகவும்,தன்னலமற்ற விசுவாசம் மற்றும் போற்றுதலை உள்ளடக்கியதுமான ஒரு புனிதமான,உணர்வு மயமானதுமாகும்.
இந்த இலக்கணங்களுக்கெல்லாம் உட்பட்ட ஒரு காதல் கதைதான் 1962 ஆம் ஆண்டு வெளியான,ஶ்ரீதர் இயக்கிய,ஜனாதிபதி விருதுபெற்ற ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படமாகும்.படம் மட்டுமல்ல.பாடல்களும்கூட இறவாப் புகழ் பெற்றவைதான்.
இரண்டே பாடல்களில் காதலின் நிரந்தரத்தையும்,நாயகன்-நாயகியின் மனநிலையையும் படம் பிடித்துக் காட்டும் வித்தையை அவர்கள் எங்கு கற்றார்களென்றே தெரிய வில்லை.சுமார் 60 வருடங்களை நெருங்கினாலும்,அதன் பிறகு காதலை மையமாகக் கொண்டு எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும்,வானில் நிலைத்த வெள்ளி போல,இன்றைக்கும் ஒளி விட்டுப் பிரகாசிப்பது ‘முரளி(திரு கல்யாண் குமார்)- சீதா (திருமதி தேவிகா)’காதல் தான்.
இருவருமே இந்த உலகில் இப்பொழுது இல்லையென்றாலும் அவர்களுக்கு அழிவென்பதே இல்லை.தமிழ்த் திரையுலகம் வாழும் வரை அவர்கள் காதலும்,பெயர்களும் நிலைத்தே நிற்கும்.
திரைக்காதல் என்றால் சீதா-முரளி;சரித்திர நாவல் காதலென்றால் குந்தவை-வந்தியத்தேவன்;சமூக நாவல் காதலென்றால் பூரணி-அரவிந்தன் ஆகியோர் முந்திக் கொண்டு மனத்திரையில் நிழலாடுவதை, மறக்கவே முடியாதே!எத்தனை பார்த்தாலும்,எவ்வளவு படித்தாலும்,அடித்தளமாய் ஆழ்மனதில் பதிந்து கிடப்பது இவர்கள் காதலன்றோ!
காதலின் ஏழு வகைகள் :
மனிதக் காதலை ஏழு பெரும் பிரிவுகளாக நம் முன்னோர் பிரித்து வைத்துள்ளனர்:
ஈரோஸ்(Eros) - ஆரம்பக் கட்டத்தில் காணப்படும் தீவிரமான உணர்ச்சி மிக்கது.
பிலியா(Philia) - உறவுக் குடும்பங்கள்,நட்பு வட்டாரத்தினரிடையே ஏற்படுவது.
லூடஸ்(Ludus) - விளையாட்டுத்தனமான,வேடிக்கை நிறைந்த, பொறுப்பற்றது.
பிராக்மா(Pragma)-அர்ப்பணிப்பு,புரிதல்,ஆழம் நிறைந்து, நீண்டகாலம் தொடர்வது.
அகப்பே(Agape)-எல்லையற்ற,தன்னலமற்ற,துணைக்கு மதிப்பளிக்கும் உயர்வகை இது.
பிலவுடியா(Philautia)-தன்னை நேசித்து மற்றவர்களையும் நேசித்தல்.
காமக் காதல்(Mania)-அதீத பாலியல் ஈர்ப்பு,உணர்ச்சி வேகத்தில் வெறித்தனம்.
முரளி-சீதா காதல் பிராக்மா மற்றும் அகப்பே வகைகளைச் சார்ந்தது.‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்துவதே இதன் சிறப்பு.
தியாகத்தின் உச்சம் :
தன் காதலி வேறொருவருக்கு மனைவியான பின்பும், "ஏற்றிய தீபம் நிலைபெற வேண்டும், இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும், போற்றும் கணவன் உயிர்பெற வேண்டும்" என அவளது கணவனைக் காப்பாற்றத் துடிக்கும் முரளியின் பண்பு உன்னதமானது. ஊண் உறக்கமின்றி மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு, "சீதா! உன் கணவரைக் காப்பாற்றிவிட்டேன்! உனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்!" என்று கூறிவிட்டு, டாக்டர் முரளி அவள் முன்பாகவே மயங்கி விழுந்து உயிர் துறக்கும் காட்சி, கல்நெஞ்சையும் கரைய வைக்கும்.
“எங்கிருந்தாலும் வாழ்க!
உன்இதயம் அமைதியில் வாழ்க!
மஞ்சள் வளத்துடன் வாழ்க!
உன்மங்கலக் குங்குமம் வாழ்க!”
கல்லூரி வாழ்க்கையில் காதலித்தவர்கள் பிரிந்து போய்விடுகின்றனர்.வருவதாக சொல்லிச் சென்றவள் வரவேயில்லை!இருந்தாலும் மேற்கண்டவாறு அவன் வாழ்த்துகிறான் அவளை!மேலும் சொல்கிறான் சென்ற நாட்களை எண்ணிச் சிறப்புடன் வாழ்வதாக!
“இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினைத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க!”
காத்திருந்தவனைத் தேடி காதலி வந்து விட்டாள்!எப்படி வந்திருக்கிறாள்?எந்தக் கோலத்தில் வந்திருக்கிறாள்?
“வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்!
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க!”
தனிமையில் உனக்காகக் காத்துக்கிடந்த என்னைத் தேடி வந்த என்னுயிரே!
துணைவருடன் வந்து அதிர்ச்சியளித்த நீ,அவரைக் காப்பாற்றும் பொறுப்பையும்
கடமையையும் தந்து,உன் தூய்மையை நிரூபித்து விட்டாய்!நீ தூயவள்!
“ஏற்றிய தீபம் நிலைபெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர்பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க!”
உன் கணவன் உயிர் பெற்று எழுந்தால்தான் உன் மனத்தில் ஒளி வீசி உன் மன வீடு மங்கலமாகத் திகழும் என்பதை நான் அறிவேன்.அதற்காக நான் எதையும் செய்வேன்!ஆம்!எதையும்!…இந்தப் பிறவியையும் அதற்கென அர்ப்பணிப்பேன்!ஏனெனில் நீ என் பொன் மகள்!
ஊண் இன்றி உறக்கமின்றி,அத்தனை மருத்துவ ஆய்வறிக்கைகளையும் அலசி ஆராய்ந்து,அவள் கணவனைக் காப்பாற்றிய களிப்பில் அவளைத் தேடி ஓடி வருகிறான்!
கதவைத் தட்டிக் கதறிப் பரிதவிக்கிறான்!தாமதமாக, பயத்துடன் கதவைத் திறக்கும்
அவளிடம் “சீதா! உன் கணவரைக் காப்பாற்றிட்டேன் சீதா!உனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட்டேன் சீதா!”
சொல்லி விட்டு டாக்டர் முரளி அவள் முன்பாகவே மயங்கி விழுந்து உயிர் விடுகிறார்!
நம் இதயங்கள் ஆற்றொணாத் துயர அலைகளில் தள்ளாடுகிறது.ஓர் உண்மைக் காதலைத் திரையில் கண்ட உணர்ச்சிப் பெருக்கு உடலெங்கும் பரவுகிறது!
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை!”
தற்காலக் காதலர்கள்,நேரம் ஒதுக்கி ஒரு முறையாவது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் பாருங்கள்!முழுப்படத்தையும் பார்க்க நேரமில்லையென்றாலும் க்ளைமேக்சின் கடைசிச் சில நிமிடங்களையாவது பார்க்க முயலுங்கள்.அது உங்கள் ஆத்மாவிற்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்!