
அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து வந்த காலம் எல்லாம் மாறி இப்போது இளம் இயக்குனர்கள், அறிமுக இயக்குனர்களுக்கு முன்னனி ஹீரோக்கள் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படம் குறித்து தினந்தோறும் புதிய புதிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினி-லோகேஷ் காம்போ முதல் முறையாக சேர்ந்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
2017-ம்ஆண்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி, விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் படத்தையும், தொடர்ந்து விஜயை வைத்து லியோ படத்தையும் இயக்கியதன் மூலம் முன்னனி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் உருவான அனைத்து படங்களும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இதனால் கூலி படமும் வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான 'கூலி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சுருதிஹாசன், ஃபகத் ஃபாசில், ரெபே மோனிகா ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் பான் இந்தியாவாக வெளியாக உள்ள இந்த திரைப்படம் இந்தி தவிர மற்ற மொழிகளில் ‘கூலி’ என்ற பெயரிலேயே வெளியாக உள்ளது. சமீபத்தில், கூலி திரைப்படத்தின் இந்தி பதிப்பிற்கு ‘மஜதூர்’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பெயர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பதால் படக்குழு இந்த பெயரை ‘கூலி - தி பவர் ஹவுஸ்’ என மாற்றப்பட்டது.
ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற மோனிகா, கூலி டிஸ்கோ, சிக்கிட்டு, பவர்ஹவுஸ் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
ஆனால் இந்த படத்தின் பாடல்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் டீசர் மற்றும் டிரைலர் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று கேட்டு வந்த நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ள
கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 2-ம்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இப்படத்தின் டிரைலரும் அதே நாளில்(ஆகஸ்ட் 2ம்தேதி) வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் 2-ம்தேதி கூலி படத்தின் டிரைலர் ரிலீஸ் மற்றும் இசை வெளியீடு இரண்டும் நடக்கும் என கூறப்படுகிறது.