
சினிமா என்பது ஒரு கேளிக்கை. அதன் மூலம் நல்ல பல கருத்துகளை சொல்லும் ஆற்றல் பலரிடம் இருப்பதில்லை. அந்த விஷயத்தில் சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன், வில்லுப்பாட்டு, நாடகம், இயல், இசை, சினிமா இவைகளின் வாயிலாக மக்களிடம் எளிதாக கொண்டு சென்றதில் வல்லவர், நல்லவர். தனது நகைச்சுவை நடிப்பால் பாா்ப்போா் உள்ளங்களை கட்டிப்போட்டவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன் (NSK - 29.10.1908 -- 30.8.1957). தந்தை சுடலைமுத்து-தாயாா் இசக்கி ஆவாா்கள். வறுமையின் பிடியில் பிறந்தாலும், சிறுவயதிலிருந்தே நாடக கொட்டகைகளில் சோடா விற்கும் நபராக வாழ்க்கையைத் தொடங்கியவர். நாடகம், வில்லுப்பாட்டு, பின்னர் சினிமா என வாழ்க்கையை தொடங்கினாா்.
சமுதாயத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கை, சுயமரியாதை, பகுத்தறிவு, சமுகநல்லிணக்கம், இவைகளை மக்களிடையே நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானத்துடன், எளிதில் அனைவருக்கும் புாியும் விதமாக சுலபமாக கொண்டு சோ்த்த பெருமைக்குாியவரே கலைவாணர். 'கலையைப் போற்றுவது தொழிலைப் போற்றுவதாகும்' என்ற கருத்தோடு தான் கொண்ட கொள்கையில் இருந்து மாறாமல் வாழ்ந்து வந்தவர்.
முதல்படம் சதிலீலாவதி
நல்ல சிந்தனையாளர், பாடகர், பாடலைப்பாடும் போது அதற்கான உடல்வாகு, நெளிவு, சுளிவு இவைகளால் பரிபூரணமான நடிப்பால் கலையையும், பகுத்தறிவுக் கொள்கைகளையும் வளர்த்தவர். ஏறக்குறைய ஐம்பது பாடல்களுக்குமேல் பாடியவர்.
அவரும் அவரது துணைவியாா் டி. ஏ. மதுரம் இருவரும் ஜோடி சோ்ந்து பல படங்களில் நடித்தவர்கள் எனச்சொல்வதோடு பாத்திரமாகவே மாறியவர்கள் என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் பியு சின்னப்பா, தியாகராஜ பாகவதர்கள் நடித்த திரைப்படங்கள் கோலோச்சிய காலம். அந்த காலகட்டத்தில் பொிய பொிய ஜாம்பவான்கள் படம் ஓடவேண்டும் என்பதற்காகவே என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் இவர்களின் நகைச்சுவை காட்சிகள் இல்லாமல் படம் ஓடாத நிலை. இவர்களது நகைக்சுவை மற்றும் சுயமரியாதை செய்திகள் நன்கு வலம் வந்த காலம்.
திரைப்படங்களில் சமுதாய சீா்திருத்த பாடல்களால், சிந்தனையை தூண்டிய சிந்தனைச் சிற்பியாக திகழ்ந்தவர். எதிா்காலத்தின் விஞ்ஞான வளா்ச்சியை முன்கூட்டியே தனது பாடல்களில் கொண்டு வந்த தீா்க்கதரிசி என்றே சொல்லலாம்.
'விஞ்ஞானத்தை வளா்கப் போறேன்டி' என்ற பாடலில் இன்றைய உலகத்தை நகைச்சுவைப் பாடலால் தொிவித்தவர். தன்னுடைய சமுதாய கருத்துகளில் பகுத்தறிவு கொள்கைகள் மூடநம்பிக்கையை வலியுறுத்திய வகையில் பொியாா், அண்ணா, போன்றவர்களிடம் நெருக்கமாக பழகியவர்.
ரயில்தான் ஜாதியை ஒழித்தது. ஜாதி வித்யாசம் பாராமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து செல்லும் நிலை உண்டானதே ரயில் பயணத்தில் தான் என அழுத்தமான கருத்துகளை நகைச்சுவையோடு உணர்த்திய பெருமை அவரையே சாரும் என்றால் அது மிகையல்லவே!
'கரகரவென சக்கரம் சுழலவே, கரும்புகையோடு வருகிரயிலே, கனதனவான்களை ஏற்றிய ரயிலே, ரயிலே, ரயிலே!' என்ற கருத்தாழமிக்க பாடல் இன்றைக்கும் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
அதை மறக்கமுடியுமா? 'மனசனை மனுசன் ஏச்சுப்பிழைத்தது அந்தக்காலம்!' என்ற பாடலில் தான் எவ்வளவு அர்த்தம் இருந்தது. இவர் நடித்த பல படங்களில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நல்ல தம்பி, பணம், முதல் தேதி, சக்கரவர்த்தி திருமகன் இப்படி பட்டியல் நீளும்.
நடிப்பால், நகைச்சுவையால், சீா்திருத்த காட்சிகள் அதனூடே வந்த வசனங்கள் மனிதாபிமானத்துடன் பகுத்தறிவுக் கொள்கைகள் பரப்பியதில் இன்றளவும் காலத்தை வென்று காவியம் படைத்தவர். அவரது இடம் சினிமா உலகில் இன்றளவும் வெற்றிடமே! ஆக, அவரது கருத்துகள் அடிப்படையில் சாகாவரம் பெற்ற அவரை அவரது நினைவு நாளில் நினைவு கூறுவோம்!