எமனுக்குக் கோவிலா? எமனை வணங்குவார்களா?

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதன் இரவையும், பகலையும் இணைத்து சூரிய, சந்திரர்களை உருவத்தை ஒரு கல்தூணில் பொறித்து கால தேவன் என்ற பெயரில் வணங்கினான்.
New Evolutions of Kala Devan
New Evolutions of Kala Devan
Published on
deepam
deepam

'எமனுக்குக் கோவிலா? எமனை வணங்குவார்களா? எமன் இறப்பின் கடவுள் அல்லவா!' என்ற வினாக்கள் தோன்றும். காலன், எமன், எமதர்மன் போன்றவை ஒன்று தான். திருச்சி அருகே திருப்பைஞ்சீலியிலும் இன்னும் பல ஊர்களிலும் எமதர்மனுக்குச் சன்னதிகள் உண்டு. காலசாமிக்கு தென் மாவட்டக் கிராமங்களில் ஏராளமான கோவில்கள் உண்டு. மதுரைக்குத் தெற்கே உள்ள கல்லுப்பட்டியில் நேரக் கோயில் ஒன்று உள்ளது.

காலசாமி, எமன், எமதர்மன்

கால பைரவர், காலச்சக்கரம், தர்மச்சக்கரம், சக்கரத்தாழ்வார் ஆகியவை தமிழ்ச் சமய வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியாக மற்றொன்று உருவாகி ஒன்றுக்குள் ஒன்று கலந்து காலத்திற்கேற்ப புதுப்பெயர்களில் அழைக்கப்பட்டன.

காலசாமி கோயில்கள்

வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதன் இரவையும், பகலையும் இணைத்து சூரிய, சந்திரர்களை உருவத்தை ஒரு கல்தூணில் பொறித்து கால தேவன் என்ற பெயரில் வணங்கினான். இத்தகைய காலசாமி கோவில்கள் தென்பகுதியில் கிராமங்களில் உள்ளன. காலசாமியை நாடார், கோனார் என்று பல சாதியினர் தமது குலதெய்வமாகக் கொண்டு வணங்குகின்றனர்.

சமண, பௌத்த சமயங்கள் தமிழகத்துக்குள் புகுந்து பரந்த போது காலசாமிக் கோவில்களைப் பௌத்த சமயம் தனது 'காலம் யாருக்காகவும் நிற்காது. அது தன்பாட்டுக்கு போய்க்கொண்டே இதுக்கும். இழந்த காலத்தைத் திரும்பப் பெற இயலாது. இனி வரும் காலம் பற்றிய நிச்சயமும் மனிதருக்கு கிடையாது' என்ற காலச்சக்கரக் கோட்பாட்டுடன் இணைத்தது (Synchronised).

தர்மச்சக்கரம்

காலன் என்பவன் பாரபட்சம் இன்றி செயல்படும் தர்மவான். நேர்மையானவன். எனவே, காலச்சக்கரம் தர்மச்சக்கரமாக போற்றப்பட்டது. தமிழில் இதனை 'அறவாழி' என்றனர். சக்கரத்தை ஒரு கடவுளாக போற்றிய போது தர்மர் என்று பெயர் சூட்டினர். பௌத்த சமயம் பெரும் செல்வாக்குடன் இருந்த காலத்தில் எமதர்மன் கோயில்கள் தோன்றின.

ஜப்பானில் பௌத்த எமன்

பௌத்தம் சீன, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றபோது அங்கும் எமனைக் கொண்டு சென்றனர். ஜப்பானில் எமனை 'என் ம தென்' என்ற பெயரில் வழிபடுகின்றனர். எம் + என் என்பது என்+எம் என்று அங்கு மாறிவிட்டது. இவன் அங்கும் நியாயவான் நீதிபதி என்றே போற்றப்படுகிறான். இறப்பின் மூலமாக அவரவர் காலத்தை முடித்து வைப்பவன், மனிதர்களின் ஆயுட்காலத்தைக் கணக்கிடுபவன் காலன். மரணத்துக்குத் தூதாக வருபவன் தூதன். உயிரைப் பறித்துச் செல்பவன் எமன். எனவே, எமன் காலன் தூதன் என்ற மூவரும் இறப்போடு தொடர்புடையவர் ஆயினர்.

கால சம்ஹாரமூர்த்தி

பௌத்தம் அழிந்து சைவ வைணவ சமயங்கள் புத்தெழுச்சி கண்டபோது தோன்றிய கோயில்களில் எமதர்மனும் இடம் பெற்றான். இக்காலகட்டத்தில் ஆங்காங்கே தோன்றிய புதிய கதைகளில் பௌத்தக் கடவுளரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

சிவன் தன் பக்கத்தின் மார்க்கண்டேயனை எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய கதை மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. மரணத்திடம் இருந்து நம்மை காப்பாற்றுகின்றவன் சிவபெருமான் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலை பெற்றது. காலனை வென்ற சிவபெருமானை கால 'சம்ஹார மூர்த்தி' என்று அழைத்து கோவில்களில் தனி உருவம் சமைத்தனர்.

சக்கரத்தாழ்வார்

பௌத்தக் கோவில்கள் இருந்த இடங்களில் புதிதாக வைணவக் கோவில்கள் தோன்றிய போது அங்குக் காலதேவனுக்கு அடையாளமாக இருந்த தர்மச்சக்கரம் திருமாலின் கையில் உள்ள சக்கராயுதமாக பெயர் பெற்றது. பல துஷ்டர்களின் ஆயுளைப் பெருமாள் தனது தர்மச் சக்கரத்தால் முடித்து வைத்தார். நல்லவர்களைக் காப்பாற்றினார்.

துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலன என்ற தன் கடமையைத் தந்து சுதர்சனச் சக்கரத்தின் மூலமாக நிறைவேற்றினார். பெருமாளின் அன்பாயுதம் மற்றும் அழிவாயுதமாக விளங்கிய சக்கரத்தை பக்தர்கள் சக்கரத்தாழ்வாராக வணங்கினர். சக்கரத்தின் மறுபக்கம் நரசிங்க மூர்த்தியை நிறுவி தமது பக்தி வைராக்கியத்தை உறுதி செய்தனர்.

சக்கரத்தாழ்வார் உருண்டோடும் காலத்தைக் குறிப்பவர். அவரை வணங்கினால் திருமணம் நடைபெறும். பதவி உயர்வு கிடைக்கும் என்பதால், பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வணங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. மதுரை அருகே உள்ள திருமோகூர் வழித்துணைப் பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

இதையும் படியுங்கள்:
'நான் அழகாக இருக்கிறேனா?' - 'குச்சிசாகி ஒன்னா'வின் அச்சுறுத்தும் பேய் கதை!
New Evolutions of Kala Devan

பாகிஸ்தானில் காலன் வழிபாடு

அப்ஸரஸ்களுக்கு இந்திரிய தானம் செய்யும் இந்திரனை வெண்மை நிறக் கடவுளாகவும், இறப்பைக் கொண்டு வரும் எமனைக் கருமை நிறக் கடவுளாகவும் கொண்டு இவர்களை இருமை எதிர்வுகளாக (binary opப்osition) மக்கள் கருதி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சித்ரால் மாநிலத்தில் ஹைபர் கணவாய் அருகே வாழும் கலஷா பழங்குடியினர் இந்திரனையும், எமனையும் சேர்த்து வெள்ளை மற்றும் கருப்புத் தெய்வங்களாக வணங்குகின்றனர். இவர்கள் சுமார் 5000 பேர் மட்டுமே. இங்குப் புதிய நாகரிக வளர்ச்சி வரவில்லை என்பதால் வழிபாட்டு மாற்றங்களுக்கு இடமில்லை.

இதையும் படியுங்கள்:
இனி பழைய போன்களை தூக்கி எறியாதீங்க! இதில் கூட தங்கம் இருக்காம்!
New Evolutions of Kala Devan

1989 இல் இங்கு வந்த ஜோசப் எல்ஃபின்பின் இவர்களை கிமு மூன்றாம் நூற்றாண்டில் இங்குப் படையெடுத்து வந்த திராவிட இனத்தவர் என்றார்.

சமயம் என்பது சமுதாயத்தின் தேவை. சமுதாயத்தில் புது புதுச் சமயங்கள் தோன்றும் போது பழைய தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் ஒன்றுக்குள் ஒன்று கரைந்து கலந்து புது வடிவம் பெறும். புதுப் பொலிவு பெறும். புதுப்பெயர்களுடன் புது தெய்வங்கள் உருவாகும். மாற்றம் ஒன்று தானே மாறாதது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com