
இந்தியாவில் சமீபத்தில் 2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. தமிழில் ‘பார்க்கிங்’ திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது. ‘வாத்தி' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார். 'தி கேரளா ஸ்டோரி' என்ற மலையாள மொழி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேப்போல் பல மொழிகளிலும் உள்ள படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது, இந்த படத்திற்கு கொடுத்திருக்கலாம், அந்த நடிகர், நடிகைக்கு கொடுத்திருக்கலாம் என்ற சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுவது சகஜம்.
அந்த வகையில் இந்தமுறை தேசிய திரைப்பட விருதை தேர்வு செய்த குழுவுக்கு எதிராக நடிகை ஊர்வசி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் சிறந்த படமாக ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய திரைப்பட விருதை தேர்வு செய்த குழுவுக்கு (ஜூரி) நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ‘உள்ளொழுக்கு' படத்துக்காக எனக்கும், ‘பூக்காலம்' படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை? என்று விருது தேர்வு குழுவிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
‘பூக்காலம்' படத்தில் நடித்த விஜயராகவனுக்கு காலையில் ‘மேக்கப்' போட ஐந்து மணி நேரம், அதை நீக்க நான்கு மணி நேரம் ஆகும். அவ்வளவு கஷ்டப்பட்டு தியாகத்தையெல்லாம் செய்து நடித்த விஜயராகவன் சிறந்த நடிகருக்கான விருது வழங்காமல், அவர் எப்படி துணை நடிகரானார் என்று ஊர்வசி சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அவரது சினிமா அனுபவத்தை தேர்வுக்குழு ஆராய்ந்திருக்க வேண்டாமா? அதற்கு ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே? துணை நடிகராக ஏன் தேர்வு செய்யவேண்டும்? என்ற அவர், ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்றும், எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. நாங்கள் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். வரி கட்டுகிறோம். அரசு தருவதைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல. நீங்கள் ஒன்றை கொடுத்தால், அதை நாங்கள் மகிழ்ச்சியாகப் பெற வேண்டும். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது. எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எதற்கும் ஒரு நியாயம் வேண்டாமா?, என்று ஊர்வசி பொங்கியுள்ளார்.
ஊர்வசியின் இந்தக் கண்டனக் குரல் மலையாளத் திரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இவரின் இந்த கருத்துக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தேர்வு குழுவை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள நடிகை ஊர்வசி இதனால், தேசிய விருதை வாங்க செல்வாரா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது!