
காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவரின் மனதிலும் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முப்படைகளுடன் ஆலோசித்து வந்தது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறி வைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த பதிலடி தாக்குதல் தொடுத்து இருப்பது குறித்து திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில், ‘போராளிகளின் சண்டை தொடங்கியது. இலக்கை அடையும் வரை இது ஓயாது. பிரதமர் மோடியுடன் முழு தேசமும் துணை நிற்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என குறிப்பிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், "மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" என்று பதிவிட்டுள்ளார்.
"இந்திய ராணுவத்தின் உண்மை முகம் இதுதான்" என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ், "நமது இந்திய ஆயுதப்படைகளுக்கு வணக்கம். இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷய்குமார், சிரஞ்சீவி, ரித்தேஷ் தேஷ்முக், பிந்து மாதவி, நிம்ரத் கவுர் ஆகியோர் இந்த தாக்குதலை வரவேற்கும் வகையில், ‘ஜெய்ஹிந்த்' என்று பதிவிட்டுள்ளனர்.
நடிகை கங்கனா ரணாவத், "பயங்கரவாதத்தை ஒழிப்போம்" என்றும், குஷ்பு, "நீதி கிடைத்தத" என்றும் பதிவிட்டுள்ளனர்.
"பாதுகாப்பு படைக்கு மேலும் பலத்தை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம். வந்தே மாதரம்" என்று இயக்குனர் மதுகர் பண்டார்கர் தெரிவித்துள்ளார்.
அனுபம் கெர், சோனு நிகம், வினித்குமார் சிங், ராகுல் வைத்யா உள்பட திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ‘ஜெய்ஹிந்த்', ‘பாரத் மாதா கி ஜெய்', ‘ஆபரேஷன் சிந்தூர்' என்னும் ‘ஹேஷ்டேக்' உடன் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.