
ஆஸ்கர் விருது வென்ற படங்களும், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளும் ஒரு காலத்தில் இணைந்தே இருந்தன, முதல் 50 ஆண்டுகால திரைப்படங்களைப் பார்த்தால், விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல ஆஸ்கார் விருது வென்ற படங்களும் அந்த ஆண்டுகளில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைப் பெற்றிருப்பதைக் காணலாம்.
கான் வித் தி விண்ட் (1939) போன்ற படங்கள் - எல்லா காலத்திலும் பேசப்படும் படம், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றுள்ளன. மேலும் 10 அகாடமி விருதுகளை வென்றுள்ளன. பென் ஹர் (1959) 11 அகாடமி விருதுகளை வென்ற மற்றும் அதன் ஸ்டுடியோவிற்கு பெரும் பணம் சம்பாதித்து தந்த படம்.
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் (1965) மற்றொரு மகத்தான வெற்றி மற்றும் சிறந்த படத்திற்கான விருதை வென்றது. 70களில் கூட - தி காட்ஃபாதர் - மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் சிறந்த ஆஸ்கர் படத்திற்கான விருதையும் வென்றது. 1980-க்கு பிறகு இந்நிலை மாறியது.
1980 முதல் 2003 வரை ஆஸ்கர் சிறந்த படத்திற்கான அகடமி விருது வென்ற படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கவில்லை என்கிறது அமெரிக்காவின் நியூயார்க் தியேட்டர் ஆய்வு. 2004-ம் ஆண்டு சிறந்த படத்திற்கான அகடமி விருது வென்ற "லார்டு ஆப் த ரிங்ஸ்" மட்டுமே 1.1 பில்லியன் டாலர்கள் வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம். இதனையடுத்து 2023-ம் ஆண்டு சிறந்த திரைப்படம் மற்றும் 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஓப்பன்ஹைமர் ( Oppenheimer) திரைப்படம் 976 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.
டைட்டானிக் (Titanic): 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரது நடிப்பில் உருவான பிரம்மாண்ட படைப்பு இது. டைட்டானிக் கப்பலின் பேரழிவையும், அதே கப்பலில் இருந்த காதல் ஜோடியின் ஆழமான காதலையும் கற்பனை கலந்த உண்மை நிகழ்வோடு சித்தரித்திருப்பார் ஜேம்ஸ் கேமரூன். உலக சினிமாவையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த திரைப்படம் இன்றும் பேசப்படும் ஒன்று. ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் என 11 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை டைட்டானிக் படம் வென்றது மட்டும் அல்லாமல், இது வசூலிலும் சாதனை படைத்தது. 2.2 பில்லியன் டாலர்கள் வசூலித்தது இது இன்று வரை சாதனையாகும்.
2019-ல் பாராசைட் (Parasite) 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற சிறந்த படம். ஆனால் அது வசூலித்தது 263 மில்லியன் டாலர்கள். 2020-ல் Nomad land (நாடோடி நிலம்). திரைப்படம் சிறந்த ஆஸ்கர் படத்திற்கான விருதை வென்றது. ஆனால் அது வசூல் செய்தது 39 மில்லியன் டாலர்கள் தான். 2021-ம் ஆண்டு, CODA (கோடா) 3 ஆஸ்கர் விருது வென்ற சிறந்த திரைப்படம். ஆனால் அது வசூலித்தது 2 மில்லியன் டாலர்கள் தான்.
ரஷ்ய தன்னலக்குழுவின் மகனை மணக்கும் பாலியல் தொழிலாளியின் கதையைச் சொல்லும் படம் தான் 'அனோரா' (Anora) சமீபத்தில் நடைபெற்ற 97வது அகாடமி விருதுகளில் மிகச்சிறந்த படமாக தேர்வானது. சீன் பேக்கர் எழுதி இயக்கிய இந்தப் படம், 'சிறந்த படம்' பிரிவு உட்பட ஐந்து ஆஸ்கார் விருதுகளை வென்றது, அதில் ஒன்று சிறந்த முன்னணி நடிகைக்கான மைக்கி மேடிசனுக்கானது மற்றும் தயாரித்தல், இயக்குதல், எடிட்டிங் மற்றும் திரைக்கதை ஆகியவற்றிற்காக பேக்கரின் படைப்புகளுக்கு நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
அனோராவின் வெற்றி, பெரிய ஸ்டுடியோ தயாரிப்புகளை விட சிறிய பட்ஜெட் திரைப்படத் தயாரிப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, கடந்த ஆண்டு முழுவதும் கேன்ஸில் பாம் டி'ஓர் விருது மற்றும் இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சங்க விருதுகளில் வெற்றிகள் உட்பட பல விருதுகளை வென்ற போதிலும், இந்த படம் சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபிஸில் 41 மில்லியனை மட்டுமே வசூலித்தது, இது இதுவரை மிகக் குறைந்த வசூல் செய்த, சிறந்த ஆஸ்கர் படங்களில் ஒன்றாகும். இதில் ஓர் ஆறுதலான விஷயம் இந்த படம் 6 மில்லியன் டாலர்களில் எடுக்கப்பட்டது என்பது தான்.