

சினிமா துறையில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம், வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் ஆக இருப்பதால், படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படையப்பா படம் குறித்த சுவாரசியமான விஷயங்களை வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவில் படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளார். ரஜினி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி காட்டுத் தீயாக பரவி வருகிறது. மேலும் ரஜினியின் இந்த வீடியோ படையப்பா ரீ-ரிலீஸூக்கு மிகச்சிறந்த பிரமோஷன் ஆக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்த இரணடாம் பாகத் திரைப்படங்களில் எந்திரன்-2 நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜெய்லர்-2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படையப்பா-2 படத்திற்கான பேச்சுகளும் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரஜினி வெளியிட்ட வீடியோவில் கதையும் கதாபாத்திரமும் சரியாக அமைந்து விட்டால் படையப்பா 2 திரைப்படம் நிச்சயமாக வெளிவரும் என தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்கு ‘நீலாம்பரி: படையப்பா-2’ என்ற தலைப்பையும் பரிந்துரை செய்திருக்கிறார்.
படையப்பா-2 குறித்து ரஜினி பேசுகையில், “படையப்பா திரைப்படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் நீலாம்பரி. இந்த வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ரம்யா கிருஷ்ணன் தான் முக்கிய காரணம். படையப்பா..! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னைப் பழி வாங்காமல் விடமாட்டேன் என கூறிவிட்டு நீலாம்பரி படத்தில் இருந்து விடுவார்.
இந்த வசனத்தையே ஒன்லைனாக எடுத்துக் கொண்டு படையப்பா-2 படத்தை உருவாக்கலாம். படத்திற்கு ‘நீலாம்பரி: படையப்பா-2’ எனவும் தலைப்பு வைக்கலாம். இருப்பினும் அதற்கு கதையும், கதாபாத்திரமும் அமைய வேண்டியது அவசியம்” என ரஜினி தெரிவித்தார்.
படையப்பா படத்தின் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட ரஜினி, படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதை இப்போதே மறைமுகமாக சொல்லி விட்டார். இருப்பினும் இதற்கான கதைக்களம் எப்போது உருவாகும் மற்றும் நடிகர் நடிகைகளின் தேர்வு என்பது பெரிய வேலையாக இருக்கும். ஒருவேளை படையப்பா-2 திரைப்படம் எடுக்கப்பட்டால், அதில் நீலாம்பரியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இப்போது எழுந்து விட்டது.
ஆனால் ரம்யா கிருஷ்ணனை தவிர நீலாம்பரி கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அது பொருத்தமாக இருக்காது எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர். முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் இறந்து விடுவதாக படத்தில் காட்சிகள் அமைந்துள்ளன. இரண்டாம் பாகத்திற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்து ரம்யா கிருஷ்ணனை மீண்டும் நீலாம்பரி ஆக நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்யலாம்.
படையப்பா ரீ-ரிலீஸ் ஆக இருப்பது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் நிலையில், இரண்டாம் பாகம் உருவானால் அது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும்.