நடிகர் சூரி ஒருகாலத்தில் பெயின்டராக இருந்து தற்போது மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார். இதனை சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் சூரி ஒரு கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வந்து, தனது திறமை மூலம் அனைவருக்கும் பிடித்தமான காமெடியனாக மாறினார். சாதாரணமாக ஒரு காமெடியன், ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாறுவது மிகவும் கடினம். அது கடினம் என்று தெரிந்தும் , அந்தப் பாதையில் பயணித்த சந்தானம் கூட இன்னும் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கவில்லை.
ஆனால், சூரி ஹீரோவாக நடித்த முதல் படமே செம்ம ஹிட்டானது. ஆம்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை படம், அவரின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காமெடியன் ஹீரோவாக முடியாது என்ற விஷயத்தை சுக்கு நூறாக உடைத்தவர் சூரி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கருடன் படமும் அவருக்குத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வைத்தது. அதேபோல் கொட்டுக்காளி சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. விடுதலை 2 படம் நல்ல ஹிட் அடித்தது. இனி கதாநாயகனாகவே நடிக்கவும் சூரி முடிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.
அந்தவகையில் அவர் காமெடியனாக நடிப்பதற்கு முன்னர் சில படங்களில் மிகவும் சின்ன சின்ன ரோல்களில் எல்லாம் நடித்தாராம். மேலும் செட்டில் சின்ன சின்ன வேலைகளையும் செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் நடிகர்களுக்கு fan போடும் வேலையை சூரி செய்து இருக்கிறாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் இதை கூறி இருக்கிறார்.
சில காலம் முன்பு இந்த விஷயம் வைரலாகி வந்தது. இப்படியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.
ஆம்! சூரி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதாவது சூரி ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கும்போது, அங்கு எதிர்பக்கத்தில் ஒரு பில்டிங்கில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது.
அந்த பில்டிங்கில் ஒரு நபர் சுவற்றில் தொங்கியபடி அங்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அதை சூம் செய்து வீடியோ எடுத்த சூரி "சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்" என்று அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.