கவிதாஞ்சலி - பாடகர் ஜெயச்சந்திரனுக்கு…
எர்ணாகுளத்தில் பிறவி யெடுத்த
இனியவரே! ஜெயச் சந்திரரே!
எழிலான மொழிகளில் நீங்கள்
இசையெடுத்துப் பாடியதை
எவ்வுலகம் போற்றிடுமே!
இதயத்தில் நிறுத்திடுமே!
சாவாப்புகழ் உம்மை
சரித்திரத்தில் புகழ்ந்திடுமே!
பதினாயிரம் பாடல்களைப்
பாடிமுடித்தவர் நீர்!
தேசீய, மாநிலவிருதுகளை
சிறப்பாய் அடைந்தவர் நீர்!
தமிழ், மலையாளம், தெலுங்கு
கன்னடம், இந்தியென்று
அத்தனை மொழிகளிலும்
அசத்திய பாடகர் நீர்!
வசந்த கால நதிகளிலே…
மாஞ்சோலைக் கிளிதானோ…
கடவுள் வாழும் கோயிலிலே…
தாலாட்டுதே வானம்…
கவிதை அரங்கேறும் நேரம்…
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
என்றெல்லாம் நீர் பாடியதை
என்றைக்கும் மனம் அசைபோடும்!
காத்திருந்து… காத்திருந்து…
ராசாத்தி உன்னை…
காதல் ஒருவழிப் பாதை…
போன்ற பாடல்களால்
ரசிகர்கள் உயிருக்குள்
நர்த்தனம் புரிபவர் நீர்!
இசையும் காற்றும் இங்குள்ளவரை
இல்லை உமக்கு மரணம்!
‘ராசாவே இனியுன்னைக்
காணாதே இவ்வுலகம்!’
என்றெண்ணும் போதினிலே
இதயமும் விம்மிடுதே!
ஆனாலும் உம்பாடல்கள்…
அதற்கான நல்மருந்தாய்
இதயத்தை நீவிடுமே!
என்றைக்கும் நிலைத்திடுமே!