
இந்த ஆண்டு மத்தியில் பல்வேறு கணிப்புகளின் அடிப்படையில் புது வித தொற்று நோய் பரவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) நோய் தொற்று பரவ ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் திங்களன்று இரண்டு பேருக்கு HMPV நோய் தொற்று உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவான விவரங்களின் அடிப்படையில் சென்னையில் ஒருவருவருக்கும் சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கும் நோய் தொற்று உள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் 2 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பதால் இந்தியாவில் HMPV நோய் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நோய் பாதித்த மூன்று மாத குழந்தை தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.அங்கே மருத்துவமனையில் நோய் தொற்று உள்ள எட்டு மாத குழந்தையும் குணமடைந்து வருகிறது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றிற்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை நடத்திய வீடியோ கான்பரன்சில் மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.HMPV வைரஸ் நிலையாக உள்ளது.அதனால் யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) என்பது ஒரு லேசான நடுக்கம் , சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இருமல் மற்றும் தும்மல் மூலம் இந்நோய் பரவக்கூடியது. அனைத்து வயதினருக்கும் இந்நோய் பரவினாலும் அதிகம் வயதானவர்கள் , குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே இது பாதிக்கிறது. ஒருவாரம் வரை உடலில் உயிர் வாழும் இந்த வைரஸ் , சிலருக்கு மட்டும் நிமோனியா போன்ற பாதிப்பை தருகிறது.
இது 2001 ஆம் ஆண்டு விஞ்ஞானிகளால் முதன்முதலில் கண்டறியப்பட்டாலும், 1970களில் இருந்து இது மனிதர்களிடம் பரவியதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உலகளவில் 4-16% கடுமையான சுவாச நோய்த் தொற்றுகளுக்கு இந்த வைரஸ் காரணமாகும், பொதுவாக நவம்பர் மற்றும் மே மாதங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் உச்சத்தை அடைகின்றன.
தமிழ்நாடு சுகாதாரத் துறை "இது ஒரு புதிய வைரஸ் அல்ல, இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இது 2001 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.பொதுவாக HMPV தொற்று தானே கட்டுப்படுத்தக் கூடியது இது நிர்வகிக்கக்கூடியது" என்று தைரியம் கொடுத்துள்ளது.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளே இதற்கும் பொருந்தும். தமிழக அரசு காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.