
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கேரளாவை சேர்ந்தவரான ஜெயச்சந்திரன் வயோதிகம் மற்றும் கல்லீரல் பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் பூக்குன்னத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. 1973-ல் ‘மணிப்பயல்' படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே...' பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இன்றும் அவரது காந்த குரலை கேட்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது பாடல்களை இன்று கேட்டாலும் காதில் தேனருவி ஓடும். அவ்வளவு இனிமையானவை, கேட்க, கேட்க திகட்டாதவை என்றால் அது மிகையாகாது.
அதனைத்தொடர்ந்து ‘வசந்த கால நதிகளிலே...' (மூன்று முடிச்சு), ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்...' (காற்றினிலே வரும் கீதம்), ‘மாஞ்சோலை கிளிதானோ...' (கிழக்கே போகும் ரயில்), ‘கடவுள் வாழும் கோவிலிலே..' (ஒருதலை ராகம்), ‘வசந்த காலங்கள்...' (ரெயில் பயணங்களில்), ‘கவிதை அரங்கேறும் நேரம்...' (அந்த ஏழு நாட்கள்), ‘தாலாட்டுதே வானம்...' (கடல் மீன்கள்), ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு...', (வைதேகி காத்திருந்தாள்), ‘கொடியிலே மல்லியப்பூ...' (கடலோரக் கவிதைகள்), ‘வாழ்க்கையே வேஷம்...' (ஆறிலிருந்து அறுபது வரை), ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்...' (நானே ராஜா நானே மந்திரி), ‘சொல்லாமலே யார் பார்த்தது...' (பூவே உனக்காக) என ரசிகர்கள் நினைவில் நிற்கும் ஏராளமான பாடல்கள் மூலம் ரசிகர்களை வசீகரித்தவர் ஜெயச்சந்திரன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் என பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
ஜெயச்சந்திரன் குரலுக்கு இன்று வரை அடையாளமாக விளங்கிய, பாடல் என்றால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடலை சொல்லலாம். 80s முதல் தற்போது உள்ள தலைமுறை வரை இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய மூன்று பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றது. கடைசியாக பாடகர் ஜெயச்சந்திரன் நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தில் 'கனவெல்லாம்' என்ற பாடலை பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது இனிமையான குரல் மூலம் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இசை ஜாம்பவான் ஜெயச்சந்திரன் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பார்.
சிறந்த பின்னணி பாடகருக்காக தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, 4 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தமிழக அரசின் விருது , ஐந்து முறை கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.