
“பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து!”
காதலன் காதலியின் ஓரவிழிப்பார்வையை வர்ணிக்கும் விதம் இது.
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
சாறு கொண்ட காதல் கரும்பு – அவள்!
அவள் பார்வையில் மயங்கிய அடுத்த கணமே அவள் நடையில் அவன் 'விழுந்து' விடுகிறான்!
அவள் நடையோ அன்ன நடை!
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு!
எத்தனை எத்தனை காதல் சம்பவங்களை இது நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது?
எட்டாம் எட்வர்ட் மன்னன் தன் காதலி வாலிஸ் என்ற அழகிக்காக அரியணை மகுடத்தையே துறந்தது நம் நினவுக்கு வருகிறது இல்லையா?
மன்னனே மயங்கும் போது அசோகன் மயங்காமல் இருக்க முடியுமா சந்திரகாந்தா அழகினைக் கண்டு (இது சத்தியம் – 1963 எஸ்.ஏ.அசோகன், கே. சந்திரகாந்தா)
“மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும் முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்!”
என்ன ஒரு அருமையான வர்ணனையோடு பாடல் தொடங்குகிறது, பார்த்தீர்களா?
கவிஞர் கண்ணதாசன் அளிக்கும் காதல் விருந்து இது!
வல்லவனுக்கு வல்லவன் 1965
நூற்றுக்கணக்கான காதல் விருந்துகளை அனாயாசமாக தன் பாடல்களில் அள்ளித் தெளித்தவர் கவியரசர் கண்ணதாசன்.
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்.
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
என்று காதலை உணர்த்தியவர் அவர்!
நீதிக்குப் பின் பாசம் (1963) படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடிக்கும் பாடல் காட்சி ஒன்று.
அவன் அவளை வர்ணிக்கிறான்.
அவள் அவனை வர்ணிக்கிறாள்.
மானல்லவோ கண்கள் தந்தது – ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது – ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது – ஹீம்
சிலையல்லவோ அழகைத் தந்தது
காதலனுக்கு சளைத்தவளா என்ன காதலி! பதிலை உடனே தருகிறாள்!
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
சரியான அற்புதமான வரிகள். எம்ஜிஆரே மகிழ்ந்தாராம்.
பொன் அல்லவோ உடலைத் தந்தது என்ற கண்ணதாசனின் வரியைப் போற்றாதவர் இல்லை!
வல்லவனுக்கு வல்லவன் படத்தில், “அடடா இது என்ன கண்ணா? நீ அந்தர லோகத்து பெண்ணா” என்ற வரிகளை சாவித்திரியின் கண்ணழகுக்காகவே புனைந்தவர் அல்லவா அவர்!
குடும்பத் தலைவன் (1962) படத்தில் வரும் வரிகளும் காதலன் - காதலி வர்ணனை தான்!
கட்டான கட்டழகு கண்ணா – உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
என்ற சரோஜாதேவிக்கு எம்ஜிஆரின் பதில் என்ன?
பட்டாடை கட்டி வந்த மைனா – உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா என்பது தான்!
மனம் என்ற தேரிலே நடமாடும் மயில் போலவே
பால் என்ற பருவமே பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே சிறு நூல் என்ற இடையிலே
என்ற காதலனின் வர்ணனை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை!
இப்படி தொட்ட தொட்ட இடமெல்லாம் கவிஞர் கண்ணதாசன் செய்யும் மூன்று சொல் விந்தைகளுக்கும் நான்கு சொல் விந்தைகளுக்கும் ஒரு அளவே இல்லை!
பாடல்களைப் படித்துப் பார்த்து, இசையுடன் கேட்டு நாம் அடையும் மகிழ்ச்சிக்கும் ஒரு எல்லையே இல்லை, அல்லவா?!