திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

Poet Mu Metha
Poet Mu Metha
Published on

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்ட மாபெரும் கவிஞர் மு.மேத்தா. மரபுக் கவிதைகளை மட்டுமே போற்றி வந்த தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக மரபுக் கவிதைகளின் அடித்தளம் பற்றி புதுக்கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவர் மு.மேத்தா.

இவர் எழுதிய கண்ணீர் பூக்கள் ஒரு அற்புதமான படைப்பு. தேசப்பிதாவுக்கு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதை ஒரு நீண்ட சிறப்பு வாய்ந்த கவிதை. ஒரு கவிஞராக, எழுத்தாளராக இலக்கியத்துறையில் எந்த அளவுக்கு பெரும் பங்காற்றினாரோ அதே அளவுக்கு திரை துறையிலும் இவர் எழுதிய பாடல்கள் மிகவும் பிரபலம். 

காசி படத்தில் இடம்பெற்ற பார்வையற்ற ஒரு பாடகரின் மனதை நெகிழச் செய்யும் வார்த்தைகளாக வெளிப்படும் 'என் மன வானில் சிறகை விரிக்கும வண்ணப் பறவைகளே' என்ற பாடல்  வாழ்வியல் தத்துவம் நிறைந்த பாடல் ஆகும். 'மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே' என்ற பாடல் வரிகள் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை உண்டு என்ற வாழ்வின் மிகப்பெரிய தன்னம்பிக்கையை உணர்த்துவதாக அமைந்திருக்கும்.

அதே படத்தில் இடம்பெற்ற 'நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்' என்ற பாடல் பார்வை உடையவர்கள் கண்டு ரசிப்பதற்கு ஆயிரக்கணக்கான காட்சிகள் நம்முன் விரிந்து கிடப்பதைப் போல பார்வையற்றவர்களுக்கும் ஆயிரக்கணக்கான கற்பனைகள் மனதினுள் விரிந்து கிடக்கிறது என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதைப் போல அமைந்திருக்கும். என்ன ஒரே வித்தியாசம் என்றால் காட்சிகளை நாம் அனைவரும் கண்களால் பார்க்கிறோம், பார்வையற்றவர்கள் அதனை கற்பனைகளின் மூலம் மனதால் உணர்ந்து கொள்கிறார்கள். மற்றபடி காணும் காட்சிகள் இருவருக்கும் ஒன்றுதான் என்பதைப் போல பாடல் வரிகளை மிகவும் ஆழமாக எழுதி இருப்பார் இந்தப் பெருங்கவிஞர்.

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தி இணையத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
Poet Mu Metha

அதைப்போல இன்றளவும் எவர்கிரீன் பாடலாக இருக்கும் ரெட்டைவால் குருவி என்ற படத்தில் இடம் பெற்று 'ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்' என்ற பாடலும் அவரின் கற்பனைச் சிறகை வானில் விரித்து இசை மீட்டப்பட்ட ஒரு இனிமையான பாடல் என்றே சொல்லலாம். ஒரு மனிதனுக்குள் காதல் வந்து விட்டால் அது எவ்வளவு உற்சாகத்தை கொடுக்கும் என்பதை சேது படத்தில் இடம்பெற்ற 'நினைச்சு நினைச்சு தவிச்ச மனசு' என்ற பாடல் மூலம் துள்ளல் இசையாக வெளிப்படுத்தி இருப்பார். இனம் புரியாத அந்த உணர்வுக்கு தன்னுடைய வரிகளால் மிகவும் நேர்த்தியாக அலங்காரம் செய்து இருப்பார் இந்தக் கவிஞர்.

சொந்தமும் சுற்றமும் சூழ கொண்டாட்டங்களில் இசைக்கப்படும் எவர்கிரீன் பாடலான சூரியவம்சம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது சிறகை விரித்து பறப்போம்' என்ற பாடலும் மு.மேத்தாவின் கைவண்ணத்தில் உருவாகியது. இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களும் தலைநகர் சென்னைக்குமான பயணம் மிகவுமே நெருக்கமாகிவிட்டது.

ஆனால், ஒரு காலகட்டங்களில் சென்னை எப்படி இருக்கும் என்ற மக்களின் மாபெரும் கற்பனை கேள்விகளுக்கு வேலைக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற 'தோட்டத்துல பாத்தி கட்டி' என்ற பாடல் மூலம்  சென்னையின் அன்றைய இயல்பு நிலையை மிகவும் அழகாக வரிகளால் விளக்கியிருப்பார் இந்த கவிஞர். அந்தப் பாடலில் இடம் பெற்ற 'சிங்காரமா ஊரு இது சென்னையினு  பேரு ஊரைச் சுத்தி ஓடுதமா கூவம் ஆறு' என்று மாபெரும் தலைநகரின் இன்றளவும் தீர்க்கப்படாத கூவம் நதியின் அவலத்தை தன் பாடலில் படம் பிடித்து காட்டி இருப்பார்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
Poet Mu Metha

மறைந்த பின்னணி பாடகி பவதாரணிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடலை எழுதியவரும் இவரே. நிலவே முகம் காட்டு திரைப்படத்தில் வரும் 'சிட்டு பறக்குது குற்றாலத்தில்', நான் சிகப்பு மனிதன் படத்தில் இடம் பெற்ற 'பெண் மானே சங்கீதம் பாடவா', இதய கோவில் படத்தில் இடம் பெற்ற 'யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ', உதயகீதம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பாடும்  நிலாவே தேன் கவிதை' என மக்கள் மனம் கவரும்  கிட்டத்தட்ட 400 பாடல்கள் வரை எழுதியுள்ளார் கவிஞர் மேத்தா. 

இலக்கியத் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட கவிஞர் மேத்தா திரைத் துறையில் எழுதிய பாடல்களை விட இலக்கியத்துறையில் அவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் என அவரது படைப்பு இன்றுவரை நீண்டு கொண்டே செல்கிறது. இலக்கியத் துறையிலும் திரைப்படத்துறையிலும் இவரது வாழ்நாள் சாதனையை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைத்துறை வித்தகர் விருதை சமீபத்தில் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com