

உலகளாவிய தேவை எக்காலத்திலும் ஒன்று உண்டு என்றால் அது சினிமா உலகில் ஒரு நல்ல கதை தான். எல்லாம் தயாரக இருக்கும். முக்கிய ஹீரோ ஹீரோயின் கால்ஷீட், இசையமைப்பாளர், மொத்த பட்ஜெட் நிதி எல்லாம் ரெடி. நல்ல கதை ஒண்ணு கிடைக்கலே படமாக்க என்பார்கள். கதைப் பஞ்சம் எப்போதும் உண்டு.
இது ஹாலிவுட் சினிமாவுக்கும் பொருந்தும். கதை கிடைக்காமல் பார்ட் 2, பார்ட் 3 எடுக்கிறார்கள். அவதார், பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன் ஸீ, இண்டியான ஜோன்ஸ், டெர்மினேட்டர்1,2, 3….தி மம்மி 1, 2, 3 இப்படியாக நிறையச் சொல்லலாம்.
இராமாயணமும் மகாபாரதமும் பலமுறை பல கால கட்டங்களில் எல்லா மொழிகளிலும் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகின்றன. இப்போதும் ஒரு மகாபாராத இராமாயண ப்ராஜெக்ட் போய்க் கொண்டு இருக்கிறது. ஒன்று ஹாலிவுட்டில்.. ஒன்று இந்தியாவில். கிருஷ்ணர், ராமர், சீதை ரோல்களில் சமீபத்திய பிரபலங்கள் வருகிறார்கள்.
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் 30.09.2022 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 2022 ஆம் ஆண்டு ரூ. 488 கோடி வசூலித்து அந்த ஆண்டின் அதிக வசூல் சாதனையை நிகழ்த்தியது என்கிறார்கள். இரண்டாம் பாகம் 28.04.2023 வெளியாகி ரூ. 345 கோடி வசூலித்து அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் கணக்கை எட்டியது.
இந்த விவரங்களை இணையத்தில் படித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி நண்பர்களிடம் வாக்கிங் போனபோது சொன்னார்.
நண்பர் நாகமுத்து சொன்னார், “எம் ஜி ஆரால் முடியவில்லை.. உலக நாயகன் கமல் முயற்சித்தார் முடியவில்லை. ஆனால் இயக்குனர் மணிரத்னம் எப்படியோ அடிச்சுப் பிடிச்சு எடுத்து விட்டார். பாராட்டணும் அவர் முயற்சியை..!”
நண்பர் கர்னல் கந்தசாமி சொன்னார். ”ஓரளவு படம் நல்லாவே வந்திருந்தது. பெரிய குறை என்று எதுவும் சொல்ல முடியாது. நிறைகள் நிறையவே இருக்கு. ஆழ்வார்க்கடியான், குந்தவை, அருள்மொழி வர்மர் வேடங்கள் கச்சிதமாக இருந்தன அந்த ஆக்டர்களுக்கு. சின்ன பழுவேட்டரையர் தான் குண்டாக இருந்தார். கதையில் மணியம் ஓவியத்தில் கரப்பான் பூச்சி மீசையுடன் காலாந்தகக் காண்டரை ஒல்லியாகப் பார்த்து இருந்தோம். நந்தினி கொஞ்சம் பூசிய மாதிரி இருந்தார். வந்தியத் தேவன் நல்லாதான் இருந்தார். ஆனால் எதுவோ மிஸ்ஸிங்”
குப்புசாமி – “சார் சும்மா பொழுது போக்குக்கு ஏ.ஐ யிடம் பொன்னியின் செல்வனை ஹாலிவுட் டைரக்டர்கள் இயக்கி இருந்தால் எப்படி இருக்கும் எனக் கேட்டேன்..”
“பலே என்ன சொல்லிச்சு.”
ஏ ஐ என்ன சொன்னது என்பதை ஒரு லிஸ்ட் போலவே சொன்னார் குப்புசாமி.
ஜேம்ஸ் கேமரூன் கைகளில் பொன்னியின் செல்வன் உருவாக்கும் கடல் பிரம்மாண்டம்
டைட்டானிக், அவதார் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தால்..
10 வருஷம் பிடிக்கும் எடுத்து முடிக்க அவருக்கு. அவர் பொன்னியின் செல்வன் கதையின் 10 ஆம் நூற்றாண்டின் சோழ வரலாற்றில் கடல் பயணங்களை முக்கியப்படுத்தி எடுப்பார். தண்ணீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவருக்கு தண்ணீர் பட்ட பாடு.
இளவல் பொன்னியின் செல்வரை மந்தாகினி பொன்னி ஆகிய காவிரி ஆற்றில் மூழ்கி காப்பாற்றுவதை விலாவரியாகக் காட்டுவார். கல்கி அவர்கள் அதை ஒரு அத்தியாயத்தில் சொல்லி இருப்பார். வந்தியத் தேவனும் பொன்னியின் செல்வனும் கடலில் புயலில் சிக்கியக் காட்சிகளை மிகுந்த பொருட்செலவில் எடுத்திருப்பார். படம் பட்ஜெட் 35 கோடி டாலர் (ரூபாயில் சுமார் 3500 கோடி) ஆகும்.
ஜுராசிக் பார்க் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கி இருந்தால்….
இசை ஜான் வில்லியம்ஸ் அதகளப் படுத்தி இருப்பார். கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவார். வந்தியத் தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலனின் நம்பிக்கைக்குரிய ஆள் ஒற்றனாக மட்டும் இல்லாமல் இண்டியான ஜோன்ஸ் டாக்டர் இண்டி போல் பிரயாணங்கள் மேற்கொள்வான். நகைச்சுவையுடன் அவனை கல்கி அவர்கள் பாணியில் காட்டுவார் ஸ்பீல்பெர்க்.
நந்தினி குந்தவை இடையே நடக்கும் அதிகார சதுரங்க நகர்வுகளை கச்சிதமாய் ரசிக்கும் படி காட்டுவார். ஜான் வில்லியம்ஸ் தஞ்சாவூர் இசையை பின்ணணியில் நாதஸ்வரம் தவில் முழங்க கோர்த்திருப்பார் லயமாக.
கோல்டன் ஐ, கேசினோ ராயல் (007 பாண்ட் படங்கள்) மற்றும் மாஸ்க் ஆஃப் ஸாரோ டைரக்டர் மார்ட்டின் கேம்ப்பெல் இயக்கியிருந்தால்…
முதலில் கதைக் களத்தை சோழப் பேரரசு மையத்தை ஒரு உலக அதிகார மையமாகக் காட்ட முயற்சிப்பார். வந்தியத் தேவன் சோழ அரசின் 007 ஆக வருவான். அடிதடி, குத்து வெட்டு தடாலடி வீரனாகக் காட்டுவார்.
அறிமுகக் காட்சியில் பழுவேட்டரையரின் முக்கிய அடியாள் ஒருவனுடன் வீராணம் நதிக்கரையில் குதிரை மேல் தடலாடி சண்டை நடக்கும். பனைமரக் கொடி தாங்கிய பழுவேட்டரையர் பாய்மரக் கலங்கள் வீராணம் ஏரியில் வருவதைக் காட்டுவார். அவர்களுடன் வந்தியத் தேவன் சண்டையிட்டு அத்தனை பாய்மரக் கலங்களையும் மூழ்கடித்து விடுவான் ஒற்றை ஆளாக.
பல கோடி டாலரில் அந்த சண்டைக்காட்சி மயிர்க் கூச்செறியும் விதத்தில் படமாக்குவார். தஞ்சை அரண்மனை துரத்தல் காட்சி பல மாட மாளிகை கூட கோபுரங்களில் கூரை மற்றும் தளங்களில் வந்தியத் தேவன் பாய்ந்து தப்பிப்பான். நந்தினி குந்தவையுடன் வந்தியத் தேவன் உரையாடும் காட்சிகளில் சாதுர்யம் இருக்கும். டயலாக் குறைவாக வைப்பார். ஏனெனில் பாண்ட் கொஞ்சம் தான் பேசுவார்.
கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்களின் சதியாலோசனைக் கூட்டத்தை வந்தியத் தேவன் மறைந்து பார்க்கும் காட்சி அவருக்கு அல்வா மாதிரி. பின்னி இருப்பார். அரை இருட்டில் நடக்கும் சதி நமக்கு அடி வயிற்றைக் கலக்கும். இசை அப்படி த்ரில்லாக கொடுப்பார்.
பாண்ட் படங்களில் வரும் அழகிய வில்லி பாத்திரம் மாதிரி நந்தினியைக் காட்ட அவருக்கு கொள்ளை ஆசை. நந்தினி கண்ணால் மிரட்டுவாள் எல்லோரையும்..ஆடியன்ஸ் உட்பட.
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் கொடூர முகங்களை படத்தில் அவர்களின் அடிதடி மூலம் காட்டி நம்மை பயமுறுத்துவார். படத்தின் ஆரம்பத்தில் ஆதித்த கரிகாலன் - பாண்டியன் போர் மிகவும் உக்கிரமாகக் காட்டுவார். அருள் மொழி வர்மரும் வந்தியத் தேவனும் கடலில் கப்பல் கவிழ்ந்து மூழ்கும் காட்சியில் நாமே தண்ணீரில் விழுந்து மூச்சுத் திணறுவது போல் இருக்கும்.
குப்புசாமி தொடர்ந்தார்…
குவெண்டின் டொரண்டினோ, ஸ்டான்லி கூப்ரிக் இவர்கள் ஸ்டைலில் எடுத்தாலும் நன்றாக இருக்கும். ஒவ்வொருவர் ஸ்டைல் ஒவ்வொரு மாதிரி.
மம்மி டைரக்டர் ஸ்டீஃபன் ஸோமர்ஸ் எடுத்தால் படத்தில் மாந்தீரீகம், பேய், பிசாசுகளை உலா வரச் செய்வார். ரவிதாசன், தேவராளன் தேவராட்டி மூலம்.
“சரி நம்ம பழைய பிரபல டைரக்டர்கள் எப்படி எடுப்பார்கள்…” நண்பர் கேட்டார்.
கே பாலச்சந்தரின் தனித்துவமான கோணத்தில் மாறும் பொன்னியின் செல்வன் உணர்ச்சிப் போராட்டம்
"பாலச்சந்தர் எடுத்திருந்தால் மந்தாகினி - வீரபாண்டியன் - சுந்தரசோழர் - நந்தினி இவர்களின் மர்மமான எளிதில் விளங்காத யாருக்கும் புரியாத ஒரு சம்பந்தம் இருப்பதே போதும் அவருக்கு.
அந்த முடிச்சை வைத்தே நூறு முடிச்சுகள் போட்டு எடுத்து விடுவார். அவருக்கு கறூப்பு வெள்ளையில் எடுப்பது தான் பிடிக்கும். என்ன செய்வது ரசிகர்கள் கலர் தானே கேட்கிறார்கள். இசை வி. குமார். படத்தோட பெயர் கூட 'ஊமை ராணியின் ஸ்வரபேதம்' என வைத்திருப்பார்.
மகாபாரதத்தில் உள்ள கிளைக் கதைகள் போல் பொன்னியின் செல்வனில் குறைந்தது இருபது படங்கள் எடுக்க விஷயங்கள் இருக்கு.
கே. எஸ். கோபால கிருஷ்ணன் எடுத்து இருந்தால் பெண் கதா பாத்திரங்கள் நீள நீள வசனங்கள் பேசுவார்கள். மொத்தக் கதையையும் கடைசியில் ஒரு காட்சியில் ஒரு பாத்திரம் சொல்லி முடிப்பதாகக் காட்டுவார். ஒரு போஸ்ட் கார்டில் இராமாயணம் எழுதுவார்களே..அது போல.
மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்து இருந்தால் கலரில் எம் ஜி ஆர், பானுமதி, தங்கவேலு, சக்கரபாணி வைத்து அலி பாபா மாதிரி எடுத்து இருப்பார். கதையை அழகாய் நகர்த்திக் காட்டுவார்.”
நண்பர் சொன்னார்.. “சான்ஸ் இல்லே.. இருந்தாலும் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்து அக்காலத்தில் எடுக்கப்பட்டு இருந்தால்”
“குறைந்தது முப்பது பாடல்கள் இருக்கும். வசந்தகோகிலம், அஸ்வத்தமா, எம். ஆர். சந்தானலட்சுமி, டி. ஆர். ராஜகுமாரி, என். எஸ். கே, மதுரம் இருப்பார்கள்.”
“டி. ஆர். ராஜகுமாரி தான் நந்தினியாக வருவார். உலகில் நந்தினிகென்றே பிறந்த ஒரே நடிகை அவர். பார்வை ஒன்றே போதுமே.”
“சண்டை போடாத சாது வந்தியத் தேவனாக பாகவதர் வருவார். என்.எஸ்.கே தான் ஆழ்வார்க்கடியான். சூப்பர் டூப்பராக ஓடி இருக்கும்.”
“ஒண்ணு நிச்சயம் சார்.. பிள்ளையார் சுழி போட்டு விட்டார் இயக்குனர் மணி ரத்னம் அவர்கள். பாருங்களேன், இராமாயணம், மகாபாரதம் போல வருங்காலங்களில் பொன்னியின் செல்வனை ஹாலிவுட், பாலிவுட் எப்படி எல்லாம் எடுப்பார்கள் என்று..நல்ல கதை எங்கே சார் கிடைக்குது..?”
திரைக்கதை அமைப்பில் உலகளாவிய கமர்ஷியல் சினிமா உத்திகள் மற்றும் ஆக்சன் பிளாட்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதோடு, கல்கியின் உன்னத படைப்பை சர்வதேசத் தரத்திலான ஸ்பை-த்ரில்லர் கோணத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை வாசகர்கள் அடைவார்கள்.