வில்லத்தனம், குணசித்திரம், நகைச்சுவை என பல கதாபாத்திரங்களில் நடிக்கும் திறமை பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று மார்ச் 26. ‘டூயட்’ முதல் ‘பொன்னியின் செல்வன்’ வரை பல்வேறு பரிமாணங்களில் பல பல குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக திரைப்பட உலகில் ராஜ நடை போடுகிறார் பிரகாஷ் ராஜ். பட்டையைக் கிளப்பும் பிரகாஷ் ராஜ் நடித்த சில மறக்க முடியாத படங்களின் பட்டியலை இங்கு காண்போம்:
'டூயட்': ரஜினியின் கண்களில் கண்ட அதே தேடலை பிரகாஷ் ராஜின் கண்களிலும் கண்டார் பாலசந்தர். 1994ல் தனது ‘டூயட்’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் பிரகாஷ் ராஜ். அட யாருப்பா இது புதுசா இருக்கான் என்று பலரும் புருவம் உயர்த்தி பிரகாஷ் ராஜை பார்த்தார்கள்.
'ஆசை': பாலசந்தர் படத்தில் பிரகாஷ் ராஜ் அறிமுகம் ஆனாலும் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது பாலச்சந்தரின் மாணவர் வசந்த் இயக்கிய ‘ஆசை’ திரைப்படம்தான். தனது மனைவியின் தங்கையை அடைய ஆசைப்படும் ஒரு மனிதன் நடந்துகொள்ளும் சைக்கோ குணத்தைச் சிறப்பாகக் காட்டியிருப்பார். கிளைமாக்ஸில் பிரகாஷ் ராஜ் நடிப்பைப் பார்த்து பாராட்டாதவர்கள் இருக்கமுடியாது.
'கல்கி': இப்படி எல்லாம் மனைவியை டார்ச்சர் செய்யும் கணவர்கள் இருக்கமுடியுமா? என்று ரசிகர்களைக் கோபப்பட வைத்த நடிப்பை பிரகாஷ் ராஜ் வெளிப்படுத்திய படம் ‘கல்கி’. 1996ல் வெளிவந்தது. திரைப்படத்தை பாலசந்தர் இயக்கி இருந்தார். பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பிரகாஷ் ராஜ். பெண்கள் மீதான வன்முறையை உடலில்தான் காட்ட வேண்டும் என்பதில்லை, வார்த்தைகளில் விஷமாகக் கொட்டமுடியும் என்பதை ஒரு சாடிஸ்ட் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து கலக்கிய திரைப்படம்.
'இருவர்': 'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண் மணியே' என்ற வைரமுத்து வரிகளை பிரகாஷ் ராஜ் உயிரோட்டமுடன் சொல்லிய படம் ‘இருவர்’. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் இருவர். வெளியான ஆண்டு 1997. இப்படத்தில் எம்.ஜி.ஆராக மோகன் லாலும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்திருந்தார்கள். ஒரு மிகப்பெரிய ஆளுமையை பிரகாஷ் ராஜ் நன்றாக உள்வாங்கி நடித்திருந்தாலும் படம் ஏனோ வெற்றி பெறவில்லை.
'கில்லி': "செல்லம்" இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் எங்கு கேட்டாலும் ‘கில்லி’ படத்தில் பிரகாஷ் ராஜ் திரிஷாவை செல்லமாக அழைத்ததுதான் நினைவுக்கு வரும். 2004ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கில்லி’ திரைப்படம் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் மூவருக்கும் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. மதுரை முத்து பாண்டியாக பிரகாஷ் ராஜ் நிறைய வில்லத்தனமும், கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் நடித்திருப்பார். ரசிகர்களால் இன்றளவும் தொலைக்காட்சிகளில் விரும்பிப் பார்க்கப்படும் படமாக இருக்கிறது ‘கில்லி’.
'மொழி': தான் தமிழில் அறிமுகம் ஆன டூயட் படத்தின் பெயரிலேயே டூயட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 2007ஆம் ஆண்டு ‘மொழி’ படத்தைத் தயாரித்தார் பிரகாஷ் ராஜ். தான் தயாரிப்பாளர் என்ற ஈகோ இல்லாமல் பிருதிவி ராஜுக்கும், ஜோதிகாவுக்கும் உறுதுணையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்தப் படத்தில் வாய் பேச முடியாத ரோலில் ஜோதிகா நடித்திருப்பார். பிரகாஷ் ராஜ் தன்னுடைய நகைச்சுவை திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்த படம் ‘மொழி’.
'காஞ்சிவரம்': அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிவரத்தில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம் 2008ல் வெளியான ‘காஞ்சிவரம்’. ப்ரியதர்ஷன் இயக்கிய இப்படத்திற்கு தேசிய விருதும் சிறந்த நடிகருக்கான விருது பிரகாஷ் ராஜ்க்கும் கிடைத்தது. வாழ்நாள் முழுவதும் பட்டு நெசவு செய்யும் ஒரு தொழிலாளி தன் மகளுக்கு ஒரு பட்டு சேலை வாங்க நடத்தும் போராட்டம்தான் இப்படம். இந்த தொழிலாளியாக பிரகாஷ் ராஜ் தன் நடிப்பால் நமக்குக் கண்ணீரை வரவழைத்துவிடுவார், இப்படம் வந்ததே தமிழ் ரசிகர்கள் பலருக்குத் தெரியாது என்பது வேதனையான விஷயம்.
'பொன்னியின் செல்வன்': பல வரலாற்றுப் படங்களில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தாலும் இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சுந்தர சோழனாக நடித்தார். கல்கி அவர்களின் எழுத்தை செல்லுலாய்ட்டில் தந்தவர் மணி ரத்தனம். நாடாளும் வயோதிக சுந்தர சோழனின் கதாபாத்திரத்துக்குச் சரியாக பொருந்தியிருந்தார் பிரகாஷ் ராஜ். வசன உச்சரிப்பிலும், கம்பீரமான நடிப்பிலும் ஒரு சோழ சக்ரவர்த்தியை கண்முன் கொண்டு வந்துவிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரகாஷ் ராஜுக்கு ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு ‘தோனி’ என்ற படத்தைத் தயாரித்து நடித்தார் பிரகாஷ் ராஜ். இந்தப் படத்திற்கான தேவை பற்றியும், தற்கால கல்வி முறை தரும் அழுத்தம் பற்றியும் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நமது கல்கி இதழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். பாலச்சந்தரின் ‘டூயட்’ முதல் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வரை தனது நடிப்பால் ஒரு பாதையை உருவாக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இன்னும் பல சாதனைகள் புரிய இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துவோம்.