
பிரஷாந்த் நடிக்கும் 55 ஆவது படம். பொதுவாக ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் புதிய படத்தை மீடியாக்கள் வழியாக அறிவிப்பார்கள். படப்பிடிப்பு முடியும் தருவாயில் பிரம்மாண்டமாக இசை வெளியிட்டு விழா நடத்துவார்கள். ஆனால் பிரஷாந்த் சிறிது வித்தியாசமாக ரசிகர்கள் முன்னிலையில் தனது 52 வது பிறந்தநாளில் தான் அடுத்து நடிக்க போகும் 55 ஆவது படத்தை பற்றி ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்து இருக்கிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு 'வைகாசி பிறந்தாச்சு' படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆன பிரஷாந்த் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார். மணிரத்னம், ஷங்கர், சுந்தர் சி, ஹரி என முன்னணி ஹீரோக்கள் பலர் இயக்கத்தில் நடித்து சாக்லேட் பாய் என்ற பெயருடன் வெள்ளித் திரையில் டாப் ஸ்டாராக வலம் வந்தார். தனது அழகு, நடனம் வழியாக ரசிகர்களை ஈரத்த பிரஷாந்த் பல்வேறு காரணங்களால் 2015 ஆம் ஆண்டிலிருந்து சினிமா விலிருந்து ஒதுங்கி இருந்தார்.
இடையில் நடித்த ஒரிரு படங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் நெருப்பிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல கடந்த 2024 ஆம் ஆண்டு அந்தகனாக எழுந்து நின்றார். பிரஷாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனே அந்தகன் படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கண் பார்வையில்லாதவராக பிரஷாந்த் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் விஜய்யுடன் இணைந்து நடித்த கோட் படமும் பிரஷாந்த்திற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இந்த படங்கள் தந்த தைரியத் தால் பிரஷாந்த் தனது அடுத்த படத்தை அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை நேற்று தனது 52 வது பிறந்தநாள் தினத்தில், சென்னை டி.நகரில் அமைந்துள்ள தனது சொந்த இடமான 'பிரஷாந்த் கோல்டன் டவர்ஸ்' என்ற இடத்தில் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து உள்ளார், பிரஷாந்த்.
"இத்தனை வருட இடைவெளி விட்டு நடிக்க வரும் எந்த ஹீரோவுக்கும் ரசிகர்கள் மத்தியில்பெரிய வரவேற்பு இருக்காது. ஆனால் நான் கம் பேக் தரும் போது பெரிய வரவேற்பை ரசிகர்கள் தந்தார்கள். என் ரசிகர்கள் அப்படியே இருக்கிறார்கள். எனவே ரசிகர்கள் முன்னிலையில் என் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுவது தான் சரியாக இருக்கும். என் அப்பா தியாகராஜன் அவர்களுக்கு நான் மகனாக பிறந்தது நான் செய்த பாக்கியம்" என தனது பிறந்தநாளில் எமோஷனலாக பேசினார் பிரஷாந்த்.
"கடந்த 2002 ஆம் ஆண்டு எனது இயக்த்தில் பிரஷாந்த் நடிப்பில் தமிழ் படம் வெளியாகி வெற்றி பெற்றது. 22 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே துள்ளல், வேகத்துடன் பிரஷாந்த் இருக்கிறார். மீண்டும் தமிழ் போல் வெற்றி படமாக பிரஷாந்த்திற்கு நான் இந்த படத்தையும் தருவேன்" என்கிறார் டைரக்டர் ஹரி.
"பிரஷாந்தை என்னை விட ரசிகர்கள் நீங்க தான் நல்லா பார்த்து கிறீங்க. பிரஷாந்த் மறுபடியும் எந்திருச்சு ஓடுவது நீங்க தரும் உற்சாகம் தான். ஒரு தகப்பனா நான் ரசிகர்களான உங்களுக்கு நன்றி சொல்கிறேன்" என்று ரசிகர்களிடம் நன்றி சொல்கிறார் அப்பா தியாகராஜன்.
இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போது பிரஷாந்த் 55 என்று பெயர் வைத்துள்ளார்கள். ஹீரோயினை பற்றி எந்த அறிவிப்பும் பட தரப்பு சொல்லாத நிலையில் ட்ராகன் படத்தில் நடித்த கயாது லோகர் இந்த படத்தில் ஹீரோயினாக இருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இது உண்மையாக இருந்தால் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் ஆகும், அழகான ஜோடியை திரையில் பார்க்கலாம். பிரஷாந்த் நடிக்கும் 55 ஆவது படம் வெற்றி படமாக அமைய வாழ்த்துவோம்.