
ஒரு மகத்தான கண்டுபிடிப்புடன் நாட்டையே மாற்றத் துடிக்கும் ஒரு இன்ஜினியர் அல்லது விஞ்ஞானி. முப்பத்து நான்கு வயதாகியும் குழந்தை இல்லாததால் செயற்கைக் கருத்தரிப்பில் குழந்தை பெற்றுக்கொள்ளக் காத்திருக்கும் அவர் மனைவி. இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். இவர்கள் மூவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பது தான் கதை.
மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல ஒரு முடிச்சாகத் தெரியும் இதை, எவ்வளவு சுவாரசியமின்றி எடுக்க முடியும் என்று முயன்று பார்த்திருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த். திரைக்கதை என்ற ஒன்றை கட்டின்றி அலையவிட்டிருக்கிறார். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் எனத் தேர்ந்த நடிகர்கள் இருந்தும் இந்த நிலை.
அமெரிக்காவில் இரண்டு பிஎச்டி முடித்து விட்டு மாற்று எரிபொருள்மூலம் நாட்டின் சுற்றுப்புறத்தையே மாற்றிவிட அரசின் உதவி கேட்டுப் போராடுகிறார் சரவணன் (மாதவன்). பார்ம் இல்லாமல் சில வருடங்களாகக் கஷ்டப்படும் அர்ஜுன் (சித்தார்த்) அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் படாத பாடு படுகிறார். அவரை ஒய்வு பெறச் சொல்லிப் போர்டும் வற்புறுத்துகிறது. ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நயன்தாரா...
தான் குழந்தை பெற்றுக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பு. செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக ஐந்து லட்சம்வரை செலவாகும் என்றாலும் தாயாக வேண்டும் என்று அவர் போராட்டம் தொடர்கிறது.
கந்து வட்டிக்காரர்களிடம் கடன், ஹவாலா, கிரிக்கெட் சூதாட்டம், அரசின் அனுமதிக்கு லஞ்சம் என்று தாறு மாறாக அலைகிறது திரைக்கதை. ஒரு கட்டத்தில் தனது லட்சியம் நிறைவேற, ஒரு தவறான முடிவை எடுக்கிறார் மாதவன். இறுதியில் என்ன ஆனது என்பது தான் படம். நல்லவராக இருந்து கெட்டவராக மாறியபின் நடிக்க வாய்ப்பு இருந்தாலும் அவர் செய்யும் செயல்களில் அழுத்தமே இல்லாமல் போகிறது மாதவனுக்கு. நயன்தாராவுடன் சண்டை போடும் ஒரு காட்சி மட்டும் விதிவிலக்கு.
சித்தார்த்துக்கு ஒரு கிரிக்கெட் வீரரின் உடல்மொழியே இல்லை. இதில் இந்தியாவிலேயே பெரிய வீரராம். பாகிஸ்தான் வீரர்களைப் பார்க்க இன்னும் பாவமாக இருக்கிறது. கிரிக்கெட் காட்சிகளில் விறுவிறுப்பு சுத்தமாக மிஸ்ஸிங். கோபமாகப் பார்க்கிறார். குழப்பமாக நடக்கிறார். யார் சொன்னாலும் கேட்கிறார். மகனைக் காணாமல் ட்ரெஸ்ஸிங் ரூமில் குலுங்கி அழும் ஒரே காட்சியில் ஓகே. மற்றபடி இயக்குனர் சொன்னபடி செய்திருக்கிறார்.
நயன்தாரா கஷ்டப்படும் மத்தியதரக் குடும்பம் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் திருத்தமாக வந்து போவதை பார்க்க அப்படித் தெரியவே இல்லை. மேக்கப் குறையாமல் அழுகிறார். மாதவனுடன் சண்டை போடுகிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் போல. சில இடங்களில் ஓகே. பல இடங்களில் மலையாள வாடை அடிக்கிறது. ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட், மோகன்ராம் போன்றவர்கள் வந்து போகிறார்கள்.
உலகமே எதிர்பார்க்கும் ஒரு கிரிக்கெட் மேட்ச். இந்தியா பாகிஸ்தான் மோதல். அதுவும் சென்னையில். கிளப் கிரிக்கெட் விளையாடுவது போல் மாலை வீட்டுக்கு வந்து காலையில் கிளம்புகிறார் சித்தார்த். சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறாராம். அடக்கடவுளே. எந்தக் காலத்தில் இருக்கிறார் இயக்குநர்.
காவல்துறையினர் இதில் என்ன செய்கிறார்கள்? ஒரு கட்டத்தில் அனைவரின் போனையும் ஒட்டுக் கேட்கிறார்கள். ஆனால் மாதவன் பேசுவதை மட்டும் சில சமயம் விட்டு விடுகிறார்கள். இது என்ன லாஜிக் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இசை சக்தி ஸ்ரீ கோபாலன். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி சாரிம்மா. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். ஒளிப்பதிவு சற்று பரவாயில்லை.
நல்ல நடிகர்கள் இருந்தால் மட்டும் போதாது. திரைக்கதையில் சற்று என்ன நன்றாகவே மெனெக்கெட்டு ஓட்டைகளை அடைத்திருந்தால் இந்தப் படம் சற்று சுமாராகவாவது இருந்திருக்கும். முடியும்போது அடப்பாவிகளா இதுக்கு எதுக்குப்பா எங்களை இரண்டேகால் மணி நேரம் பாக்க வெச்சீங்க என்று கேட்க வைக்கிறார் இயக்குனர்.
திரையரங்குகளில் வெளியாகாமல் நெட் ப்ளிக்சில் நேரடியாக வெளியாகுமாறு விற்றதில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம். அவர் தான் தயாரிப்பாளரும் கூட. நல்ல வேளை தியேட்டருக்கு வரல. இருநூறு ரூபாய் மிச்சம் என்று சொல்லும் சினிமா ரசிகர்களைச் சற்று காப்பாற்றியிருக்கிறது இந்த படம் என்பது உண்மை!