மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த விழாவில் பத்ம பூஷன் வழங்கப்பட்டன. இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும், இந்திய குடியரசு தலைவர் தலைமையில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் 5 பத்ம விபூஷன் விருதுகள், 17 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 110 பத்ம விருதுகள் என மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய கரங்களால் வழங்கினார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு இந்த உயரிய விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை பெற்றுக் கொள்ள தேமுதிக கட்சியின் பொது செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவருடைய மகன் விஜய பிரபாகரனுடன் வந்திருந்தார். கேபட்டனுக்கு வழங்கப்பட்ட விருதினை கண்கலங்கியபடி பெற்றுக்கொண்டார் பிரேமலதா.
இதற்கு முன்னதாக பத்ம பூஷன் விருது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இன்று கேப்டனுக்காக பத்ம பூஷன் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்துள்ளோம். கேப்டன் இல்லை என்கிற மிகப்பெரிய மனவலி எங்களுக்குள் இருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசால் தரக்கூடிய, இந்த மிக உயரிய விருதை வாங்குவதில் ஒட்டுமொத்த தேசிய முற்போக்கு கழகமும் பெருமை அடைகிறோம் என கூறினார். மேலும், விருது விழா முடிந்ததும் அமித்ஷா ஜி அவர்கள் வீட்டில் நைட் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனவும் தெரிவித்தார்.