இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மிசோரம். இம்மாநிலத்தில் வைக்கோல் அறுவடை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவினை, மிசோரம் மக்களின் மொழியில் ‘பாவ்ல் குட்’ என்கின்றனர். மிசோரம் மொழியில் ‘பாவ்ல்’ என்றால் ‘வைக்கோல்’ என்று பொருள்.
‘பாவ்ல் குட்’ என்றால் ‘வைக்கோல் அறுவடை திருவிழா’ என்று பொருள் கொள்ளலாம். இந்தத் திருவிழா பொதுவாக, டிசம்பரில் அறுவடை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாக இம்மாநில மக்களால் கொண்டாடப்படுகிறது.
கி.பி. 1450 முதல் 1700ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மிசோரம் மக்கள் தியாவ் நதிக்கு அருகில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்து இந்தத் திருவிழாவின் தோற்றம் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், மிசோரம் பகுதியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழை பொழியாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால், வருத்தமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய நிலங்களில் அதிக விளைச்சலைத் தர வேண்டி கடவுளை வழிபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நான்காம் ஆண்டில் அவர்கள் எதிர்பாராத அளவுக்கு விவசாய நிலங்களில் அதிக அளவிலான விளைச்சல் ஏற்பட்டது. அதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த இம்மாநில மக்கள், ஏராளமான விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், இந்த வைக்கோல் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடத் தொடங்கினர்.
மிசோரம் மாநில மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் திருவிழாவின்போது, ‘சாவ்ங்நாட்’ எனப்படும் ஒரு வித்தியாசமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தச் சடங்கின் முக்கியமான நிகழ்வாக, இறைச்சி மற்றும் முட்டை விருந்து படைக்கப்படுகிறது.
‘சாவ்ங்நாட்’ சடங்கின்போது, ஒவ்வொரு குடும்பத்தின் தாயும், அவரது குழந்தைகளும் இந்தத் திருவிழாவின் நோக்கத்திற்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்ட நினைவு மேடையில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு முதலில் தாய் தனது குழந்தைகளுக்கு இறைச்சி மற்றும் முட்டைகளை ஊட்டி மகிழ்கிறார். அதன் பின்பு, குழந்தைகள் தங்களது தாய்க்கு முட்டை மற்றும் இறைச்சியுடன் உணவளிக்கிறார்கள். இந்தச் சடங்கானது, இறைவன் இம்மக்களை குழந்தைகளாகக் கருதி உணவூட்டுவதை நினைவுகூர்வதாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.