
சமீப காலமாக சில குறிப்பிட்ட திரைப்படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகின்றது. இப்படி கடந்தாண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் 'கில்லி' திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. ரீ-ரிலீஸ் செய்யப்படும் பழைய படங்களை மீண்டும் திரையில் பார்த்து ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதை கவனித்த தயாரிப்பாளர்கள் மக்களை கவர்ந்த திரைப்படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து லாபம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நாளை (மார்ச் 14-ம்தேதி) 'M.குமரன் S/O மகாலட்சுமி' & 'ரஜினிமுருகன்' ஆகிய இரு படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மீண்டும் ரீ-ரிலீஸாகும் படங்களை பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால், இனிவரும் காலங்களில் புதுப்படங்களுக்கு பதில் பழைய படங்களையே ரீ-ரிலீஸ் செய்யும் நிலை வரும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
M.குமரன் S/O மகாலட்சுமி:
2004-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான M.குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் ரவி மோகன் கதாநாயகனாவும், அசின் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் நதியா, பிரகாஷ்ராஜ், விவேக், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கில் வெளியான ‘அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி’ என்ற படத்தினை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
கணவனை பிரிந்து மகனை வளர்க்கும் தாயின் அன்பு, அவள் படும் கஷ்டங்கள், தாய்க்காக மகன் செய்யும் செயல்கள் என மிகவும் நேர்த்தியாக இப்படத்தின் கதைக்களம் உருவாகியிருக்கும். குறிப்பாக இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் நதியாவின் காம்பினேஷன் ஒவ்வொரு காட்சியிலும் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். 10 வருட இடைவெளிக்குப் பிறகு, இது நதியாவின் மறுபிரவேசப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிகை அசின் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் பட உலகில் அறிமுகமானார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா செய்துள்ளார்.
இந்தப்படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் நாளை (14-ம்தேதி) ரீ-ரிலீஸ் செய்கின்றனர். ‘M.குமரன் S/O மகாலட்சுமி’ படம் ரீ-ரிலீஸாவதையொட்டி இயக்குனர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரஜினி முருகன்:
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய 'ரஜினி முருகன்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது.
லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.
வேலையில்லாத ஒரு இளைஞன் பணக்காரனாக வேண்டும் என்பதற்காக தனது தாத்தாவின் சொத்தை விற்க முடிவு செய்ய அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதை சமாளிக்க அவன் செய்யும் சித்து வேலைகளையும் ரசிக்கும் படி சொல்லியிருப்பார் இயக்குனர். ஒளிப்பதிவை பாலசுப்ரமணியனும், படத்தொகுப்பை விவேக் ஹர்ஷனும் கையாண்டனர். இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தை நாளை (மார்ச் 14-ம்தேதி) ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
9 வருடங்களுக்கு முன்பு வசூலை குவித்த இந்தப்படம் நாளை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் வசூலை குவிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.