

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வரும் டிசம்பர் 11ஆம் தேதி , அன்று 75 ஆவது பிறந்த நாள் வருகிறது. மேலும் இந்த ஆண்டு அவரது திரையுலக பயணத்தின் பொன்விழா ஆண்டாகவும் உள்ளது. இதை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் அன்றைய தினத்தில் மறுவெளியிடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ரஜினி படையப்பா திரைப்படம் பற்றிய தனது சுவாரசியம் மிகுந்த அனுபவங்களை X தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் தனக்கு மிகவும் பிடித்தமான கல்கியின் " பொன்னியின் செல்வன் " நாவலில் இருந்து , புகழ்பெற்ற நந்தினி கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை மனதிற்குள் உருவாக்கி வைத்திருந்தார். நந்தினி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் , அந்த கதாபாத்திரத்தில் உலக அழகி 'ஐஸ்வர்யா ராய் ' நடிப்பது தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் எண்ணினார்.
ஐஸ்வர்யா ராயின் வசீகரம் மிகுந்த கண்கள், நந்தினியின் கதாபாத்திரத்தோடு பொருந்தும் வகையில் இருக்கும் என்று ரஜினி நினைத்திருந்தார். ஆனால் , படப்பிடிப்பு குழுவினர் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ராயை இந்த கதாபாத்திரத்திற்காக அணுகியும் அவரிடம் சரியான பதில் ஏதும் வரவில்லை , இறுதியில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லாத காரணம் தெரிந்ததால் , நீலாம்பரியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் படையப்பா திரைப்படத்தில் , ரஜினியின் அப்பா கேரக்டரில் நடிக்க வைக்க நடிகர் திலகம் சிவாஜியை அணுகியுள்ளனர். ஆனால், சிவாஜி கேட்ட சம்பளம் கே.எஸ். ரவிக்குமாருக்கு ஏற்புடையதாக இல்லை. சம்பளத்திற்காக சிவாஜிக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைத்தால் , அது நமக்கு தான் கேவலம் என்று ரஜினி, கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் ரஜினிகாந்த் நேரடியாக சிவாஜி வீட்டிற்கு சென்று அவரது காலடியில் ,அவர் கேட்ட சம்பளத் தொகையை முழுமையாக வைத்துள்ளார்.
ஒரு நாள் படப்பிடிப்பின் போது சிவாஜி அவர்கள் தனியாக தனது டயலாக்குகளை மனப்பாடம் செய்வதை ரஜினிகாந்த் பார்த்துள்ளார். அப்போது சிவாஜியிடம் இந்த சிறிய வசனங்களை எல்லாம் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டுமா? என்று கேட்டபோது , அதற்கு பதில் அளித்த சிவாஜி "மணிவண்ணன் சிறப்பாக நடிக்கிறான் அவனை இந்த காட்சியில் ஓவர் டெக் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். சிவாஜி எப்போதும் தான் நடிப்பின் மீது அதிக கவனம் செலுத்துவதைக் கண்டு வியந்ததாக ரஜினி கூறியுள்ளார்.
மேலும் படத்தின் பெயரை படையப்பா என்று நான் சொன்னதும் கே.எஸ்.ரவிகுமார் அதற்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை. நான் அடிக்கடி தயானந்த சரஸ்வதியை சுவாமியை சந்தித்து ஆன்மிக விஷயங்களைப் பற்றி பேசுவேன். அவரிடம் இந்த கதையையும் தலைப்பையும் சொன்ன போது , படத்தின் பெயரும் கதையும் நன்றாக உள்ளது , படையப்பா என்பது முருகன் பெயர் என்று கூறினார். அதனால் டைட்டிலில் நான் உறுதியாக இருந்தேன் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மறுவெளியீடு செய்யப்பட உள்ள படையப்பா திரைப்படத்தில் சிவாஜி , ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் தவிர சவுந்தர்யா , செந்தில் , அப்பாஸ் , பிரித்தா, மணிவண்ணன் , வடிவுக்கரசி , லஷ்மி, ராதாரவி , ரமேஷ் கண்ணா , வாசு விக்ரம் , நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படையப்பா திரைப்படத்தின் பாடல்களும் , பின்னணி இசையும் பெரிய அளவில் வெற்றி பெற்றவை. 1999 ஆம் ஆண்டு ரஜினியின் திரையுலக வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வெளியான படையப்பா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.