40 ஆண்டுகளில் முதல்முறை: மாறுவேடம் இன்றி தியேட்டரில் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்!

வேளச்சேரி ஐமேக்ஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக படம் பார்த்த சூப்பர் ஸ்டார் நெல்சன், அனிருத் உற்சாகம்!
Rajini
Rajini jailer 2x, instagram
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

நீண்ட காலத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்துள்ள செயல், இன்றைய கவனத்தை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் -2 'திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த திரைப்படம் மாறவுள்ளது. இதுவரைக்கும் உலகம் முழுக்க ஜெயிலர் 2 திரைப்படம் ₹628 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.

விரைவில் இந்த திரைப்படம் ₹700 கோடி வசூல் என்ற மைல் கல்லை தாண்டும்போது, தமிழ் சினிமாவின் அதிக மார்க்கெட் கொண்ட கதாநாயகன், என்ற பெருமையை ரஜினி தக்க வைத்துக்கொள்வார். ரஜினிகாந்த் இதற்கு முன்னர் '2.0 , ஜெயிலர் முதல் பாகம்' திரைப்படத்தின் மூலமாக ₹600 கோடி பாக்ஸ் ஆபிஸ் என்ற உச்சத்தை தொட்டார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பது வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் உண்டு. இதை முதன் முதலாக ரஜினிகாந்த், 2.0 திரைப்படத்தின் மூலமாக உடைத்திருந்தார்.

மற்ற நடிகர்களின் இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியுள்ள நிலையில் ரஜினியின் ஜெயிலர் - 2 திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த் 40 ஆண்டுகளில் முதன்முறையாக பொதுமக்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் -2 திரைப்படத்தை கண்டு களித்தார். சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கிற்கு, நேற்று இரவு ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார்.

அவருடன் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்தும் உடன் வந்திருந்தனர். ரஜினிகாந்த் பினிக்ஸ் மாலிற்கு வந்ததும் திரைப்படத்தினை கண்டுகளித்ததும் முன்கூட்டியே எவருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ரஜினி இதற்கு முன்னர் இது போன்று திரையரங்குகளில் பொதுமக்களுடன் படம் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால், அதே நேரம் ரஜினிகாந்த் ஒரு சில திரைப்படங்களை தனது அடையாளம் தெரியாமல் மாறுவேடத்தில் வெளிமாநிலங்களில் கண்டுக்களித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jailer 2
Jailar Rajini

பெரும்பாலும் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களில் தனது நண்பர்கள் சூழ ரஜினிகாந்த் மாறுவேடத்தில் சென்று நகரை சுற்றி வருவதும் , திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டு களித்தும் உள்ளார். ஆனால், சென்னையில் இந்தமுறை மாறுவேடம் இன்றி இயல்பான தோற்றத்தில் ரஜினிகாந்த் திரையரங்கம் சென்றுள்ளார். வழக்கமாக தமிழ் சினிமா நடிகர்கள் படத்தில் வெற்றியை கொண்டாடும் வகையிலும், விளம்பரம் செய்யும் வகையிலும் திரையரங்கங்களுக்கு சென்று சில நிமிடங்கள் ரசிகர்களுடன் கலந்து உரையாடுவார்கள். ஆனால், முழுமையாக அரங்கில் அமர்ந்து திரைப்படம் பார்ப்பது இல்லை.

நடிகர்கள் திரைப்படங்களை பார்க்க ஒரு சில பிரத்தியேக திரையரங்குகளில் தங்கள் குழுவினருடன் தனியாக பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த சிறப்புக் காட்சியை காண ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படாது. நவராத்திரி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஜெயிலர் 2 திரைப்படத்தின் வசூல் அதிகரித்த நிலையில், விடுமுறை முடிந்துள்ளதால் அதன் வசூல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் வார இறுதி வந்துவிட்டதால் இந்த திரைப்படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
30 ஆண்டுகளுக்கும் மேலாக குறையாத ரஜினி வெறிக்கு என்ன காரணம்?
Rajini
logo
Kalki Online
kalkionline.com