

இன்று ஜெயிலர் 2 வெளியாகிவிட்டது. சமூக ஊடகங்களில் ஒரு பக்கம் மலர்ச்செண்டுகள், மற்றொரு பக்கம் செங்கற்கள் மாறி மாறி வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூலி படம் வெளியானபோது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது நிறைவேறாமல் போனது; படம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. லோகேஷ் கனகராஜ் அதுவரை ரசிகர்களின் டார்லிங், மறுநாள் வில்லனாகிவிட்டார். இன்று ரிலீஸ் ஆனா ஜெயிலர் 2 172-ஆவது படம். ஆனால், ஒவ்வொரு படம் வரும்போதும் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு லேசான காய்ச்சல்கூட வரலாம்.
யாரோ ஒரு விமர்சகர் சொன்னதுபோல வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு. இது அவருக்கல்லவா இருக்க வேண்டும்? பட இயக்குநர் நெல்சனுக்கல்லவா காய்ச்சல் வர வேண்டும்? இப்படி ஒரு மனநிலையை எப்படி ஒரு நடிகரால் தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க முடிகிறது? முன்பு கூட அரசியல் விளையாட்டுகளால் கட்டி வைத்திருந்தார் என்று சொல்லலாம், இப்போது அதுவும் கிடையாது. எது இவருடைய படங்களை வித்தியாசப்படுத்துகிறது?
கடந்த சில நாள்களாகச் சமூக ஊடகங்களைப் பார்த்தால் ஒன்று புலப்படுகிறது. ரசிகர்கள் அவரை மட்டும் ரசிக்கவில்லை; தங்களது வாழ்வில் பின்னோக்கிச் செல்கிறார்கள். அவருடைய படங்களை ஒவ்வொன்றாய் எடுக்கிறார்கள். அதைப் பார்த்தபோது இருந்த மனநிலை, அவர்களது வயது, ஏன் பிடித்தது என்று பட்டியலிடுகிறார்கள். முரட்டுக்காளையிலிருந்து ஜெயிலர் வரை பார்க்க முடிகிறது. அதிகம் பேசப்பட்ட படங்கள் சந்திரமுகி, ராஜா சின்ன ரோஜா, முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், தளபதி போன்ற படங்கள். எஸ்.பி. முத்துராமனிடமிருந்து வெளியே வந்து அவர் படம் செய்ய ஆரம்பித்த பிறகு வேறு விதமாகப் பார்க்கப்பட்டார்.
ரசிகர்களை விடுங்கள்; இயக்குநர்களுக்கே அவர் படம் இயக்கும்போது ரசிகத்தன்மை வந்துவிடுகிறது. சிவாஜி, சந்திரமுகி, பேட்ட போன்ற படங்களே அதற்கு உதாரணம்.
இன்றைய இயக்குநர்கள் நேற்றைய ரசிகர்கள். அவர்கள் பார்த்து வியந்த நடிகரைத் திரும்பவும் பார்க்க நினைக்கிறார்கள். காட்சிகளை அதற்கேற்ப வைக்கிறார்கள். அவரைப் பற்றிய நினைவுகள் மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று ஒவ்வொருவரும் ஒரு பிம்பம் வைத்திருக்கிறார்கள். அது கொஞ்சம் கூட மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் அதில் சற்று வித்தியாசப்பட்டார்கள். ஆனால், வசூல் இருந்தாலும் கபாலி ரஜினி ரசிகர்களுக்கு முழுத் திருப்தி தந்திருக்காது. காலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் ஏமாற்றத்தையே தந்தன.
கார்த்திக் சுப்பாராஜ் தான் மீண்டும் பழைய ரஜினியை அழைத்து வந்தார். வயதுக்கேற்ற வேடம்தான் என்றாலும் பிளாஷ்பேக்கில் அந்தத் தீனியைப் போட்டார். வசனங்கள், காட்சிகள், மேனரிசங்கள் என்று அனைத்தும் ரசிக்கத்தக்கபடி இருந்தன. தீவிர ரஜினி ரசிகர் என்று சொல்லிக்கொண்டாலும் முருகதாஸால் அவருக்கேற்ற ஒரு பாத்திரத்தை உருவாக்க முடியவில்லை. தனக்கு நேரமில்லை என்று குறிப்பிட்டார்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினி படம் பார்த்து வருகிறேன். முதல் நாளானாலும் சரி, முதல் காட்சியானாலும் சரி, அந்த டிக்கெட் எடுக்கும் வரை ஒரு பதற்றம் இருக்கும். ஏன் என்று கேட்டால் தெரியாது. "இந்த வயதில் இந்த ஓட்டம் தேவையா?" என்று திட்டு வாங்கியிருக்கிறேன்; வாங்கிக்கொண்டும் இருக்கிறேன். ஆனால், அதெல்லாம் மண்டையில் ஏறவே ஏறாது. காதுக்குள் போனால்தானே மூளைக்குள் செல்ல! அந்தக் காய்ச்சல், அந்த உணர்வு ஒரு ரஜினி ரசிகனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
இவ்வளவு வருடங்களாக அவர் படத்தைப் பார்த்து வளர்ந்திருக்கின்றனர். அவர்கள் சந்தோஷத்துக்கு அவர் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். அரசியல் காரணங்களை விடுங்கள்; அதை எப்போது ஒரு ரஜினி ரசிகன் மறந்தான் என்றே சொல்ல முடியாது. எவ்வளவு ஏமாற்றம் இருந்தாலும் அது நொடியில் போக ஒரே ஒரு வசனம் போதும்; ஒரே முறை அவரைத் திரையில் பார்த்தால் போதும்; மேடையில் பேசினால் போதும். அதுதான் அவன்; அதுதான் அவர்.
எவ்வளவு விமர்சனங்கள், தூற்றுதல்கள், தாறுமாறான பேச்சுகள்! அதுவும் சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகள்! சிலவற்றைப் படிக்கவே அசிங்கமாக இருக்கும். அப்படியொரு வெறி எப்படி அவர் மேல் தோன்றுகிறது? எது அவர்களை விரட்டுகிறது? ஏன் அவர் தோற்பதில் மனிதர்களுக்கு அப்படியொரு ஆனந்தம்? போட்டி என்பது அடுத்தவர் தோற்பதில் அல்ல, நாம் வெல்வதில் தானே இருக்கிறது? அடுத்தவரின் தோல்வி எப்படி நம்முடைய வெற்றியாக முடியும்? அவர் ஏற்கனவே சொன்னதுபோல சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.
இப்போது பாருங்கள், ஜெயிலர் 2 வெளியாகி விட்டது. இரண்டே இரண்டு ஊர்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம். ஒன்று சென்னை. இன்று மட்டும் ஆயிரம் காட்சிகளுக்கு மேல் சென்னைத் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கிறது. மதுரையில் இருநூற்றுப் பத்து காட்சிகள். மொத்தம் 950 திரைகள். இன்று அனைத்துத் திரையரங்குகளிலும் ஜெயிலர் 2 தான். இன்று பொறுத்தவரை மிகச் சில காட்சிகளைத் தவிர மற்றவை நிறைந்திருக்கின்றன. ரசிகர்கள் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது படங்களை மட்டுமல்ல, தியேட்டர்களையும் தான். ஐமேக்ஸ், எபிக் என்று இப்படித் தேடித்தேடி முதலில் பார்க்கிறார்கள். கொண்டாட்டங்கள் இருக்கக்கூடிய தியேட்டர்கள் அடுத்து. உள்ளே போனோம், விசிலடித்தோம், கைதட்டினோம் என்றெல்லாம் இருப்பது சாதாரணம். வெளியே நடக்கும் நிகழ்வுகள் ஒரு ரஜினி ரசிகனுக்கு முக்கியம். அப்படித்தான் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அது இல்லாத படங்கள் அவர்களுக்குப் பூரணத் திருப்தி தருவதில்லை.
வேட்டையன் படத்துக்குப் போகும்போது அது நடந்தது. தியேட்டர் ஃபுல்; ஆனால் கரகோஷம் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை, வெளியில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லை. எனக்கே வந்திருப்பது ரஜினி படம்தானா என்ற சந்தேகம் சில நிமிடங்களுக்கு இருந்தது. என்ன தெரிகிறது? ரஜினி படமே ஆனாலும் அது கொண்டாட்டத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். அது கதை, இயக்குநர்கள் என இன்னும் பல காரணங்களை உள்ளடக்கியது. இந்த விதத்தில் ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஜெயிலர் தக்க வைத்திருக்கிறது.
பாடல் வெளியீட்டு விழா இல்லை, அதில் அவர் ரசிகர்கள் முன் பேசவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம்.
அவர் படத்துக்கு அவர்தான் போட்டி. இப்போது 2, 1-ஐ மிஞ்ச வேண்டும்; வரவேற்பு, வருமானம் இரண்டிலும். நடக்குமா என்பது இனி தெரிந்துவிடும். இந்த ஆயிரம் கோடி கனவுகளை விட்டுத்தள்ள வேண்டும். இந்தியில் இருநூறு கோடியாவது வசூல் செய்யாமல் அது சாத்தியமே இல்லை. இந்த வசூல் ஒரு சாதாரண ரசிகனுக்கு எந்த விதத்தில் உதவப்போகிறது? இரண்டு ஃபேஸ்புக் பதிவு போடலாம், அவ்வளவே. ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடில்லை.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஒவ்வொரு படம் வரும்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் சிறு வயதில் அல்லது இளமைக் காலங்களில் அவர் படம் பார்த்த நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். இது வேறு யாருக்குச் சாத்தியப்படும்? ஒரு திரைக்கலைஞராக ஐம்பது ஆண்டுகள் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது சுலபமல்ல. அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் பிடிக்காதவர்கள் குறைவு.
அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.
கிணற்றிலிருந்து மேலே வந்த செவிட்டுத் தவளைக் கதையையும் அவரே சொல்லியிருக்கிறார்.
அவர் மேல் காட்டப்படும் எந்த வன்மமும் பொறாமையும் அவரைத் தீண்டியது இல்லை.
ஏனென்றால் அவர் வழி தனி வழி.
கடைசியாக ஒன்று சொல்லலாம்: ரஜினியாக இருப்பது கடினம்; அதைவிடக் கடினமான விஷயம் ரஜினி ரசிகனாக இருப்பதும் அதைத் தொடர்வதும்.
தலைமுறைகளைக் கடந்து ரஜினிகாந்த் எவ்வாறு ஒரு நிகரற்ற கலாச்சார நிகழ்வாகத் தொடர்கிறார் என்பதை நினைவூட்டும் ஒரு ஈர்க்கக்கூடிய கட்டுரை.