தில்லு முல்லு படத்தில் விசு எழுதிய ஒரு வசனம் 40 வருடம் கழித்து இன்றும் நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு உள்ளது என்று அதுகுறித்து அழகாக எடுத்துரைக்கிறார் நடிகர் மணிகண்டன். அவர் என்ன சொன்னார் என்று பார்ப்போமா?
நடிகர் மணிகண்டன் ஒரு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகர் என்பதோடு ஒரு சிறந்த வசன எழுத்தாளர் என்றும் கூறலாம். விக்ரம் வேதாவில் இவர் எழுதிய வசனங்கள் இன்றும் ரசிகர்களிடையே பிரபலம். அவர் தான் கலந்துக்கொள்ளும் நேர்காணல்களில் நிறைய சினிமா விமர்சனங்கள் கொடுப்பார். குறிப்பாக பழைய படங்களில் எப்படியெல்லாம் சிறப்பாக வசனம் எழுதியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறாகள், ஸ்க்ரிப்ட் முதல் ஸ்க்ரீன்ப்ளே வரை அனைத்து குறித்தும் பேசுவார்.
அந்தவகையில் ஒரு நேர்காணலில் மணிகண்டன் தில்லு முல்லு படத்தில் விசு எழுத்திய ஒரு வசனம் குறித்து பேசியதைப் பார்ப்போம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தில்லு முல்லு' திரைப்படத்தின் ஒரு முக்கியக் காட்சியில், மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை எவ்வளவு சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும் விசு கையாண்டார் என்பதுதான் மணிகண்டன் பேசிய கருத்து. நடிகை மாதவி நடித்த கதாபாத்திரத்தை, மீசை இல்லாத ஒரு இந்திரன் காதலிக்கிறார். ஆனால், அவரது தந்தையான தேங்காய் சீனிவாசன், மற்றொரு இந்திரனுடன் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். இது ஒரு எளிய காதல் போராட்டக் கதை.
விசுவின் கைவண்ணம் இங்குதான் வெளிப்படுகிறது. அவர் இதை நேரடியாக இல்லாமல், உணவு மற்றும் காய்கறி உவமைகள் மூலம் எடுத்துரைக்கிறார்.
டயலாக் ரைட்டர் விசு, இந்தப் போராட்டக் களத்தை ஒரு படி மேலே கொண்டு செல்கிறார். தேங்காய் சீனிவாசன் தன் மகளிடம், "சாப்பிடு, அந்த வெண்டைக்காய் கறியை போடு" என்று சொல்கிறார்.
ஆனால், மகள் மறுக்கிறார்: "எனக்கு வேண்டாம். எனக்கு பிடிக்கல".
இதற்குத் தந்தையின் கேள்வி: "வெண்டைக்காவுக்கு என்ன குறைச்சல்? அதுவும், அது மூஞ்சியும் கொழ கொழன்னு இருக்கும்தான். ஆனா, அவ்வளவும் மூளை. "
இந்த வசனத்தில்...
வெண்டைக்காய்: தந்தையின் விருப்பத்துக்குரிய, அறிவு நிறைந்த, ஆனால் வெளிதோற்றத்தில் சற்று அழகு குறைந்த மாப்பிள்ளையைக் குறிக்கிறது. வெண்டைக்காயின் 'கொழ கொழப்பு' வெளிப்புறத் தோற்றத்தைக் குறிக்க, அதன் 'மூளை' அறிவை குறிக்கிறது. விசுவின் சாமர்த்தியம் இங்குதான். அறிவுள்ள மாப்பிள்ளையின் மதிப்பை அவர் எடுத்துரைக்கிறார்.
மகள் இந்தக் கருத்தை மறுத்து, "சாப்பிடப் போறவள் நான். நான் முடிவு பண்றேன்" என்று தனது நிலையை தெளிவுபடுத்துகிறார்.
முடிவில், அவள் விரும்பிய மாப்பிள்ளையைப் பற்றிக் கூறும்போது, அது மற்றொரு காய்கறியாக மாறுகிறது: "எனக்கு காலிபிளவரை ரொம்ப பிடித்திருக்கு".
காலிபிளவர் - மகளுக்கு விருப்பமான, மீசை இல்லாத அந்தக் கவர்ச்சியான இந்திரனைக் குறிக்கிறது. "உன் காலிபிளவர் பத்தி எனக்கு தெரியாதா? உள்ள அவ்வளவும் புழு..." என்று தந்தை மகள் கருத்துக்கு எதிராக பேசுகிறார். வெளிப்படையாக அழகாகத் தெரிந்தாலும், உள்ளே ஒரு சிக்கலைக் கொண்டிருக்கும் என்பதன் பொருளாக இது அமைகிறது.
இவ்வாறாக, விசு அவர்கள், ஒரு திருமணப் பேச்சுவார்த்தையை, காய்கறிகளைப் பற்றிய விவாதமாக மாற்றி, கதைக்குத் தேவையான அழுத்தத்தையும் நகைச்சுவையையும் ஒருசேர வழங்கியுள்ளார். 40 வருடங்களுக்குப் பிறகும் இந்த வசனங்களின் ஆழம் நினைவுகூரப்படுவதற்கு இதுவே மிகச் சிறந்த சான்றாகும் என்று மணிகண்டன் கூறுகிறார்.