
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக்ஸ்ட் 14-ம்தேதி) உலகம் முழுவதும் வெளியான படம் ‘கூலி’. பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக, மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில், பெரிய சாதனையை நிகழ்த்தி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினியின், 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்திருந்த நிலையில் அந்த வசூலையும் தாண்டி, 'கூலி' திரைப்படம் பெரும் சாதனையை படைத்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாக இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தற்கான காரணம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த், முன்னனி நடிகர்கள் மற்றும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்துள்ளது போன்றவை இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமன்றி இந்த படத்திற்காக லேகோஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்தது முதல் இந்த படத்தை பற்றிய புதுப்புது செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருந்ததால் மக்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவை கிரிஷ் கங்காதரனும், படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் எந்த பெரிய நடிகர்களின் படங்கள் ரீலிஸ் ஆனாலும் வசூல் கிங் யார்? என்ற போட்டியில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே தான் எப்போதும் போட்டி இருக்கும்.
அந்த வகையில், தற்போது கூலி படம் வெளியான நிலையில், விஜய் நடிப்பில் வெளியான, 'லியோ' படத்தின் வசூலையும், ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் வசூலையும், வழக்கம் போல அவர்களது ரசிகர்கள் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது வெளியான ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 151 கோடி வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஆனால் 2024-ம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.148 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதன் மூலம் விஜய்யின் ‘லியோ’ படத்தின் சாதனையை ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறி எப்போதுமே ரஜினிதான் டாப் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் நிரூபித்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லியோ, கூலி ஆகிய இரண்டு படங்களையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி வெளியான நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை கூலி திரைப்படம் படைத்தது.